Published : 17 Oct 2022 06:22 PM
Last Updated : 17 Oct 2022 06:22 PM
மதுரை: கண்மாய்களையும், அதன் நீர் வரத்து கால்வாய்களையும் தூர்வாராததால் மதுரையில் கடந்த சில மாதமாக அடைமழை பெய்தும் கண்மாய்கள் நிரம்பவில்லை. மழைநீர் அனைத்தும் வைகை ஆற்றில் கலந்து வீணாக கடலில் கலக்கிறது.
வைகை ஆறும், கண்மாய்களும், குளங்களுமே கடந்த காலத்தில் மதுரையை வளப்படுத்தின. இரு போகமும் விவசாயம் செழிப்பாக நடப்பதற்கு அதுவே காரணமாக இருந்தது. மதுரையின் நகரப் பகுதியில் மட்டுமே வண்டியூர், தல்லாக்குளம், கொடிக்குளம், பீபீகுளம், கூடழகர் தெப்பக்குளம், விளாங்குடி, கரிசல்குளம், தத்தநேரி, மாரியம்மன் கோயில் தெப்பக்குளம், செல்லூர், வில்லாபுரம், அவனியாபுரம், மாடக்குளம், சொக்கிகுளம் உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட கண்மாய்கள், குளங்கள் இருந்துள்ளன.
காலப்போக்கில் விரல்விட்டு சொல்லக்கூடிய ஒரு சில கண்மாய்களை தவிர பெரும்பாலான கண்மாய்கள் அழிக்கப்பட்டு தற்போது கண்மாய்கள் பெயரிலே நகரப்பகுதிகள் அழைக்கப்படும் அவலம் உள்ளது. தற்போது மீதமுள்ள கண்மாய்களும், குளங்களும் பராமரிப்பு இல்லாமல் அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கண்மாய்கள், தெப்பக்குளங்கள் பெரும்பாலம் பொதுப்பணித்துறை, அறநிலையத்துறை வசம் இருக்கின்றன.
அதனை அந்தத் துறைகள் முறையாக பராமரித்து தூர்வாரவில்லை. நீர் வரத்து மழைநீர் கால்வாய்களை தூர்வாரி அதன் ஆக்கிரமிப்புகளையும் எடுக்கவில்லை. கண்காணிப்பு இல்லாததால் வழித்தடங்களில் நீர் வரத்து கால்வாய்கள் தனியாரால் ஆக்கிரமிக்கப்பட்டன. அதனால், நீர் வரத்து தடைப்பட்டு கண்மாய்கள் நிரம்புவது இல்லை. இந்த நிலையில் கடந்த சில மாதமாக மதுரை மாவட்டத்தில் தென் மேற்கு பருவமழை, பருவம் தவறி மழை, தற்போது வடகிழக்கு பருவமழை தொடர்ச்சியாக பெய்கிறது.
ஆனாலும், மதுரையின் பெரும்பாலான கண்மாய்கள் நிரம்பவில்லை. சாத்தையாறு அணை நிரம்பி வண்டியூர் கண்மாய்க்கு நீர் வரத்து அதிகரித்தும் அந்த கண்மாய் நிரம்பவில்லை. இந்த கண்மாய் தூர்வாரப்படாததால் கண்மாய்க்கு வரும் தண்ணீர் அப்படியே வைகை ஆறுக்கு செல்கிறது.
கே.புதூர் சூரியா நகர் அருகே உள்ள கொடிக்குளம் கண்மாய், கடந்த 10 ஆண்டாகவே நிரம்பவில்லை. இந்த கண்மாய்க்கு வரக்கூடிய நீர் வரத்து கால்வாய்கள் ஆக்கிரமிப்பால் நீர் வரத்து ஆண்டுதோறும் குறைந்து கொண்டு வருகிறது. அப்படி பெரும் மழையில் நிரம்புவதுபோல் வந்தாலும் தண்ணீர் தேங்கினால் சுற்றியிருக்கும் குடியிருப்புகளுக்கு ஆபத்து என்று கூறி அதனை இரவோடு இரவாக உடைத்துவிட்டுவிடுகிறார்கள்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட இந்த கண்மாயை உடைத்துவிட்டு மாட்டுத்தாவணி அருகே உள்ள குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது. உத்தங்குடியில் இருந்து மாட்டுத்தாவணியை நோக்கி வரும் கால்வாய்கள் மேலே பொதுப்பணித்துறை தனியாரை பாலம் கட்ட அனுமதித்துள்ளது.
அதனால், கால்வாய் குறுகி நீர் வரத்து அதிகமாகும்போது மாட்டுத்தாவணி குடியிருப்பு பகுதிகள் வெள்ளத்தில் தத்தளிப்பது தொடர்கிறது. மதுரையில் மழை பெய்யும் போதெல்லாம் பெரியார் பஸ்நிலையம், ரயில்வே நிலையம் போன்றவை தெப்பம் போல் தண்ணீர் நிரம்பி காணப்படும்.
இந்த மழை தண்ணீர் இயல்பாகவே கடந்த காலத்தில் கூடழகர் பெருமாள் கோயிலுக்கு சொந்தமாக டவுன் ஹால் ரோட்டில் உள்ள கூடழகர் பெருமாள் தெப்பக்குளத்திற்கு வரும். கோச்சடையில் இருந்து இந்த தெப்பகுளத்திற்குக் கால்வாய் வழியாக ஆண்டு முழுவதும் தண்ணீர் வந்துள்ளது. ஆனால், தற்போது ஒரு சொட்டு தண்ணீர் கூடழகர் பெரும்கோயில் தெப்பக்குளத்திற்கு வரவில்லை. வெறும் கழிவு நீர் மட்டுமே இந்த தெப்பக்குளத்தில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இந்த தெப்பக்குளத்தை சுற்றிலும் வடக்கு, தெற்கு, மேற்கு, கிழக்குப்பகுதி டவுன்ஹாலில் வணிக நிறுவனங்கள் அடர்த்தியாக காணப்படுகின்றன.
இந்த தெப்பக்குளத்திற்கு தண்ணீர் வந்தால் இந்த கடைகளுக்கு சிக்கல் ஏற்படும். அதுபோல், தெப்பக்குளத்தை சுற்றி ஆக்கிரமிப்புகள் அதிகமாகி தெப்பக்குளமும் பராமரிப்பு இல்லாமல் முட்புதர் மூடி கிடக்கிறது.
பராமரிக்க வேண்டிய இந்து அறநிலையத்துறை வேடிக்கைப்பார்க்கிறது. இந்த தெப்பக்குளம், கண்மாய்களை போலவே தற்போது மதுரையின் எஞ்சியுள்ள மற்ற கண்மாய்கள், தெப்பக்குளங்கள் நிரம்பாம்பலே உள்ளன. ஒரு சில கண்மாய்கள் மட்டுமே தண்ணீர் காணப்படுகிறது. பொதுப்பணித்துறை, மாவட்ட நிர்வாகம் இணைந்து நீர் வரத்து கால்வாய்களையும், கண்மாய்களையும் தூர்வாரி மழைநீரை சேமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT