Published : 17 Oct 2022 02:42 PM
Last Updated : 17 Oct 2022 02:42 PM
சென்னை: சென்னையில் போக்குவரத்து விதிமீறல் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்குகளில், கடந்த 6 மாதங்களில் ரூ.23 கோடி அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது.
சென்னை பெருநகர போக்குவரத்துக் காவல் துறை கடந்த மார்ச் 2018 முதல் பணமில்லா முறைக்கு மாற்றப்பட்டது. ஆரம்ப கட்டங்களில் அபராதம் செலுத்துவது நன்றாக இருந்தபோதிலும், போக்குவரத்து விதிமீறுபவர்கள் பலர் அபராதம் செலுத்தாததால், அது காலப்போக்கில் தேக்கமடைந்தது. இந்தச் சிக்கலை எதிர்கொள்ள கால் சென்டர் முறை அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்த கால் சென்டர்கள் மூலம் ஏப்ரல் 11-ம் தேதி முதல் அக்.10-ம் தேதி வரையிலான 6 மாதங்கள் அழைப்பு மையங்களிலிருந்து தொலைபேசி வாயிலாக நிலுவையில் உள்ள போக்குவரத்து விதிமீறல் வழக்குகள், சம்மந்தப்பட்ட வாகன ஓட்டிகளுக்கு தெரிவிக்கப்பட்டு ஒரு வார காலத்திற்குள் அபராதம் செலுத்த அறிவுறுத்தப்பட்டது. தவறும் பட்சத்தில் மேற்படி வழக்குகள் மெய்நிகர் நீதிமன்றங்களுக்கு அனுப்பப்படும் என்று தொலைபேசி வாயிலாக அறிவுறுத்தப்பட்டது.
இதன் மூலம் இந்த 6 மாதங்களில் 3,85,068 வழக்குகளுக்கு அபராதம் செலுத்தப்பட்டு மொத்தம் ரூ.6,01,45,160 அபராத தொகையாக மார்ச் 2019-இல் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் உட்பட பழைய வழக்குகளுக்கும் செலுத்தப்பட்டது. இம்முறையின் ஒரு பகுதியாக, குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களுக்கும் அபராதம் செலுத்துவதற்கான சிறப்பு அம்சமும் இதில் தொடங்கப்பட்டது. இதன் விளைவாக குடிபோதையில் வாகன ஓட்டுநர்களுக்கு தலா ரூ.10,000 அபராதம் விதிக்கப்பட்டதில் மொத்தம் 6,108 வழக்குகளில் ரூ.6,07,66,000 அபராதமாக விதிமீறல்களுக்கு வசூலிக்கப்பட்டுள்ளது.
இதனால் 3,86,886 பழைய வழக்குகளுக்கு ரூ.7,65,35,160/- அபராதமாகவும், புதிதாக பதிவான 5,31,687 வழக்குகளில் ரூ.15,59,75,421 அபராதமாகவும் வசூலிக்கப்பட்டுள்ளது. இதன்படி சென்னை பெருநகர போக்குவரத்துக் காவல் துறையினரால் இந்த 6 மாதங்களில் மொத்தம் 9,18,573 வழக்குகளில் ரூபாய்.23,25,10,581 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT