Last Updated : 17 Oct, 2022 05:17 AM

1  

Published : 17 Oct 2022 05:17 AM
Last Updated : 17 Oct 2022 05:17 AM

வாடகைத் தாயை வணிகமாக்குகிறதா கருத்தரிப்பு மையங்கள்?

பிரதிநிதித்துவப் படம்.

சென்னை: சென்னை உள்ளிட்ட பல நகரங்களிலும் வணிக ரீதியாக வாடகைத் தாய் மூலம் குழந்தை பெறும் போக்கு அதிகரித்து வருகிறது. சென்னையில் வாடகைத் தாய்மார்கள் ஏராளமானோர் வீடு எடுத்து தங்கவைக்கப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியானது. இதுகுறித்து புகார் தெரிவித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸார் உறுதி அளித்துள்ளனர்.

நடிகை நயன்தாரா - இயக்குநர் விக்னேஷ் சிவன் திருமணம் கடந்த ஜூன் 9-ம்தேதி நடந்தது. இந்நிலையில், தங்களுக்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்துள்ளதாக விக்னேஷ் சிவன் கடந்த 9-ம்தேதி ட்விட்டரில் தெரிவித்தார். திருமணமான நான்கே மாதங்களில் குழந்தை பிறந்ததால், அவர்கள் வாடகைத் தாய்மூலம் குழந்தை பெற்றதாக கூறப்பட்டது. இந்தியாவில் வணிக ரீதியிலான வாடகைத் தாய் முறைக்கு தடை உள்ள நிலையில், அவர்கள் விதிகளை மீறியதாகவும் விமர்சனம் எழுந்தது.

நேரில் அழைத்து விசாரணை

வாடகைத் தாய் விஷயத்தில் நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதியர் முறையாக விதிகளை பின்பற்றினரா அல்லது விதிமீறல் நடந்துள்ளதா என மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்ககம் (டிஎம்எஸ்) இணை இயக்குநர் தலைமையிலான குழுவினர் விசாரித்து வருகின்றனர். பல ஆண்டுகளாக காதலித்து வந்த நயன்தாரா, விக்னேஷ் சிவன் இருவரும் கடந்த 2016-ல் பதிவு திருமணம் செய்ததாகவும், வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற கடந்த 2021 டிசம்பரில் பதிவு செய்ததாகவும் தகவல் வெளியானது. இதுதொடர்பான ஆவணங்களை சுகாதாரத் துறை குழுவினரிடம் அவர்கள் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இருவரையும் நேரில் அழைத்து விசாரிக்க சுகாதாரத் துறை குழுவினர் முடிவு செய்துள்ளனர்.

நயன்தாரா விவகாரம் ஒருபுறம் இருக்க, தமிழகத்தில் தடையை மீறி சென்னை, திருச்சி, கோவை, நெல்லை, சேலம் உள்ளிட்ட பல மாவட்டங்களிலும் ஆங்காங்கே வாடகைத் தாய் மூலம் பலர் குழந்தை பெற்றுக் கொள்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குறிப்பாக, சென்னையில் சூளைமேடு, அரும்பாக்கம், அமைந்தகரை உள்ளிட்ட இடங்களில் செயல்படும் செயற்கை கருத்தரிப்பு மையங்கள், பெண்களை வாடகைத் தாயாக்கி, வணிக ரீதியில் குழந்தை பெற்றுக் கொடுப்பதாக பரவலாக பேசப்படுகிறது.

இதுகுறித்து சென்னையை சேர்ந்த சட்ட வல்லுநர்கள் கூறியதாவது:

பணத்துக்காக ‘தாய்’ ஆக முடியாது

வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற விரும்பும் தம்பதியர் அல்லது இருவரில் ஒருவர் குழந்தைப் பேறுக்கு தகுதியான உடல்நிலை இல்லாதவராக இருக்க வேண்டும். தவிர, பணத்துக்காக ஒரு பெண்வாடகைத் தாய் ஆக முடியாது என்பதுஉட்பட இதில் பல்வேறு சட்ட விதிகள்உள்ளன. ஆனால், பலர் சட்டத்தை மதிப்பது இல்லை. பெரும் செல்வந்தர்கள், தொழிலதிபர்கள், பிரபலங்கள், உடலமைப்பு மற்றும் அழகை பிரதானமாக கொண்டவர்கள் என பல தரப்பினரும் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெறுவதில் ஆர்வம் காட்டுகின்றனர்.

அறிவியலின் அற்புதம் அவர்களுக்கு மருத்துவ வடிவில் உதவுகிறது. மருத்துவமனை ஆய்வகத்தில் பரிசோதனைக்கு பிறகு, மனைவியின் கருமுட்டை வெளியே எடுக்கப்படும். அதில், கணவரின் உயிரணுசெலுத்தப்பட்டு, வாடகைத் தாயின் கர்ப்பப் பையில் வைக்கப்படும். தம்பதியரின் சிசு, வாடகைத் தாயின் வயிற்றில் வளரத் தொடங்கும்.

வாடகைத் தாயாக இருப்பதற்கு, கணவனால் கைவிடப்பட்டவர்கள், வறுமையில் உள்ளோர், அழகான, திடகாத்திரமான பெண்கள் ஆகியோரையே பலரும் நாடுகின்றனர். இதற்கு உடன்படும் பெண்களுக்கு லட்சங்களில் பணம் கொடுத்து, அவர்களை வாடகைத் தாயாக பயன்படுத்துகின்றனர். இதற்கு சில தனியார் கருத்தரிப்பு மையங்கள் நேரடியாகவோ, மறைமுகவோ உதவுகின்றன.

ஒரு குழந்தைக்கு ரூ.3 லட்சம்

வாடகைத் தாயாக இருப்பவர்களுக்கு தமிழகத்தில் சட்டவிரோதமாக ஒரு குழந்தைக்கு ரூ.3 லட்சம் வரை தரப்படுகிறது. மருத்துவக் குறைபாடு இல்லாமல் வாடகைக் தாயை பயன்படுத்துவோர், பணத்துக்காக வாடகைத் தாயாக இருப்பவர்கள் மீது காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதற்கிடையே, ‘தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள், கேரளா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட பெண்கள் வாடகைத் தாயாக சென்னையில் வீடு எடுத்து தங்க வைக்கப்பட்டுள்ளனர். சென்னை சூளைமேடு நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள வீட்டில் இதுபோலபலர் தங்கியுள்ளனர். இவர்கள் அனைவரும் வாடகைத் தாய்கள். அமைந்தகரையில் உள்ள தனியார் செயற்கை கருத்தரிப்பு மையத்தில் வாடகைத் தாய் சிலர் தங்கவைக்கப்பட்டுள்ளனர். விதிகளுக்கு புறம்பாக அவர்களுக்கு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன’ என்றெல்லாம் நேற்று முன்தினம் தகவல் பரவியது.

மருத்துவமனையில் விசாரணை

இதுதொடர்பாக விசாரணை நடத்தசுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டார். இதையடுத்து, மருத்துவ சேவைகள் துறை அதிகாரிகள் குழு, சம்பந்தப்பட்ட மருத்துவமனைக்கு நேற்று சென்றனர். விசாரணையில், சட்டவிரோதமாக வாடகைத் தாய் நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை என சம்பந்தப்பட்ட மருத்துவமனைகள் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டதாக தெரிகிறது.

‘‘பெண்கள் சட்டவிரோதமாக அடைக்கப்பட்டுள்ளதாக புகார் கொடுத்தால், பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.

குழந்தை பெற வாய்ப்பு இல்லாதவர்கள் மருத்துவத்தின் உதவியுடன் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெறுவதில் தவறு இல்லை. ஆனால், அதிக அளவில் பணம்கொடுத்து, வணிக ரீதியாக வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

நெருங்கிய உறவினரே வாடகை தாய்

இந்தியாவில் ‘வாடகைத் தாய் (ஒழுங்குமுறை)’ சட்டம் கடந்த 2021-ல் அமலுக்கு வந்தது. இதுகுறித்து சென்னைவடபழனியில் உள்ள ஆகாஷ் குழந்தையின்மை சிகிச்சை மையம் மற்றும் மருத்துவமனை தலைவரும், பாலியல் மருத்துவருமான டி.காமராஜ் கூறியதாவது:

திருமணம் நடந்து 5 ஆண்டுகள் ஆகியிருக்க வேண்டும். தம்பதியோ அல்லது இருவரில் ஒருவரோ குழந்தை பெற முடியாதவராக இருக்க வேண்டும். முதலில், மாவட்ட மருத்துவ வாரியம் பரிசோதனை செய்து, இந்த தம்பதியால் குழந்தை பெற முடியாது என்று சான்று தரவேண்டும். அதன் பிறகுதான் அவர்கள் வாடகைத் தாயை நாட முடியும். வாடகைத் தாயாக வருபவர் பிரதிபலன் எதிர்பார்க்காத நெருங்கிய உறவினராக இருக்க வேண்டும்.

வாடகைத் தாயாக இருக்கும் காலத்தில் அவருக்கு மருத்துவச் செலவுக்கு பணம் தரலாமே தவிர, வாடகைத் தாயாக இருப்பதற்கு பணம் கொடுக்க கூடாது. உதாரணத்துக்கு, சிறுநீரகம் போன்ற உறுப்பை தானம் கொடுப்பவர் போல கருத வேண்டும். வாடகைத் தாய்க்கான வயது 25-35 ஆக இருக்க வேண்டும். அவர்களுக்கு ஒன்றரை ஆண்டுகளுக்கு முழு மருத்துவக் காப்பீடு செய்ய வேண்டும்.

மாஜிஸ்திரேட் முன்பு பிரமாணம்

பிறக்கும் குழந்தை ஊனமாகவோ, மனவளர்ச்சி குன்றியோ இருந்தால் பெற்றோரும் ஏற்கமாட்டார்கள். வாடகைத்தாயும் கைவிட்டு விடுவார். இதை தவிர்க்க, ‘பிறக்கும் குழந்தை எப்படி இருந்தாலும் யாருடைய ஆதரவில் இருக்கவேண்டும்’ என்பதை மாஜிஸ்திரேட் முன்புபிரமாணம் எடுத்துக் கொள்ள வேண்டும்.வாடகைத் தாயை கர்ப்ப காலம் முழுவதும் நல்ல மருத்துவமனையில் வைத்து கவனிக்க வேண்டும். பிரசவத்தின்போது அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

மருத்துவ தொழில்நுட்பங்கள் வளர்ந்துள்ளதால், வாடகைத் தாயின் உயிருக்கு 99 சதவீதம் ஆபத்து இல்லை. எனினும், பிரசவத்தின்போதோ அல்லது பின்னரோ, வாடகைத் தாய்க்கு பிரச்சினை ஏற்பட்டால், அதை சமாளிக்கவே காப்பீடு செய்யப்படுகிறது.

தவிர, சட்டமும் வாடகைத் தாய்க்கு ஆதரவாகவே இருக்கிறது. அவர் தரப்பில்ஏதாவது தவறு நடந்தாலும், அவரை குற்றம்சாட்ட முடியாது. அதேநேரம், வாடகைத் தாயை நாடி செல்பவர்கள் எந்த தவறும் செய்யக் கூடாது என்று சட்டம் வலியுறுத்துகிறது. தவறு ஏதேனும்நடக்கும் பட்சத்தில், வாடகைத் தாயைநாடியவர்களே தண்டனையை எதிர்கொள்ள நேரிடும்.

இவ்வாறு அவர் கூறினார்.

வாடகைத் தாயாக இருக்கும் காலத்தில் அவருக்கு மருத்துவச் செலவுக்கு பணம் தரலாமே தவிர, வாடகைத் தாயாக இருப்பதற்கு பணம் கொடுக்க கூடாது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x