Published : 17 Oct 2022 05:03 AM
Last Updated : 17 Oct 2022 05:03 AM

சட்டப்பேரவை இன்று கூடுகிறது: எதிர்க்கட்சி துணைத் தலைவர் விவகாரத்தில் முடிவு என்ன?

தமிழக சட்டப்பேரவை (கோப்புப்படம்).

சென்னை: தமிழக சட்டப்பேரவை இன்று கூடுகிறது. எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவி தொடர்பாக ஓபிஎஸ், இபிஎஸ் இரு தரப்பும் கடிதங்கள் கொடுத்துள்ள சூழலில், இதில் பேரவைத் தலைவரின் முடிவுஎன்ன என்பது இன்று தெரியும்என எதிர்பார்க்கப்படுகிறது.

சட்டப்பேரவை விதிகள்படி ஒரு கூட்டத் தொடர் முடிந்த 6 மாதங்களுக்குள் அடுத்த கூட்டம் நடத்தப்பட வேண்டும். அந்த வகையில்,கடந்த மே மாதம் சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் நடந்த நிலையில்,சட்டப்பேரவையின் மழைக்காலக் கூட்டத் தொடர் இன்று காலை10 மணிக்கு தொடங்குகிறது.

இன்றைய கூட்டத்தில், மறைந்த முன்னாள் உறுப்பினர்கள், பிரமுகர்களுக்கு இரங்கல் குறிப்பு, இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டு, அவை தள்ளிவைக்கப்படுகிறது. தொடர்ந்து, அலுவல் ஆய்வுக் குழுக்கூட்டம் இன்று பிற்பகல், பேரவைத் தலைவர் மு.அப்பாவு தலைமையில் நடைபெறுகிறது. இதில், கூட்டத் தொடரை 20-ம் தேதிவரை நடத்த முடிவு எடுக்கப்படலாம் என தெரிகிறது.

இந்த கூட்டத்தொடரில், துணைநிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்கிறார். ஏற்கெனவே அறிவித்து, அமைச்சரவையில் விவாதித்து, முடிவு எடுத்ததன் அடிப்படையில், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவு தொடர்பான ஆறுமுகசாமி விசாரணை ஆணைய அறிக்கை, ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு சம்பவம்தொடர்பான அருணா ஜெகதீசன்ஆணைய அறிக்கை ஆகியவைமுன்வைக்கப்படுகின்றன.

இதுதவிர, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நடைபெற்ற பணிகள் குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட ஆணையத்தின் அறிக்கையும் தாக்கல் செய்யப்படுகிறது.

ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட இணையதள சூதாட்ட விளையாட்டுகளை தடை செய்யும் அவசர சட்டத்துக்கு ஆளுநர் சமீபத்தில் ஒப்புதல் அளித்தார். இந்த அவசர சட்டத்துக்கு நிரந்தர அந்தஸ்து அளிப்பதற்கான மசோதா தயாரிக்கப்பட்டு, கடந்த 14-ம் தேதி நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த மசோதா குறித்துஇந்த கூட்டத்தொடரில் விவாதித்து, ஒப்புதல் அளிக்கப்படுகிறது.

இதுதவிர, வேறு சில மசோதாக்கள், குறிப்பிட்ட விவகாரங்கள் குறித்தும் விவாதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக பேரவைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.

அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் காரணமாக, ஓபிஎஸ், இபிஎஸ் இரு அணியாக பிரிந்து செயல்படுகின்றனர். இதில்,இபிஎஸ் தரப்பினர் அதிக எம்எல்ஏக்கள் ஆதரவுடன் இருப்பதால், ஓபிஎஸ் உள்ளிட்டோரை கட்சியில் இருந்து நீக்கியதுடன், ஓபிஎஸ்வகித்த எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவியில் ஆர்.பி.உதயகுமாரை நியமித்து, அதற்கான கடிதத்தை பேரவைத் தலைவரிடம் அளித்துள்ளனர்.

அதேசமயம், தான் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக தொடர்வதால், இந்த விவகாரத்தில் தன்னைஆலோசிக்குமாறு பேரவைத் தலைவருக்கு ஓபிஎஸ்ஸும் கடிதம் அளித்திருந்தார்.

இந்நிலையில், சட்டப்பேரவை இன்று கூடுவதால், இந்த விவகாரம் சூடுபிடித்துள்ளது. எதிர்க்கட்சிதுணைத் தலைவர் விவகாரத்தில் பேரவைத் தலைவரின் முடிவு என்ன என்பது இன்று தெரியும் என எதிர்பார்க்கப்படுகிறது. அலுவல் ஆய்வுக் குழுவுக்கு பேரவைத் தலைவர் யாரை அழைக்கப் போகிறார் என்பதும் அதிமுகவினர் மத்தியில் பரபரப்பாக பேசப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x