Published : 17 Oct 2022 07:37 AM
Last Updated : 17 Oct 2022 07:37 AM

என்எஸ்சி போஸ் சாலையில் 40 ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்: சென்னை மாநகராட்சி நடவடிக்கை

சென்னை: உயர் நீதிமன்றம் அருகில்உள்ள என்எஸ்சி போஸ் சாலையில் இருந்த 40 ஆக்கிரமிப்பு கடைகளை மாநகராட்சி அதிகாரிகள் நேற்று அகற்றினர்.

இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்ற குழுக்கள் அமைக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இக்குழுக்கள் திங்கள், புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் தங்கள் மண்டலங்களில் காவல் துறை உதவியுடன் ஆக்கிரமிப்புகளை அகற்றி வருகின்றன. சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, சென்னை மாநகராட்சி, ராயபுரம் மண்டலம், என்எஸ்சி போஸ் சாலையில் இருந்த 400 ஆக்கிரமிப்புகள் ஏற்கெனவே அகற்றப்பட்டன. மேலும்,மாநகராட்சி சார்பில் ஆக்கிரமிப்பாளர்களுக்கு வேறு மாற்றுஏற்பாடுகளும் வழங்கப்பட்டுள்ளன. தற்சமயம் ஒரு சில இடங்களில் ஆக்கிரமிப்பாளர்கள் மீண்டும் நடைபாதைகளை ஆக்கிரமித்து கடைகள் அமைத்து வருவதாகப் புகார்கள் பெறப்பட்டுள்ளன.

அதன் அடிப்படையில் மாநகராட்சி மற்றும் காவல் துறைசார்பில் என்எஸ்சி போஸ் சாலையில் இருந்த நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நேற்று மேற்கொள்ளப்பட்டது. இப்பணியில் மாநகராட்சி சார்பில் ஒரு பாப் கட் இயந்திரம், 2 லாரிகள், 20 மாநகராட்சி பணியாளர்கள் மற்றும் 30 காவலர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். இதில் நடைபாதைகளை ஆக்கிரமித்து இருந்த 10 தள்ளுவண்டிக் கடைகள் மற்றும் 30 கடைகள் அகற்றப்பட்டன. எனவே, உயர் நீதிமன்ற உத்தரவுக்கு மாறாக விதிமுறைகளை மீறி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நடைபாதைகளை ஆக்கிரமிக்கும் ஆக்கிரமிப்பாளர்கள் மீது மாநகராட்சி சார்பில் சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x