Published : 17 Oct 2022 06:58 AM
Last Updated : 17 Oct 2022 06:58 AM
சென்னை: சென்னை தீவுத்திடலில் பட்டாசு விற்பனை இன்று முதல் தொடங்கஉள்ளது. 21-ம் தேதி வரை 25 சதவீத தள்ளுபடியில் பட்டாசுகள் விற்கப்பட உள்ளன.
சென்னை தீவுத்திடலில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பட்டாசு விற்பனை இன்று முதல் தொடங்க உள்ளது. இந்தபட்டாசு விற்பனையை அமைச்சர்கள் சேகர்பாபு, மதிவேந்தன் ஆகியோர் தொடங்கி வைக்க உள்ளனர். இதையொட்டி, பட்டாசு விற்பனையாளர்கள் சங்கம் சார்பில் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னைதீவுத்திடலில் நேற்று நடைபெற்றது. அப்போது பட்டாசு விற்பனையாளர்கள் சங்க ஒருங்கிணைப்பாளர் பீர் அனீஷ் கூறியதாவது: தீவுத்திடலில் எந்த கடையில் பட்டாசுகள் வாங்கினாலும் ஒரே விலையில் தான் விற்கப்படும். சிவகாசியில் உள்ள 10 முதல் 20 முன்னணி நிறுவனங்கள் இங்கு ஸ்டால் அமைத்து உள்ளன. தீபாவளி பண்டிகைக்கு முன்கூட்டியே அக்.21-ம் தேதிக்குள் பட்டாசு வாங்க வருபவர்களுக்கு பட்டாசு விலையில் இருந்து 25 சதவீத தள்ளுபடி வழங்கப்படும். கடைசி நேரத்தில் பட்டாசு வாங்க வருபவர்களுக்கு தள்ளுபடி இருக்காது.
இந்த ஆண்டு 30 சதவீதம் மட்டுமே பட்டாசு உற்பத்தி இருந்ததால், தீவுத்திடலில் 55 கடைகள் இருக்க வேண்டிய இடத்தில் 47 கடைகள் தான் போடப்பட்டுள்ளன. பொதுமக்கள் ஆன்லைனில் பட்டாசு வாங்க வேண்டாம் என தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது. அதேபோல், பில் போடாமல் பட்டாசுகளை பொதுமக்கள் வாங்க வேண்டாம். கடைகளில் பில் போட்டுவாங்கும் பட்டாசுகள் மட்டுமே தரமானதாக இருக்கும். தீவுத்திடலில், சிறப்பு பட்டாசு விற்பனையை முன்னிட்டு, கண்காணிப்பு கேமரா, உணவகங்கள், கார் பார்க்கிங் வசதிகள் போன்றவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அதேபோல், டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு உட்பட ஆன்லைன் மூலம் பணம்செலுத்தும் வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கட்டாயம் ஜிஎஸ்டி வரியுடன் தான் பட்டாசுகள் விற்பனை செய்யப்படும். தமிழகத்தில் சீன பட்டாசுகள் கிடையாது. இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT