Published : 04 Nov 2016 04:59 PM
Last Updated : 04 Nov 2016 04:59 PM
தனுஷ்கோடியில் நூறாண்டு சிறப்பு வாய்ந்த தேவாயலத்தின் சுவர் கன மழையினால் இடிந்து விழந்தது.
இந்தியாவில் இருந்து இலங்கைக்கு செல்லும் நுழைவு வாயிலாக ஆங்கிலேய ஆட்சியில் தனுஷ்கோடி துறைமுகம் 1.3.1914-ல் திறக்கப்பட்டது. இதன் ஒருபகுதியாக ஆங்கிலேயர்கள் காலத்தில் பவளப் பாறைகள் மற்றும் சுண்ணாம்பு கற்களைக் கொண்டு தனுஷ்கோடி தேவாலயம் கட்டப்பட்டது.
22.12.1964ல் தனுஷ்கோடியை தாக்கிய புயலில், ரயில் நிலையம், துறைமுகக் கட்டிடங்கள், சுங்க நிலையம் உள்ளிட்ட அனைத்துக் கட்டிடங்களும் இடிந்து தரை மட்டமானது. ஆனால் தேவாலயம் சிறிய அளவில் இடிபாடுகளுடன் தப்பியது. நூற்றாண்டு சிறப்பு மிக்க இந்த தேவாலயத்தை காண்பதற்காக தினந்தோறும் ஆயிரக்கணக்காண சுற்றுலா பயணிகள் தனுஷ்கோடி வந்து செல்கின்றனர்.
வரலாற்றுச் சின்னமான இந்த தேவாலயத்தில் உள்ள பவளப் பாறைகளையும், சுண்ணாம்புக் கற்களையும் சமூக விரோதிகள் சிலர் எடுத்து தங்களது கட்டுமானப் பணிகளுக்கு பயன்படுத்தி வந்தனர். இதனால் தனுஷ்கோடி புயலுக்குப் பின்னர் சேதமடைந்து இடிந்த நிலையில் உள்ள தேவாலயம், கோயில், மருத்துவமனை, பள்ளிக் கூடம், ரயில்வே கேபின் உள்ளிட்ட கட்டிடங்களை அதன் பழமை தன்மை மாறாமல் பராமாரித்து பாதுகாத்திடும் வகையில் ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் ரூ.3 கோடி மதிப்பில் திட்ட வரைவினை சமீபத்தில் மேற்கொண்டது.
இந்நிலையில் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த சில நாட்களுக்கு முன்பு துவங்கி மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனைத் தொடர்ந்து ராமேசுவரம் மற்றும் தனுஷ்கோடி பகுதியில் பெய்து வரும் பலத்த மழையில், புயலில் மிஞ்சிய தேவாலயத்தின் மேற்கு பக்க சுவர் வியாழக்கிழமை நள்ளிரவு இடிந்து விழுந்தது.
இதனால் தேவாலயத்தின் மீதமுள்ள பகுதிகளைப் பாதுகாக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் தனுஷ்கோடி மீனவ மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT