Published : 15 Nov 2016 10:20 AM
Last Updated : 15 Nov 2016 10:20 AM

டிஜிட்டல் தொழில்நுட்பத்தால் நலிவடைந்த ஓவியக் கலை: பரிதவிக்கும் தொழில்முறை ஓவியர்கள்

ஆதிகாலத்தில் மனிதர்களின் எண்ணங்களை வெளிப்படுத்த மொழி இல்லாதபோது, ஓவியங்களே தகவல் பரிமாற்றத்துக்கு உதவின. பின்னர், கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்த ஓவியக் கலை, மன்னர் காலத்தில் மிகச் சிறந்த கலை யாகப் போற்றப்பட்டது. எனினும், மேல்தட்டு மக்களுக்கு மட்டுமே உரியதாகக் கருதப்பட்ட இந்தக் கலை, தமிழகத்தில் சோழர் காலத்தில் அனைத்துத் தரப்பு மக்களையும் சென்றடைந்தது.

உலக அளவில் பிக்காசோ, டாவின்சி உள்ளிட்டோரின் ஓவியங் கள் மிகுந்த மதிப்பைப் பெற்றன. இந்தியாவில் ரவிவர்மா போன்ற சிறந்த ஓவியர்கள் தோன்றினர். அவர்களது ஓவியங்கள் பல மில்லி யன் டாலர்களுக்கு விற்பனையா கின. பல நாடுகளில் ஓவியங்கள் மிகப் பெரிய பொக்கிஷமாகக் கருதப்பட்டன. எனினும், புகைப் படக் கருவியின் வருகைக்குப் பின்னர், ஓவியக் கலையின் சிறப்பு சற்று மங்கத் தொடங்கியது.

தமிழகத்தைப் பொறுத்தவரை 1960-ம் ஆண்டுகளுக்குப் பிறகுதான் ஓவியங்களுக்கான புகழ் குறையத் தொடங்கியது. எனினும், பல்வேறு வகையான ஓவியர்கள், தங்களது கலைத் தொழிலைத் திறம்படத் தொடர்ந்தனர். இயற்கை மற்றும் அழகியல் சார்ந்த ஓவியங்கள் மட்டுமின்றி, தெய்வ உருவங்கள், விளம்பர ஓவியங்கள், கட்-அவுட்கள் போன்றவை ஓவியர்களுக்குப் பெரிதும் கைகொடுத்தன. திரைப் படங்களுக்கு வரையப்படும் பிரம்மாண்ட போஸ்டர்கள், நடிகர் கள், அரசியல் தலைவர்களுக்கு தயாரிக்கப்பட்ட மிகப்பெரிய அளவி லான கட்-அவுட்கள், விளம்பரத் தட்டிகள் போன்றவை ஓவியர் களுக்கு அதிக வருவாயைக் கொடுத்தன.

ஆனால், டிஜிட்டல் தொழில் நுட்பத்தின் வருகை ஓவியர்களின் வாழ்வைப் புரட்டிப்போட்டது. மிகக் குறைந்த விலையில், சிறிய அளவு முதல் மிகப் பிரம்மாண்ட அளவிலான போஸ்டர்கள், ஃபிளக்ஸ் தட்டிகள் ஆகியவை கம்ப்யூட்டர் தொழில்நுட்பத்தின் உதவியால் கிடைத்தன. இதனால், கையால் வரைந்துகொண்டிருந்த ஓவியர்கள் வாழ்வாதாரத்தை இழந் தனர்.

இதுகுறித்து தொழில்முறை ஓவியரான பிரகாஷ்(32) கூறும் போது, “மிகக் குறைந்த செலவில் ஓவியத்தை கம்ப்யூட்டர் பிரிண்ட் அவுட் எடுத்து, ரூ.10, ரூ.20-க்கு விற்றுவிடுகிறார்கள். ஒரு ஓவி யத்தை வரைய 2 நாட்கள் ஆகின் றன. சில ஓவியங்களை வரைய 2 வாரம்கூட ஆகியுள்ளது. இவ்வளவு கஷ்டப்பட்டு வரைந்த ஓவியத்துக்கு குறிப்பிட்ட விலையைச் சொல் லும்போது, மிகக் குறைந்த விலைக்குப் புகைப்படங்களும், ஓவியங்களின் கலர் பிரிண்ட்-அவுட்களும் கிடைக்கும்போது, ரூ.1,000, ரூ.2,000 கொடுத்து இவற்றை ஏன் வாங்க வேண்டும் என கேட்கிறார்கள்.

போர்டு, காகிதம், வர்ணம் என செலவு செய்தும், பல நாட்கள் பாடுபட்டும் ஓவியம் வரைந்தால், மாதக் கணக்கில் அவை விற்பதில்லை. இதனால், அதில் செய்யப்பட்ட முதலீடு முடங்குவதுடன், அன்றாட செலவுக்கே சிரமப்பட வேண்டி யுள்ளது. போஸ்டர்கள், கட்-அவுட் ஆகியவற்றை கம்ப்யூட்டர் டிஜிட்ட லில் தயார் செய்துவிடுவதால், வாழ்வாதாரத்தை இழந்து தவிக் கிறோம்” என்றார்.

கரூர் கலைச்செம்மல் எம்.எஸ்.தேவசகாயம் கலைகள், கைவினை மையத் தலைவரும், கல்வெட்டு, நாணயவியல் ஆய்வா ளருமான வி.ராஜு கூறும்போது, “ஓவியங்களில் தஞ்சாவூர் ஓவியம், மியூரல் ஓவியம், சுவர் ஓவியம், கலங்காரி ஓவியம், பாத்தி ஓவியம் என பல வகைகள் உள்ளன. வாட்டர் கலர், ஆயில் கலர் ஆகியவற்றைப் பயன்படுத்தி ஓவியங்களை வரை கிறோம். ரூ.100 முதல் ரூ.1 லட்சம் வரை ஓவியங்கள் விற்பனையாகின. ஆனால், மக்களின் ரசனை மாறி விட்டதும், டிஜிட்டல் வருகையும் தொழில்முறை ஓவியர்களை நலி வடையச் செய்துவிட்டன. அன் றாட செலவுக்கே வருமானம் இல்லாததால், வறுமையில் வாடி உயிர்விட்ட ஓவியர்களும் உண்டு.

ஓவியர்களுக்கு உதவித் தொகை

கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்க ளில் ஓவியர்களுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். ஆனால், தமிழகத்தில் ஓவியர்களின் நிலை பரிதாபத்துக்குரியது. பள்ளி களில்கூட ஓவியப் பாடத்துக்கு முக்கியத்துவம் அளிக்காமல், அந் தப் பாடவேளையை மற்ற ஆசிரி யர்கள் பயன்படுத்திக்கொள்வதும், விளையாட்டுக்குப் பயன்படுத் துவதும் வாடிக்கையாகிவிட்டது.

எனவே, அழிந்துவரும் ஓவியக் கலையை மீட்க, அரசு உதவ வேண்டும். ஓவியக் கண்காட்சிகள் நடத்தவும், நலிந்த ஓவியர்கள் மற்றும் வயதானவர்களுக்கு உதவித்தொகை வழங்கவும், ஓவியச் சந்தைகள் நடத்தவும் அரசு முன்வர வேண்டும்.

இன்ஜினீயரிங், ஃபேஷன் டெக் னாலஜி, அனிமேஷன், திரைப்ப டம் உள்ளிட்ட அனைத்துத் துறை களுக்கும் ஓவியக்கலை அடிப்படை யாக உள்ளது. ஆனால், இதன் முக்கியத்துவத்தை மக்கள் உணர் வதில்லை. இவ்வளவு முக்கியத் துவம் வாய்ந்த, பாரம்பரிய ஓவியக் கலையை மீட்டெடுக்கவும், தொழில்முறை ஓவியர்களை வாழ வைக்கவும் மக்களும், அரசும் உதவ வேண்டும் என்பதே ஓவியர்களின் எதிர்பார்ப்பு” என்றார்.





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x