Published : 17 Oct 2022 04:45 AM
Last Updated : 17 Oct 2022 04:45 AM
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழா வரும் 25-ம் தேதி தொடங்கி 31-ம் தேதி வரை நடைபெறுகிறது. வரும் 30-ம் தேதி சூரசம்ஹாரம் நடக்கிறது. கந்த சஷ்டி விழா முன்னெற்பாடுகள் குறித்து அதிகாரிகளுடனான ஆலோசனை கூட்டம் தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ், ‘‘இந்த ஆண்டு கந்த சஷ்டி விழாவில் கோயில் வளாகத்தில் தங்கி விரதமிருக்க பக்தர்களுக்கு அனுமதியில்லை’’ என்று தெரிவித்தார். அவரது இந்த அறிவிப்பு பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாவட்ட நிர்வாகத்தின் இந்த முடிவுக்கு பாஜக, இந்து முன்னணி ஆகியவை கண்டனம் தெரிவித்துள்ளன.
பாஜக கண்டனம்: இது குறித்து தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக தலைவர் ஆர்.சித்ராங்கதன் வெளியிட்டுள்ள அறிக்கை:
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆண்டு தோறும் கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் பக்தர்கள் 6 நாட்கள் விரதம் இருந்து சூரசம்ஹாரத்தை காண்பதுடன் மறுநாள் திருக்கல்யாண நிகழ்ச்சியை தரிசித்து செல்வது காலம் காலமாக நடைமுறையில் இருந்துவரும் வழக்கம்.
இந்நிலையில் கந்த சஷ்டி விழா காலங்களில் கோயில் வளாகத்தில் பக்தர்கள் தங்கியிருந்து விரதம் இருக்க அனுமதி இல்லை என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுமிகுந்த கண்டனத்துக்குரியது.
இந்த நடவடிக்கை ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமியை வழிபடும் பக்தர்கள் மனதை புண்படுத்தும் செயலாகும். எனவே தமிழக அரசும், இந்து சமய அறநிலையத்துறையும் இந்த விஷயத்தில் உடனடியாக தலையிட்டு கந்த சஷ்டி திருவிழாவில் திருச்செந்தூர் கோயில் வளாகத்தில் பக்தர்கள் தங்கியிருந்து விரதம் கடைபிடிக்க உரிய அனுமதி தர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்து முன்னணி: இந்து முன்னணி மாநில துணைத் தலைவர் ஜெயகுமார், பொதுச் செயலாளர் அரசு ராஜா, நகர பொதுச்செயலாளர் முத்துராஜ் உள்ளிட்டோர் நேற்று திருச்செந்தூர் கோயிலுக்குள் சென்று பக்தர்கள் விரதமிருக்கும் இடத்தை பார்வையிட்டனர். இது குறித்து ஜெயகுமார் கூறும்போது, கந்த சஷ்டி விழாவில் உலகம் முழுவதும் இருந்தும் முருக பக்தர்கள் கலந்து கொள்வார்கள். கோயில் உள்பிரகாரத்தில் பக்தர்கள் விரதமிருப்பது பாரம்பரியமாக நடந்து வரும் நிகழ்வு. ’
ஆனால் இந்த ஆண்டு பக்தர்கள் கோயில் உள்பிரகாரம் மற்றும் வளாகத்தில் விரதமிருக்க அனுமதியில்லை என கூறியிருப்பது மிகுந்த ஏமாற்றத்தை தருகிறது. இது தொடர்பாக பக்தர்களிடையே ஆலோசனை நடத்தி போராட்டம் நடத்தப்படும் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment