Published : 17 Oct 2022 04:55 AM
Last Updated : 17 Oct 2022 04:55 AM

விளையாட்டுகள் குறைந்துவிட்டதால் மருத்துவமனைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு: அமைச்சர் ஆதங்கம்

திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்ற மாநில இளையோர் தடகள போட்டியில், 1,500 மீட்டர் ஓட்டத்தை நேற்று தொடங்கி வைத்த அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன்.படம்: இரா.தினேஷ்குமார்.

திருவண்ணாமலை

விளையாட்டுகள் குறைந்து விட்டதால் மருத்துவமனைகளின் எண் ணிக்கை அதிகரித்துவிட்டது என இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் ஆதங்கத்துடன் தெரிவித்தார்.

திருவண்ணாமலை மாவட்ட தடகள சங்கம் மற்றும் அருணை மருத்துவக் கல்லூரி மருத்துவ மனை சார்பில் 36-வது மாநில இளையோர் தடகள போட்டியின் தொடக்க விழா திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்கில் நேற்று நடைபெற்றது. மாநில தடகள சங்க துணைத் தலைவர் மருத்துவர் எ.வ.வே.கம்பன் தலைமை வகித்தார். மாநில இளையோர் தடகள போட்டிக்கான ஜோதியை மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் ஏற்றி வைத்தார்.

மாநில இளையோர் தடகள போட்டியை தொடங்கி வைத்து சுற்றுச்சூழல் - காலநிலை மாற்றம் மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசும்போது, “குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற 36-வது தேசிய விளையாட்டு போட்டியில், தமிழகத்தில் இருந்து 380 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.

இதுவரை இல்லாத வகையில், 25 தங்கம், 22 வெள்ளி, 28 வெண்கலம் என மொத்தம் 75 பதக்கங்களை பெற்று, இந்திய அளவில் 5-வது இடத்தை பிடித்து, தமிழக வீரர், வீராங்கனைகள் சிறப்பிடம் பிடித்துள்ளனர். இதில் தடகளப் போட்டியில் மட்டும் 7 தங்கம், 6 வெள்ளி, 5 வெண்கலம் என 18 பதக்கங்களை பெற்றுள்ளனர்.

பதக்கம் பெறுவதற்காக மட்டும், விளையாடக் கூடாது. உடல் உறுதிக்காகவும் விளையாட வேண்டும். நாட்டில் வீதிகள் தோறும் மருத்துவமனைகள் உள்ளன. கடந்த காலங்களில் மருத்துவமனைகள் இல்லை. வீதிகள் தோறும் விளையாட்டு மைதானங்கள் இருந்தன. அனைத்து ஊர்கள் மற்றும் கிராமங்களிலும் எதாவது ஒரு விளையாட்டை விளையாடினோம். விளையாட்டுகள் குறைந்து விட்டதால், மருத்துவமனைகளின் எண் ணிக்கை அதிகரித்துள்ளன.

திருவண்ணாமலையில் நடை பெறும் மாநில இளையோர் தடகள போட்டியில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகள், அசாம் மாநிலத்தில் நவம்பர் 11 முதல் 15 வரை நடைபெறவுள்ள 37-வது இளையோர் தேசிய போட்டியில் பங்கேற்கவுள்ளனர்” என்றார்.

முன்னதாக அவர், தேசியக் கொடி மற்றும் தடகள சங்க கொடியை ஏற்றி வைத்து, வீரர் மற்றும் வீராங்கனைகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். இறுதியாக மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.

3,500 வீரர், வீராங்கனைகள்: வரும் 19-ம் தேதி வரை 4 நாட்கள் நடைபெறும் போட்டியில் மாநிலம் முழுவதும் இருந்து 3,500 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். 14, 16, 18 மற்றும் 20 வயதுக்கு உட்பட்டவர்கள் என 4 பிரிவுகளாக(ஆண் மற்றும் பெண்) போட்டி நடத்தப்படுகின்றன.

100 மீட்டர் முதல் 10 ஆயிரம் மீட்டர் வரையிலான ஓட்டங்கள், குண்டு மற்றும் வட்டு எறிதல், கோல் ஊன்றி தாண்டுதல், உயரம் மற்றும் நீளம் தாண்டுதல், தடை தாண்டும் ஓட்டம் உட்பட ஆண்கள் பிரிவில் 64 வகை, பெண்கள் பிரிவில் 62 வகையான போட்டிகள் நடத்தப்படுகின்றன. முதல் மூன்று இடங்களை பிடிப்பவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்படுகிறது.

இதில், சட்டப்பேரவை துணைத் தலைவர் கு.பிச்சாண்டி, எம்எல்ஏ சரவணன், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் அ.பாலமுருகன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x