Published : 16 Oct 2022 05:37 AM
Last Updated : 16 Oct 2022 05:37 AM
சென்னை: தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் நாளை தொடங்க உள்ள நிலையில் அதிமுக எம்எல்ஏக்களுடன் கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் பழனிசாமி சென்னையில் இன்று மாலை ஆலோசனை நடத்துகிறார்.
தமிழக சட்டப்பேரவை மழைக்கால கூட்டத் தொடர் நாளை தொடங்குகிறது. இந்த கூட்டத் தொடரில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் தாக்கல் செய்த அறிக்கை, தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக நீதிபதி அருணா ஜெகதீசன் தாக்கல் செய்த அறிக்கை ஆகியவை சட்டப்பேரவை கூட்டத் தொடரில் வைக்க அதிக வாய்ப்புகள் உள்ளன.
அதிமுக சார்பில் எதிர்கட்சித் துணைத் தலைவராக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரை நியமிக்க வேண்டும் என்று பழனிசாமி தரப்பில், பேரவைத் தலைவரிடம் 3 முறை கடிதம் அளிக்கப்பட்டது. ஆனால் இதுவரை ஆளுநர் எந்த முடிவும் எடுக்கவில்லை. சபை மரபுப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அப்பாவு தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் தொடங்குவது தொடர்பாகஅதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் பழனிசாமி தலைமையில், கட்சி எம்எல்ஏக்கள் கூட்டம், சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் இன்று மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது.
அதில், சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி என்ற முறையில் எழுப்பப்பட வேண்டிய கேள்விகள், தமிழகத்தின் சட்டம் - ஒழுங்கு பிரச்சினை குறித்து விவாதிக்க நேரம் கோருவது, இரு ஆணையங்கள் தாக்கல் செய்துள்ள அறிக்கைகளை சட்டப்பேரவையில் வைத்தால் அது குறித்து என்ன பேசுவது, ஓபிஎஸ் பங்கேற்றால் அதிமுக எம்எல்ஏக்கள் எப்படி நடந்துகொள்வது உள்ளிட்டவை குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக சட்டப் பேரவை மழைக்கால கூட்டத் தொடர் நாளை தொடங்குகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT