Last Updated : 17 Nov, 2016 09:43 AM

 

Published : 17 Nov 2016 09:43 AM
Last Updated : 17 Nov 2016 09:43 AM

500, 1,000 ரூபாய் நோட்டு விவகாரத்தால் தமிழக லாரிகள் வெளிமாநிலங்களில் நிறுத்தம்

வெளிமாநிலங்களுக்கு சரக்கு களை ஏற்றிச் சென்ற 20 ஆயிரத் துக்கும் மேற்பட்ட தமிழக லாரிகள், 500, 1,000 ரூபாய் நோட்டு பிரச்சினையால் வெளி மாநிலங்களில் நிறுத்தப்பட்டுள்ளன என லாரி உரிமையாளர்கள் தெரிவித்தனர்.

தமிழகத்தில் 4 லட்சத்துக்கும் மேற்பட்ட சரக்கு லாரிகள் உள்ளன. தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படும் ஜவுளி, தீப்பெட்டி, ஜவ்வரிசி உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் லாரிகள் மூலமாக குஜராத், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட வட மாநிலங்கள் பலவற்றுக்கும் எடுத்துச் செல்லப்படுகின்றன. அங்கு கிடைக்கும் பருப்பு, ஜவுளி, பழ வகைகள், மார்பிள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் தமிழகத்துக்கு கொண்டுவரப்படுகின்றன.

20 ஆயிரம் லாரிகள்

தமிழகத்தில் இருந்து சரக்குகளை வடமாநிலங்களுக்கு அனுப்பும்போது, லாரி வாடகையை ‘செக்’ மூலமாக உரிமையாளர்களுக்கு கொடுப்பது வழக்கம். வடமாநிலங்களில் சரக்குகளை லோடு எடுக்கும்போது, அங்கு உள்ள வியாபாரிகள் லாரி வாடகையை ரொக்கமாக கொடுப்பது வாடிக்கை.

இந்நிலையில், கடந்த 8-ம் தேதி நள்ளிரவு முதல் பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என பிரதமர் அறிவித்தார். இதனால் நாடு முழுவதும் பணப்புழக்கம் கடுமையாக தடைபட்டு உள்ளது. தமிழகத்தில் இருந்து வெளிமாநிலங்களுக்கு சென்ற 20 ஆயிரம் லாரிகள், அங்கிருந்து திரும்புவதற்கு டீசல் வாங்க முடியாமலும், வாடகை சரக்குகள் கிடைக்காமலும் கடந்த 6 நாட்களாக நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதுகுறித்து சேலம் மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் சென்ன கேசவன் கூறும்போது, “தமிழகத்தில் இருந்து பல்வேறு வடமாநிலங்களுக்குச் சென்ற 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட லாரிகள், அங்கிருந்து தமிழகத்துக்கு வர முடியாத நிலையில் உள்ளன. இதற்கு முக்கியக் காரணம், பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என அறிவித்ததுதான். வடமாநிலங்களில் இருந்து தமிழகத் துக்கு சரக்குகள் அனுப்புவது கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், வடமாநிலங்களுக்குச் சென்ற லாரிகளுக்கு வாடகை கிடைக்கவில்லை.

லாரிகளுக்கான டீசலை நிரப்புவதற்கு, ஓட்டுநர்களிடம் ‘பெட்ரோ கார்டு’ கொடுத்து அனுப்புவோம். டீசல் நிரப்புவதற்கு தேவையான தொகையாக ரூ.50 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை பெட்ரோல் பங்க்கில் செலுத்திவிட்டால், ‘பெட்ரோ கார்டை’ பயன்படுத்தி இந்தியாவில் எந்த இடத்திலும் குறிப்பிட்ட எண்ணெய் நிறுவன பங்க்கில் லாரிகளுக்கு டீசலை நிரப்பிக்கொள்ள முடியும்.

ஆனால், கடந்த 10-ம் தேதி முதல் பெட்ரோ கார்டுகளில் தொகையை செலுத்துவதற்கும் மத்திய அரசு தடை விதித்துவிட்டது. இதனால், வடமாநிலங்களுக்குச் சென்ற தமிழகத்தைச் சேர்ந்த 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட லாரிகள் கடந்த 7 நாட்களாக அங்கேயே நிறுத்தப்பட்டுள்ளன. லாரி டிரைவர்கள், கிளீனர்களும் தவித்து வருகின்றனர்” என்றார்.

தமிழகத்தில் இருந்து வெளிமாநிலங்களுக்கு சென்ற 20 ஆயிரம் லாரிகள், அங்கிருந்து திரும்புவதற்கு டீசல் வாங்க முடியாமலும், வாடகை சரக்குகள் கிடைக்காமலும் கடந்த 6 நாட்களாக நிறுத்தப்பட்டுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x