Published : 19 Nov 2016 11:16 AM
Last Updated : 19 Nov 2016 11:16 AM

கோவையில் ஓட்டுநர் உரிமம் இல்லாத செங்கல்சூளை வாகன ஓட்டுநர்களால் தொடர் விபத்துகள்

உரிமம் இல்லாத செங்கல்சூளை வாகன ஓட்டுநர்களால் தொடர்ந்து விபத்துகள் நேரிடுவதாகப் புகார்கள் எழுந்துள்ளன.

கோவை சின்ன தடாகம், பெரிய தடாகம், அனுவாவி சுப்பிரமணியர் கோயில் அடிவாரம், தாளியூர், நஞ்சுண்டாபுரம், பாப்பநாயக்கன்பாளையம், சோமையனூர், மாங்கரை, ஆனைகட்டி, 24 வீரபாண்டி ஊராட்சி உளளிட்ட பகுதிகளில் 350-க்கும் மேற்பட்ட செங்கல்சூளைகள் செயல்பட்டு வருகின்றன.

இவற்றில் தென்மாவட்டங்கள் மற்றும் வடமாநிலங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த சூளைகள் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் ஒன்றான ஆனைகட்டி, அட்டப்பாடி மலைகளின் அடிவாரத்தில் அமைந்துள்ளன.

அதனால், இங்கு வளமான செம்மண் பல மீட்டர் ஆழத்துக்கு அடுக்கடுக்காக தேங்கியுள்ளது. இதனால், ஒருகாலத்தில் அப்பகுதியில் விவசாயம் செழித்திருந்தது. நூற்றாண்டுகள் முன்னர் அங்கு 4, 5 செங்கல் சூளைகளே செயல்பட்டதால், மண்வளம் கெடவில்லை.

10 மீட்டர் ஆழம்

ஆனால் கடந்த 30 ஆண்டுகளில் நூற்றுக்கணக்கிலான செங்கல் சூளைகள் ஏற்பட்டன. இங்கு 3 அடி ஆழத்துக்கு மட்டுமே மண் வெட்ட அரசு அனுமதித்துள்ள நிலையில், 10 மீட்டர் ஆழத்துக்கு மண் வெட்டப்படுகிறது. இதனால் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் 35 ஆயிரம் ஏக்கர் பரப்பிலான விளைநிலங்கள் பாதிக்கப்பட்டன. இதை எதிர்த்து இயற்கை ஆர்வலர்கள் குரல்கொடுத்து வருகின்றனர்.

அதேபோல, தென் மாவட்டங்களிலிருந்து தொழி லாளர்களை குடியமர்த்துவது, அவர்களது குடும்பங்களைச் சேர்ந்த சிறுவர்களையும் பணியில் ஈடுபடச் செய்வது உள்ளிட்டவற்றில் செங்கல்சூளைகள் ஈடுபட்டதால், அவற்றின் மீது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை, செங்கல்சூளைகளில் குழந்தைத் தொழிலாளர் மீட்பு, கொத்தடிமைத் தொழிலாளர்கள் குடும்பத்தோடு மீட்பு போன்ற விஷயங்கள் வெளிவந்தன. அண்மைக்காலங்களில்தான் இந்தப் பிரச்சினைகள் சற்று ஓய்ந்துள்ளன.

இந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளாக இந்த செங்கல்சூளைகள் பயன்படுத்தும் டிராக்டர், டிப்பர் லாரிகளை ஓட்டும் டிரைவர்களில் பெரும்பாலானோருக்கு ஓட்டுநர் உரிமம் இல்லை என்றும், இதனால் விபத்துகள் நேரிடுவதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.

கடந்த வாரம் பெரிய தடாகம் அருகேயுள்ள வீரபாண்டி பிரிவில், செங்கல்சூளைக்கு மண் ஏற்றி வந்த டிப்பர் லாரி மீது, டிராக்டர் மோதியது. இதில் 2 வாகனங்களுமே கவிழ்ந்தன. இந்த விபத்தில் டிராக்டர் ஓட்டுநர், உடனிருந்தவர் ஆகியோர் பலத்த காயமடைந்தனர். டிப்பர் லாரியில் இருந்த 2 டிரைவர்களுக்கும் ஓட்டுநர் உரிமம் இல்லை. எனவே, அவர்களைக் கைது செய்ய வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தினர். இதையடுத்து, டிப்பர் லாரி ஓட்டுநர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

ஆனால், இதுபோல நேரிட்ட பல விபத்துகளில் வாகன ஓட்டுநர்கள் மீது வழக்கு பதிவு செய்வதில்லை. ஓட்டுநர் உரிமம் உள்ள வேறு நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படுகிறது. இதை காவல் அதிகாரிகள் கண்காணித்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

13 லட்சம் செங்கல்

இதுகுறித்து 24 வீரபாண்டி ஊராட்சியை சேர்ந்த கவுன்சிலர் கூறும்போது, “இங்குள்ள செங்கல்சூளை அதிபர்கள் கோடீஸ்வரர்கள். அவர்களுடன் கனிம வளம், வனம், வருவாய்த் துறை அதிகாரிகள் மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் இணக்கமாக உள்ளனர். இதனால், விதிமீறல்கள் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பதில்லை.

பெரிய தடாகம் வீரபாண்டி பிரிவு அருகே சில நாட்களுக்கு முன் நேரிட்ட விபத்தில் சிக்கிய டிராக்டர்-டிப்பர் லாரி. (கோப்பு படம்).

இதுகுறித்து 24 வீரபாண்டி ஊராட்சியை சேர்ந்த கவுன்சிலர் கூறும்போது, “இங்குள்ள செங்கல்சூளை அதிபர்கள் கோடீஸ்வரர்கள். அவர்களுடன் கனிம வளம், வனம், வருவாய்த் துறை அதிகாரிகள் மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் இணக்கமாக உள்ளனர். இதனால், விதிமீறல்கள் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பதில்லை.

செங்கல்சூளைகளுக்காக விவசாய நிலங்களில் மட்டுமின்றி, வனப் பகுதி எல்லை ஓரங்களிலும் செம்மண் வெட்டி எடுக்கப்படுகிறது. இதற்காக ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொக்லைன், டிராக்டர், லாரி போன்றவை பயன்படுத்தப்படுகின்றன.

தினமும் 4 ஆயிரம் முதல் 5 ஆயிரம் லோடு மண் வெட்டி எடுக்கப்பட்டு, சுமார் 13 லட்சம் செங்கல் உற்பத்தி செய்யப்படுகிறது.

இங்கு உற்பத்தியாகும் செங்கல், கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு, கரூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், பாலக்காடு மாவட்டங்களில் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு செங்கல் ரூ.6 முதல் ரூ7 வரையிலும், 3 ஆயிரம் கல் கொண்ட லோடு ரூ.18 ஆயிரம் முதல் ரூ.21 ஆயிரம் வரையிலும் விற்கப்படுகிறது. இவற்றில் பல விதிமீறல்கள் நடக்கின்றன.

குறிப்பாக, இங்குள்ள 350-க்கும் மேற்பட்ட சூளைகளில் 100-க்கும் குறைவான சூளைகளுக்கு மட்டுமே உரிம் உள்ளது.

உரிமம் இருந்தால், பஞ்சாயத்து, மின்சார வாரியம் உள்ளிட்டவைகளுக்கு வருவாய் கிடைக்கும். இந்த விஷயங்களை அறிந்த மக்கள் பிரதிநிதிகளில் பெரும்பாலானோர், செங்கல்சூளை வைத்துள்ளவர்களாகவோ அல்லது அதைச் சார்ந்த தொழில்களில் ஈடுபட்டுள்ளவர்களாகவோ அல்லது அவர்களது உறவினர்களாக இருப்பதால் இதை கண்டுகொள்வதில்லை.

அதேபோல, இங்கு இயங்கும் ஆயிரக்கணக்கான வாகனங்களின் ஓட்டுநர்களில் பெரும்பாலானோருக்கு ஓட்டுநர் உரிமம் இல்லை. செங்கல்சூளை வேலைக்கு வருவோர் டிப்பர் லாரி, டிராக்டர்களில் செல்வது வழக்கம். அப்போது அவர்கள் அந்த வாகனங்களை ஓட்டப் பழகுகின்றனர். பின்னர், அவர்கள் சூளைக்குள் ஓரிடத்திலிருந்து, மற்றொரு இடத்தக்கு டிப்பர், டிராக்டர்களில் மண் ஏற்றிச் செல்கின்றனர். பின்னர், பிரதான சாலைகளிலும் வாகனத்தை ஓட்டுகின்றனர். சுமார் 5 சதவீதம் பேரிடம் மட்டுமே ஓட்டுநர் உரிமம் இருக்க வாய்ப்புள்ளது. மேலும், பலர் மது அருந்திய நிலையில், வாகனம் ஓட்டுகின்றனர். அவர்களால் விபத்துகள் நேரிடுகின்றன.

அண்மையில் டிப்பர் லாரியும், டிராக்டரும் விபத்துக்குள்ளான இடத்தில், ஏற்கெனவே இருசக்கர வாகனம் மீது, செஙகல்சூளை வாகனம் மோதியதில் இளைஞர் உயிரிழந்தார்.

சோமையனூரில் சில ஆண்டுகளுக்கு முன் தொடர் விபத்துகளில் சிலர் இறந்தனர். இதையடுத்து, பொதுமக்கள் போராட்டம் நடத்தியதால், சாலையில் பல இடங்களில் வேகத்தடை அமைக்கப்பட்டது. இவ்வாறு கடந்த சில ஆண்டுகளில் 20-க்கும் மேற்பட்ட விபத்துகள் நேரிட்டுள்ளன.

விபத்து நேரிட்ட உடன் டிரைவர் தலைமறைவாகிவிடுவார். பின்னர், ஓட்டுநர் உரிமம் உள்ள ஒருவர் அந்த வாகனத்தை ஓட்டியதாக வழக்கு பதிவு செய்து விடுவார்கள். மேலும், மோசமான விபத்துகளுக்கு மட்டும்தான் இந்த நடைமுறை. சிறிய விபத்துகளின்போது, பணம் கொடுத்து, பாதிக்கப்பட்டவரை சமாதானப்படுத்திவிடுகின்றனர். இதற்கு போலீஸாரும் உடந்தையாக உள்ளனர். மேலும், சில போலீஸ்காரர்கள் செங்கல்சூளை வைத்திருப்பதும், அவர்களுக்கு சாதமாக உள்ளது.

எனவே, ஓட்டுநர் உரிமம் இல்லாதவர்களைக் கொண்டு வாகனத்தை இயக்கக் கூடாது. இது தொடர்பாக போக்குவரத்து போலீஸார் சிறப்புக் குழு அமைத்து, ஆனைகட்டி பிரதான சாலையில் கணுவாய், தடாகம் முதல் மாங்கரை வரையிலான சாலையில் செல்லும் டிராக்டர், டிப்பர் லாரிகளை நிறுத்தி, வாகன ஓட்டுநர்களிடம் உரிமத்தை சோதனையிட வேண்டும். உரிமம் இல்லாதவர்கள் மீது வழக்கு பதிவு செய்வதுடன், அந்த வாகனத்தை பறிமுதல் செய்ய வேண்டும் என்றார்.

வெறும் வதந்திதான்…

இதுகுறித்து போக்குவரத்து போலீஸார் கூறும்போது, “இங்கு இயங்கும் சிறிய வாகனங்கள் மட்டுமின்றி, பெரிய ரக வாகன டிரைவர்களிடமும் சோதனை செய்யப்படுகிறது. தடாகம் பகுதியில், குறிப்பாக செங்கல் வாகனங்களால் விபத்து ஏற்படும் போதெல்லாம், பொதுமக்கள் இதுபோல வதந்தி கிளப்புகின்றனர். நாங்கள் பலமுறை ஆய்வு செய்தோம். செங்கல்சூளை வாகனங்களில் ஓட்டுநர் உரிமம் இல்லாத டிரைவர்கள் யாருமே இருந்ததில்லை” என்றனர்.

மது அருந்திய நிலையில்…

செங்கல்சூளை உரிமையாளர் சங்க நிர்வாகி ஒருவர் கூறும்போது, “வாகன ஓட்டுநர்களில் பெரும்பாலானோர் மது அருந்திய நிலையில், கட்டுப்பாடின்றி, தாறுமாறாக வாகனம் ஓட்டுகின்றனர். லாரிகள் செல்லும்போது, சிறிய இடைவெளி கிடைத்தாலும் அதில் நுழைந்து, வேகமாக செல்லும்போதுதான் விபத்துகள் நேரிடுகின்றன. செங்கல்சூளை வாகனங்களால் மட்டும் விபத்துகள் நேரிடுவதில்லை. எனினும், செங்கல்சூளை வாகனங்களால் விபத்து ஏற்பட்டால் மட்டுமே, பிரச்சினையை பெரிதாக்குகிறார்கள். செங்கல்சூளைகளுக்காக இயக்கப்படும் வாகனங்கள், முறையான ஓட்டுநர் உரிமம் பெற்றவர்களால் மட்டுமே இயக்கப்படுகின்றன. ஓட்டுநர் உரிமம் இல்லாமல், டிப்பர் லாரி உள்ளிட்ட வாகனங்களை யாருமே ஓட்டமாட்டார்கள். அதேபோல, வீரபாண்டி பகுதியில் தற்போது 100-க்கும் குறைவான சூளைகளே உள்ளன. அதிலும், 40க்கும் மேற்பட்ட சூளைகள், பல்வேறு தொழில் நெருக்கடிகளால் தற்போது மூடப்பட்டுள்ளன” என்றார்.

50 மீட்டர் இடைவெளி…

கோவை கணுவாய் பகுதி மக்கள் கூறும்போது, “இடையர்பாளையம், கணுவாய் முதல் மாங்கரை வரையிலான சாலையில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட செங்கல் லாரிகள் செல்கன்றன. அவற்றிலிருந்து கிளம்பும் மண் தூசி சாலையை புழுதிக்காடாக மாற்றி விடுகிறது. அந்த தூசி கண்ணில் விழும்போது வாகன ஓட்டுநர் தடுமாறி, விபத்தில் சிக்குகின்றனர். மேலும், சாலையில் படிந்துள்ள செம்மண் தூசியில் இருசக்கர வாகனம் செல்லும்போது, வண்டியை சரித்து விடுகிறது. எனவே, இந்த சாலையில் வாகனங்களில் செல்வோர், செங்கல் லாரிகளையோ, செங்கல் மண் ஏற்றிய லாரிகளையோ கண்டால், 50 மீட்டருக்கு மேலே இடைவெளிவிட்டே செல்ல வேண்டியுள்ளது. அவ்வாறு பாதுகாப்பாக செல்லும்போதுகூட விபத்துகள் நேரிடுகின்றன” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x