Published : 03 Nov 2016 10:21 AM
Last Updated : 03 Nov 2016 10:21 AM
ரோஜா மலர் சாகுபடியில் தீவிரமாக ஈடுபட்டுள்ள ஓசூரைச் சேர்ந்த கணினி பொறியாளரிடம், கோவை வேளாண் பல்கலைக்கழக மாணவர்கள், ரோஜா சாகுபடி குறித்து பாடம் கற்கின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் நகரம் வண்ண மலர்களின் ராஜாவான ரோஜா மலர் சாகுபடியில் சிறந்து விளங்குகிறது. இதனால், ஓசூர் நகரத்தை ரோஜா நகரம் என்று அழைக்கின்றனர். இந்த நகரம் கடல் மட்டத்தில் இருந்து 2,883 அடி முதல் 3 ஆயிரம் அடி வரை உயரத்தில் உள்ளது. இங்கு நிலவும் மிதமான தட்பவெட்ப நிலை ரோஜா சாகுபடிக்கு சாதகமாக உள்ளது. இங்கு உள்ள வளமான செம்மண்ணில் ரோஜா செடிகள் செழித்து வளர்கின்றன.
ஓசூர் மற்றும் அதைச் சுற்றி யுள்ள பகுதிகளில் சுமார் 250 ஹெக்டேர் பரப்பளவில் ரோஜா மலர் சாகுபடி செய்யப்படுகிறது. ஒரு வருடத்துக்கு ஓர் ஏக்கரில் சுமார் 5 லட்சம் முதல் 6 லட்சம் ரோஜா மலர்கள் உற்பத்தி யாகின்றன. டச் ரோஜா (Dutch Rose), தாஜ்மஹால் ரோஜா ஆகிய வற்றை இங்கு விவசாயிகள் அதிக அளவில் பயிரிடுகின்றனர். ஓசூரில் இருந்து வெளிநாடுகளுக்கு ஆண்டுக்கு சுமார் ஒரு கோடி ரோஜா மலர்கள் ஏற்றுமதி செய்யப் படுகின்றன.
தரமான ரோஜா மலர் சாகு படியில் முன்னிலை பெற்று விளங்கும் ஓசூர் நகரம், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் மற்றும் இதர வேளாண் பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு ரோஜா மலர் சாகுபடி குறித்த தகவல் களஞ்சியமாகவும் திகழ்கிறது.
இதற்கு முக்கியக் காரணமாக ஓசூரைச் சேர்ந்த கணினி பொறியியல் பட்டதாரியான பால சிவபிரசாத்(30) என்ற இளைஞர் விளங்குகிறார். ரோஜா விவசாயத்தில் நவீன தொழில் நுட்பத்தைப் புகுத்தி அதிக மகசூல் எடுக்கும் பால சிவபிரசாத்திடம் கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக மலரியல் துறைத் தலைவர் டாக்டர் ஜவகர் தலை மையிலான மாணவர் குழு ரோஜா விவசாயம் தொடர்பாக பயிற்சி பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து பால சிவபிரசாத் கூறும்போது, ‘‘முதுநிலை கணினி பட்டதாரியான நான் பெங்களூரு நகரில் தகவல் தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றில் பொறியாளராக வேலை பார்த்து வந்தேன். ஓசூர் குடிசெட்லு கிராமத்தில் உள்ள எனது தந்தையின் ரோஜா மலர் தோட்டத்தில், 2007-ம் ஆண்டு முதல் 2 வருடங்கள் ரோஜா மலர் சாகுபடி செய்வது எப்படி என்பது குறித்து பயிற்சி பெற்றேன். ரோஜா சாகுபடியில் ஆர்வம் ஏற்பட்டதால் கணினி பொறியாளர் பணியைத் துறந்து, ரோஜா தோட்டத்தில் முழு நேர பணியாளராக மாறினேன். என்னுடைய கடின உழைப் பினால் ரோஜா மலர் உற்பத்தியும் அதிகரித்தது. இதை மற்ற விவ சாயிகளுக்கும் தெரியப்படுத்தி, சுற்றுப்பகுதிகளிலும் ரோஜா உற் பத்தியை அதிகரிக்கச் செய்தேன்.
எனது பணியை அறிந்த கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தினர், மாணவர்க ளுக்கு ரோஜா மலர் சாகுபடி குறித்து பாடம் நடத்தும்படி கேட்டுக்கொண்டனர். அதன்படி 2009-10ம் ஆண்டு முதல் மாணவ, மாணவிகளுக்குப் பாடம் நடத்தி வருகிறேன். தற்போது மதுரை, திருச்சி உட்பட பல்வேறு நகரங்களில் இருந்தும் வேளாண் பட்டதாரி மாணவர்கள் பாடம் படிக்க என்னிடம் வருகின்றனர். இது எனக்கு முழு மனநிறைவைத் தருகிறது’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT