Published : 13 Nov 2016 10:31 AM
Last Updated : 13 Nov 2016 10:31 AM

வங்கிகளில் அலைமோதும் கூட்டத்தை கட்டுப்படுத்த கிராமங்களுக்கே நேரில் சென்று பணப் பட்டுவாடா: திருவள்ளூர் மாவட்ட முன்னோடி வங்கி நடவடிக்கை

பொதுமக்கள் வங்கிகளில் குவி வதை கட்டுப்படுத்தும் விதமாக, திருவள்ளூர் மாவட்ட முன்னோடி வங்கி சார்பில், 500 வணிகத் தொடர்பாளர்கள் கிராமப் பகுதிக ளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு பணப் பட்டுவாடா நடைபெறுகிறது.

கிராமங்கள் நிறைந்த திருவள்ளூர் மாவட்டத்தில் மொத்தம் 405 வங்கிக் கிளைகள் உள்ளன. தற்போது ரூ.500, ரூ.1000 நோட்டுகள் வங்கிகளில் மாற்றப்பட்டும், டெபாசிட் செய்யப்பட்டும் வருவதால், இந்த வங்கிகளில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. இதை சமாளிக்கும் வகையிலும், கிராம மக்களை நாடி கிராமங்களுக்கே சென்று பணம் வழங்க, அனைத்து வங்கிகளுக்கும் மாவட்ட முன்னோடி வங்கி சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக திருவள்ளூர் மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் எஸ்.ஞானமுத்துவிடம் கேட்டபோது அவர் கூறியதாவது: மாவட்டம் முழுவதும் மக்களுக்கு எந்த சங்கடமும் வராமல் பணப் பரிமாற்றம் மற்றும் டெபாசிட் பணிகளை மேற்கொள்ளுமாறு அனைத்து வங்கிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாளும் இரவு 7 மணி வரை சேவை வழங்கி வருகிறோம். கணக்கு, வழக்குகளை முடிக்க இரவு 11 மணி ஆகிவிடுகிறது. சனி, ஞாயிறும் வங்கிகளுக்கு விடுமுறை இல்லை. கூட்டத்தை சமாளிக்க காலை மற்றும் பிற்பகல் நேரங்களில், வங்கிகளின் வணிகத் தொடர்பாளர்களை வங்கிக்கு அழைத்து, பொதுமக்களுக்கு விண்ணப்பங்களை பூர்த்திசெய்து வழங்குவது, ஆவணங்களை சரிபார்ப்பது போன்ற பணிகளை கொடுத்திருக்கிறோம்.

கிராம மக்களும் வங்கிகளைத் தேடி வருவதால் கூட்டம் அதிகமாகி நீண்ட வரிசையில் நிற்க வேண்டியுள்ளது. இதைத் தவிர்க்கும் வகையில், கிராம மக்களை நாடிச் சென்று, சேவை வழங்குவதற்காக மாவட்டத்திலுள்ள 500 வணிக தொடர்பாளர்களையும் மாலை நேரங்களில் கிராமங்களுக்கு அனுப்பி வருகிறோம். கிராம மக்கள் அவர்களது வங்கி கணக்கில் பணம் இருந்தால், அவர்களுக்கு அதிகபட்சமாக ரூ.2 ஆயிரம் வரை வழங்க அறிவுறுத்தியிருக்கிறோம்.

கிராம மக்களின் நிலையை கருத்தில் கொண்டு அவர்களுக்கு ரூ.100 நோட்டுகளாக வழங்கப் படுகிறது. கிராமத்தில் கள்ள நோட்டுகளை அடையாளம் காண வசதிகள் இல்லாததால், பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகளை வணிக தொடர்பாளர்கள் பெறமாட்டார்கள்.

இந்த சேவை கிராம மக்களுக்கு பயனுள்ளதாக உள்ளது. இன்னும் சில தினங்களில் அனைத்து ஏடிஎம் இயந்திரங்களும் முழு அளவில் செயல்படத் தொடங்கும் என எதிர்பார்க்கிறோம். அதன் காரணமாக திங்கள்கிழமைக்கு மேல் வங்கிகளில் மக்கள் கூட்டம் குறைய வாய்ப்புள்ளது என்று அவர் கூறினார்.

முன்னோடி வங்கி என்றால் என்ன?

பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கிகள் என மொத்தம் 45 வகையான வங்கிகள் நாட்டில் இயங்கி வருகின்றன. அதனால் ஒரு மாவட்டத்தில் எந்த வங்கி அதிக அளவில் கிளையை திறந்துள்ளதோ, அந்த வங்கி அந்த மாவட்டத்தின் முன்னோடி வங்கியாக அறிவிக்கப்படுகிறது. அவ்வாறு சென்னையில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியும், திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் இந்தியன் வங்கியும், ஈரோடு மாவட்டத்தில் கனரா வங்கியும் முன்னோடி வங்கிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த முன்னோடி வங்கி, மாவட்டத்திலுள்ள அனைத்து வங்கிகளையும் ஒருங்கிணைத்து அரசின் திட்டங்களை செயல்படுத்தும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x