Published : 15 Oct 2022 02:29 PM
Last Updated : 15 Oct 2022 02:29 PM
சென்னை: "கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் திமுக மக்களின் அவப்பெயரை சம்பாதித்துள்ளது. மக்கள், திமுக மீது கடுமையான கோபத்தில் இருக்கின்றனர். அதை திசை திருப்புவதற்கான முயற்சியாக இந்தி எதிர்ப்பை திமுக கையில் எடுத்திருக்கிறது" என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை தியாகராயநகரில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம் இந்தி திணிப்புக்கு எதிரான திமுகவின் போராட்டம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதலளித்த அவர் கூறியது: "1965 காலக்கட்டத்தில், பெரியார் அவர்கள் திமுகவின் இந்தி எதிர்ப்புப் போராட்டம் குறித்து என்ன கூறியிருக்கிறார் என்பதை அறிக்கையாக தருகிறோம். இரண்டு மூன்று காலிகள் இதை வைத்து போராட்டம் நடத்துகின்றனர் என்று பெரியார் கூறியதை இன்று அல்லது நாளை பாஜக வெளியிடும்.
திமுகவின் கபடநாகம்தான் இந்த இந்தி எதிர்ப்பு. தமிழகத்தில் இத்தனைபேர் பாஜகவில் இருக்கின்றனர். இதில் யாருக்காவது இந்தி தெரியுமா என்றால் யாருக்கும் தெரியாது. எனவே, இந்தியை யாரும் திணிக்கவில்லை. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் திமுக, மக்களின் அவப்பெயரை சம்பாதித்துள்ளது. மக்கள் திமுக மீது கடுமையான கோபத்தில் இருக்கின்றனர். அதை திசை திருப்புவதற்கான முயற்சியாக திமுக இதை கையில் எடுத்திருக்கிறதே தவிர, இது தமிழகத்தின் உண்மையான பிரச்சினையா? முதல்வர் இதுகுறித்து வாய்திறந்து சொல்ல வேண்டும்.
திமுகவினர் நடத்தும் சன் ஷைன் பள்ளியில் மூன்றாவது மொழி இந்தி இல்லையா என்று முதல்வர் சொல்லட்டும். திமுக எம்பிக்கள், எம்எல்ஏக்கள் நடத்தும் எந்தப் பள்ளிகளும் நாங்கள் இந்தியை திணிக்கவில்லை என்று சொல்லட்டும்.
ஆனால், புதிய கல்விக் கொள்கையில், மூன்றாவது விருப்ப பாடமாக இந்தியை கொடுத்துள்ளோம். அதை ஏன் முதல்வர் எதிர்க்கிறார். எனவே, முதல்வர் இதுகுறித்து பேச வேண்டும். நிலைக்குழு அறிக்கையை முதல்வர் படித்தாரா, அதில் அவ்வாறு கூறப்பட்டுள்ளதா என்பதை அவர் தெளிவுபடுத்த வேண்டும்" என்று அவர் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT