Published : 15 Oct 2022 02:00 PM
Last Updated : 15 Oct 2022 02:00 PM
சென்னை: " தமிழ்நாட்டிலுள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் நிலவும் கடுமையான செவிலியர் பற்றாக்குறையினால் நோயாளிகள் பெரிதும் பாதிக்கப்படுவது மிகுந்த வேதனை அளிக்கிறது. புதிதாகச் செவிலியர்களை நியமிக்காமல் காலம் தாழ்த்திவரும் தமிழ்நாடு அரசின் செயல் வன்மையான கண்டனத்திற்குரியது" என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: "தமிழ்நாட்டிலுள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் நிலவும் கடுமையான செவிலியர் பற்றாக்குறையினால் நோயாளிகள் பெரிதும் பாதிக்கப்படுவது மிகுந்த வேதனை அளிக்கிறது. புதிதாகச் செவிலியர்களை நியமிக்காமல் காலம் தாழ்த்திவரும் தமிழ்நாடு அரசின் செயல் வன்மையான கண்டனத்திற்குரியது.
தமிழ்நாட்டில் ஏற்கெனவே உள்ள சென்னை மருத்துவக் கல்லூரி (MMC), கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி (KMC), ஸ்டான்லி மருத்துவக் கல்லூரிகளுடன் புதிதாக 11 மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன. ஏற்கெனவே உள்ள மருத்துவக் கல்லூரிகளும் அதிக நோயாளிகளைப் பராமரிக்கும் வகையில் விரிவாக்கம் செய்யப்பட்டு நோயாளிகளுக்கான படுக்கை இடங்களும் அதிகரிக்கப்பட்டுள்ளன.
ஆனால், அதற்கேற்றவாறு மருத்துவர் மற்றும் செவிலியர் பணியிடங்கள் அதிகரிக்கப்படாமலும், காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்படாமலும் இருப்பதால் நோயாளிகள் உரிய நேரத்தில் மருத்துவம் கிடைக்கப்பெறாமல் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். மேலும், மிக அதிகமான பணிச்சுமையினால் செவிலியர்களும் உடல் மற்றும் மனச்சோர்வுக்கு ஆளாவதால் நோயாளிகளைச் சரிவரக் கவனிக்க முடியாத நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். இதனால் நோயாளிகளின் உயிருக்கே ஆபத்தான சூழலும் ஏற்படுகிறது.
ஆகவே, நோயாளிகளை உரிய நேரத்தில் பராமரித்து மருத்துவம் அளிக்கவும், செவிலியர்கள் மற்றும் மருத்துவர்கள் பணிச்சுமையைக் குறைக்கும் வகையிலும் , அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் நிலவும் செவிலியர் பற்றாக்குறையை சரிசெய்ய தமிழ்நாடு அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்" என்று அவர் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT