Published : 04 Nov 2016 08:24 AM
Last Updated : 04 Nov 2016 08:24 AM
திருநெல்வேலியில் இருந்து 40 கி.மீ. தூரத்தில் உள்ள முத்துகிருஷ்ணபேரி கிராமத்தில் ஆண்கள் கும்மியடிக்கும் விநோத வழிபாடு, 100 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது. மழை வளம், மக்கள் நலனுக்காக இந்த வழிபாடு நடத்தப்படுவதாக கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.
திருநெல்வேலி மாவட்டம், ஆலங்குளத்துக்கு அருகில் உள்ள முத்துகிருஷ்ணபேரி கிராமத்தில் உள்ள பெரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் 3-வது செவ்வாய்க்கிழமை தொடங்கி 2 நாட்கள் திருவிழா நடைபெறுகிறது. கடந்த 1-ம் தேதி இரவு இவ்வாண்டுக்கான விழா தொடங்கியது.
ஆண்கள் விரதம்
பொதுவாக அம்மன் கோயில் திருவிழாவின்போது பெண்கள் விரதம் இருந்து முளைப்பாரி இட்டு தங்களது நேர்த்திக்கடனைச் செலுத்துவார்கள். விழா நிறைவில் முளைப்பாரியை வைத்து கும்மியடித்து பெண்கள் வழிபடுவார்கள். ஆனால் முத்துகிருஷ்ணபேரியில் ஆண்கள் விரதம் இருந்து கும்மியடிப்பதுதான் விநோதம்.
இந்த விநோத நிகழ்வு நேற்று முன்தினம் இரவு இந்த கிராமத்தில் நடைபெற்றது. ஆண்கள் குறிப்பாக இளைஞர்கள் துள்ளிக் குதித்து கும்மியடித்த நிகழ்ச்சியை சுற்றுவட்டார கிராம மக்களும் திரண்டு வந்து பார்வையிட்டனர்.
சுமார் 2 மணிநேரம் நடைபெற்ற இந்த நிகழ்வின்போது அம்மன் கதையை ஊர் பெரியவர்கள் பாடலாக மெட்டுக்கட்டி பாட, அதன் தாளத்துக்கு தகுந்தாற்போன்று இளைஞர்கள் வட்டமாக சுற்றிவந்து கும்மியடித்தனர். இந்நிகழ்ச்சி முடிவுற்ற அரைமணி நேரத்தில் அப்பகுதியில் மழை பெய்து மண்ணை மட்டுமல்ல, மக்களின் மனங்களையும் குளிர்வித்தது.
பஞ்சத்தை தீர்க்க வழிபாடு
இந்த கும்மியடி நிகழ்ச்சியில் பல ஆண்டுகளாக பங்கேற்றுவரும் உ.ரா.கடற்கரை(70) என்பவர் கூறும்போது, “இந்த கிராமத்தில் 100 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே ஆண்கள் கும்மியடிக்கும் வழிபாடு நடைபெற்று வருகிறது. அப்போது இந்த கிராமத்தில் கடும் பஞ்சம் நிலவியிருக்கிறது. மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில், அம்மன் கோயில் திருவிழாவின்போது மழை வேண்டி மக்கள் பூஜைகளைச் செய் தனர். அப்போது பெண்களுக்குப் பதிலாக ஆண்கள் கும்மியடித்து வழிபாடு நடத்த ஊர் பெரியவர்கள் முடிவு செய்திருக்கின்றனர். அவ்வாறு ஆண்கள் கும்மியடித்து வழிபாடு செய்ததால் மழை பெய்து வளம் சேர்த்திருக்கிறது. அதன் தொடர்ச்சியாகவே ஆண்டுதோறும் இந்த வழிபாடு இங்கு நடைபெறுகிறது. மழை வளம் வேண்டியும், மக்கள் நலம் பெறவேண்டும் என்ற வேண்டுதலை முன்வைத்தும் இந்த வழிபாடு நடத்தப்படுகிறது” என்றார்.
இளைஞர்கள் ஆர்வம்
கும்மியடி நிகழ்வில் பங்கேற்ற மணிகண்டன்(38) என்பவர் கூறும்போது, “கடந்த 10 ஆண்டுகளாக இதில் பங்கேற்கிறேன். முன்பெல்லாம் 40 முதல் 50 வயதுவரை உள்ள ஆண்கள் மட்டுமே கும்மியடி நிகழ்ச்சியில் பங்கேற்றனர். தற்போது இளைஞர்களும் அதிக அளவில் பங்கேற்கின்றனர். இதற்காக 40 நாட்கள் விரதம் கடைபிடிப்போம்.
கும்மியடி தெரிந்த பெரியவர் களைக்கொண்டு இளைஞர்களுக்கு 10 நாட்களுக்கு பயிற்சி அளிக்கப் படுகிறது. அதன்பின் கோயில் நிகழ்ச்சியில் 2 மணி நேரத்துக்கு கும்மியடி நிகழ்ச்சி நடைபெறும்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT