Published : 15 Oct 2022 06:24 AM
Last Updated : 15 Oct 2022 06:24 AM
சென்னை: தமிழக அரசின் பொதுத் துறை ஊழியர்களுக்கு 8.33 சதவீதம் போனஸ் மற்றும் 1.67 சதவீதம் கருணைத்தொகை என மொத்தம் 10 சதவீதம் வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக நிதித் துறை செயலர் நா.முருகானந்தம் வெளியிட்ட அரசாணை: கரோனா பேரிடரால், அரசின் வருவாயில் சிக்கல்கள் ஏற்பட்டு, பொதுத் துறை நிறுவனங்களின் வணிகத்தில் கடந்த 2021-22-ல்பெரும் தாக்கம் ஏற்பட்டது. கரோனாகாரணமாக கடந்த ஆண்டு மே 10முதல் ஜூலை 5-ம் தேதி வரைமுழு ஊரடங்கும், இந்த ஆண்டுஜனவரி 31-ம் தேதி வரை பகுதி அளவு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டிருந்தது. இந்த காலகட்டத்தில், நிறுவனங்களுக்கான வருவாய் குறைந்த போதிலும், போக்குவரத்து கழகங்கள் உள்ளிட்ட அனைத்து பொதுத் துறை நிறுவனங்களிலும் முழு சம்பளம் வழங்கப்பட்டது.
ஊரடங்கு கட்டுப்பாடுகளால் கடந்த ஆண்டில் 57 நாட்கள் பேருந்து இயங்காத நிலையிலும், வங்கிகள், நிதி நிறுவனங்களில் கடன் பெற்று, பெரிய அளவில் வட்டிஇழப்பு ஏற்பட்டதையும் பொருட்படுத்தாமல், பணியாளர்களுக்கு சம்பளம் உள்ளிட்டவற்றை போக்குவரத்து கழகங்கள் வழங்கின. இந்நிலையில், பொதுத் துறை நிறுவனங்களின் ஊழியர்களுக்கு 2022-23-ம் ஆண்டுக்கான போனஸ்,கருணைத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பொதுத் துறை நிறுவனங்கள் மிகை வருவாய் பெற்றிருந்தாலும், இல்லாவிட்டாலும், போனஸ் சட்டத்தின்படி, சி, டி பிரிவு பணியாளர்கள், ஊழியர்களுக்கு 8.33 சதவீதம் போனஸ் மற்றும் 1.67 சதவீதம் கருணைத்தொகை என 10 சதவீதத்துக்கு மிகாத போனஸ் வழங்க வேண்டும். இவர்களுக்கான அதிகபட்ச ஊதிய உச்சவரம்பு ரூ.21 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த தகுதிக்குள் ஊதியம் பெற்று, கடந்த ஆண்டில் பகுதியளவு நாட்கள் பணியாற்றிய ஊழியர்களுக்கு, அதற்கேற்ப போனஸ், கருணைத்தொகை வழங்கப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த போனஸ் அறிவிப்பு மூலம் பொதுத்துறை நிறுவனங்களை சேர்ந்த 3.58 லட்சம் நிரந்தர மற்றும் ஆயிரக்கணக்கான தற்காலிக ஊழியர்கள் பயன்பெறுவர். இவர்களுக்கு ரூ.2 ஆயிரம் முதல் ரூ.8 ஆயிரம் வரை போனஸ் கிடைக்கும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT