Last Updated : 14 Oct, 2022 06:39 PM

10  

Published : 14 Oct 2022 06:39 PM
Last Updated : 14 Oct 2022 06:39 PM

“தெலங்கானாவிலும் மக்களை சந்தித்து வருகிறேன்” - நாராயணசாமிக்கு ஆளுநர் தமிழிசை கடிதம்

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை, முன்னாள் முதல்வர் நாராயணசாமி | கோப்புப் படம்

புதுச்சேரி: “தெலங்கானா மக்கள் என் மீது மிகுந்த அன்பும், நம்பிக்கையும் கொண்டிருக்கிறார்கள். யாரும் என்னை விரட்டவும் இல்லை. அதற்கான அவசியமும் இல்லை” என்று புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி எழுப்பிய கேள்விக்கு, பதிலளித்து ஆளுநர் தமிழிசை கடிதம் அனுப்பியுள்ளார்.

“மக்கள் குறை கேட்கின்றேன் என்ற பெயரில் ஆளுநர் தமிழிசை தர்பார் நடத்தியிருக்கிறார். கிரண்பேடியை போல் தமிழிசையும், அரசின் அன்றாட நடவடிக்கைகளில் தலையிட ஆரம்பித்துள்ளார். இதனை தட்டிக் கேட்க முடியாமல் முதல்வர் ரங்கசாமி வாயை மூடிக்கொண்டிருக்கிறார். இதேபோன்று தெலங்கானாவில் தர்பார் நடத்துவதற்கு ஆளுநருக்கு திராணி இருக்கிறதா? அங்கு இதுபோன்று செய்தால் அங்குள்ள முதல்வரும், பொதுமக்களும் ஆளுநரை விரட்டியடிப்பார்கள்” என்று முன்னாள் முதல்வர் நாராயணசாமி தெரிவித்திருந்தார்.

இதற்கு பதிலளிக்கும் வகையில், முன்னாள் முதல்வர் நாராயணசாமிக்கு ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கடிதம் ஒன்றை இன்று அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில், ''மரியாதைக்குரிய முன்னாள் முதல்வர், சகோதரர் நாராயணசாமி அவர்களுக்கு வணக்கம். பொது வாழ்க்கையில் இருப்பவர்கள் அவர்கள் எந்த துறையில் எந்தப் பதவியில் இருந்தாலும் மக்கள் சேவைதான் பிரதானமான பணி என்பது என்னுடைய ஆழமான நம்பிக்கை. புதுச்சேரியிலும் தலைமைச் செயலரிடம் ஒரு கோரிக்கை வைத்திருக்கிறேன்.

செயலர்கள், மாவட்ட ஆட்சியாளர்கள், துறை தலைவர்கள் என்று அனைத்து அதிகாரிகளும் அலுவலகப் பணிகளை விடுத்து மக்களைச் சந்திக்க குறிப்பிட்ட நேரம் ஒதுக்கி மக்களின் குறைகளைக் கேட்க வேண்டும் என்று கூறி இருக்கிறேன். அதற்கான சுற்றறிக்கை அனுப்ப கேட்டிருக்கிறேன். அவரும் அதற்கு இசைவு தெரிவித்துள்ளார். அதேபோல, நானும் என்னை சந்திக்க விரும்பி முன்பதிவு செய்யும் பலரையும், பொதுமக்களையும் சந்தித்து வருகிறேன். ஆனால் மின்னஞ்சல் போன்றவை மூலமாக தொடர்புகொள்ள முடியாதவர்கள், குறிப்பிட்ட நாட்கள் அறிவிக்கப்பட்டால் நாங்கள் தங்களை சந்திக்க வாய்ப்பாக இருக்கும் என்று கேட்டுக் கொண்டதை அடுத்து மக்களை சந்திக்க மாதத்தில் இரண்டு நாட்கள் ஒதுக்கிக் கொடுத்திருக்கிறேன். இது யாருடைய அதிகாரத்திலும் தலையிடுவதாக ஆகாது.

மக்களை சந்திக்கும் பழக்கம் எனக்கு நெடு நாட்களாகவே இருந்து வருகிறது. தெலங்கானா மாநிலத்தில் மக்களை சந்திக்க முடியுமா என்று நீங்கள் கேள்வி எழுப்பியிருந்தீர்கள். அதற்காக தெளிவுபடுத்துகிறேன். தெலங்கானா மாநிலத்திலும் நான் மக்களை தொடர்ந்து சந்தித்து வருகிறேன். பெண்களையும், மாணவர்களையும் சந்திப்பதற்காக தனியாக நேரம் ஒதுக்கி கொடுத்திருக்கிறேன். நான் பதவி ஏற்ற முதல் வாரத்திலேயே பிரஜா தர்பார் என்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடத்துவேன் என்று அறிவித்தேன். இது யாருடைய. எந்த நிகழ்வின் தொடர்ச்சியும் அல்ல. நானே முடிவெடுத்து சந்தித்து வருகிறேன்.

தெலங்கானா மக்கள் என் மீது மிகுந்த அன்பும் நம்பிக்கையும் கொண்டிருக்கிறார்கள். நீங்கள் கூறியதைப் போல அங்கு யாரும் என்னை விரட்டவும் இல்லை. அதற்கான அவசியமும் இல்லை. அங்கு என்னுடைய பணி தீவிரமாகவே இருக்கிறது. இந்த கடிதத்தோடு, தெலங்கானா மாநிலத்தில் நான் மூன்றாம் ஆண்டில் செய்த அன்றாடப் பணிகள் பற்றிய 498 பக்கங்கள் கொண்ட புத்தகத்தை தங்களது மேலான பார்வைக்கு அனுப்பி வைத்துள்ளேன். மூன்று ஆண்டுகளுக்கும் தனித்தனியாக புத்தகங்கள் வெளியிட்டிருந்தாலும், மூன்றாம் ஆண்டில் அண்மையில் வெளியிடப்பட்ட புத்தகம் என்பதால் இதனை அனுப்பி வைக்கிறேன் என்பதை பணிவன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்'' என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x