Published : 14 Oct 2022 04:39 PM
Last Updated : 14 Oct 2022 04:39 PM
சென்னை: "கடந்த காலத்தில் பிரதமர் நேரு இந்தி பேசாத மக்களுக்கு கொடுத்த உறுதிமொழியைப் போல மீண்டும் அத்தகைய உறுதிமொழியை பிரதமர் மோடியிடமிருந்து பெறுவதற்காக அண்ணாமலை முயற்சி செய்வாரா?" என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: "இந்தியாவில் ஆட்சி மொழியாக இந்தியை எதிர்க்கிற திமுகவும், இந்தியை திணித்த காங்கிரஸ் கட்சியும் கூட்டணி வைத்திருப்பது எந்த அடிப்படையிலானது என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசியிருக்கிறார். வரலாற்றை அறியாமல் அரசியல் உள்நோக்கத்துடன் திரிபுவாத கருத்துகளை கூறியிருக்கிறார். இந்தியாவின் ஆட்சி மொழியாக இந்தி மொழியோடு ஆங்கிலமும் தொடர்ந்து நீடிக்கிற வகையில் கடந்த காலங்களில் பல்வேறு நடவடிக்கைகளை காங்கிரஸ் ஆட்சி எடுத்திருக்கிறது.
பிரதமர் நேரு 1961-ல் கொடுத்த உறுதிமொழியின்படி, இந்தி பேசாத மக்கள் விரும்புகிற வரை ஆங்கிலமும் தொடர்ந்து ஆட்சி மொழியாக நீடிக்கும் என்று அறுதியிட்டுக் கூறியதை எவராலும் மறுத்திட இயலாது. அதோடு, பிரதமர் சாஸ்திரி, பிரதமர் இந்திரா காந்தி ஆட்சி மொழிகள் சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து ஆங்கிலம் தொடர்ந்து ஆட்சி மொழியாக நீடிப்பதற்கு பாதுகாப்பு வழங்கியதை அண்ணாமலை அறியாமல் போனது வியப்பைத் தருகிறது.
சட்டத் திருத்தத்தோடு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு இந்தி பேசுகிற மாநிலங்களும், இந்தி பேசாத மாநிலங்களும் ஆங்கில மொழியின் மூலமாகத் தான் கடித போக்குவரத்து நடத்த வேண்டுமென்கிற உத்தரவாதம் உறுதி செய்யப்பட்டது. இந்த உறுதிமொழியை மறைந்த திமுக தலைவர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோர் ஏற்று ஆமோதித்ததை வரலாற்று ஏடுகளை புரட்டிப் பார்த்து அண்ணாமலை தெளிவு பெறுவது நல்லது.
இந்தியக் காவல் பணியில் இந்தியை படிக்காமலேயே தேர்வு பெற்றதாக அண்ணாமலை புளகாங்கிதம் அடைந்திருக்கிறார். அவர் படித்த காலத்தில் இந்தி திணிக்கப்படவில்லை என்பதற்கு காங்கிரஸ் ஆட்சி தான் காரணமே தவிர, பாஜக ஆட்சி அல்ல. ஏனெனில், அப்போது இந்தியாவை ஆண்டது காங்கிரஸ் கட்சி தான் என்பதை அண்ணாமலைக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன். தற்போது இந்திய காவல் பணியில் படிக்கிற நிலை ஏற்பட்டால் அவர் இந்தியை படிக்காமல் இருக்க முடியாது என்பதை அவர் நினைவில் கொள்ள வேண்டும்.
ஆட்சி மொழிக் குழு தலைவராக இருக்கிற அமித்ஷா கூறிய பரிந்துரைகளை படித்தால் அப்பட்டமாக ஆங்கிலத்தை அகற்றிவிட்டு இந்தியை மட்டுமே திணிக்கிற நடவடிக்கைகளை புரிந்து கொள்ள முடியும். பாஜகவின் நோக்கம் ஒரே மொழி - ஒரே நாடு என்ற அடிப்படையில் இந்தியாவின் ஆட்சி மொழியான ஆங்கிலத்தை அகற்றிவிட்டு இந்தியை திணிப்பதற்கு தீவிர முயற்சிகள் எடுத்து வருவதை அண்ணாமலையால் மறுக்க முடியாது.
கடந்த காலத்தில் பிரதமர் நேரு இந்தி பேசாத மக்களுக்கு கொடுத்த உறுதிமொழியைப் போல மீண்டும் அத்தகைய உறுதிமொழியை பிரதமர் மோடியிடமிருந்து பெறுவதற்காக அண்ணாமலை முயற்சி செய்வாரா ? இந்தி பேசாத தமிழகம் போன்ற மாநிலங்களின் உணர்வுகளை அண்ணாமலை மதிப்பாரேயானால் இத்தகைய உறுதிமொழியை பிரதமர் மோடியிடம் பெறுகிற துணிவு அண்ணாமலைக்கு இருக்கிறதா ? எனவே, அண்ணாமலை எதையும் ஆழ்ந்து, புரிந்து கருத்துகளை கூறாமல், நுனிப் புல் மேய்ந்து, அவசர கோலத்தில் அள்ளித் தெளிக்கிற வகையில் கருத்துகளை கூறுவது ஆரோக்கியமான அரசியலுக்கு உகந்ததல்ல" என்று கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT