Published : 14 Oct 2022 02:34 PM
Last Updated : 14 Oct 2022 02:34 PM
மதுரை: சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்யப்படும் சர்ச்சைக்குரிய பதிவுகளை நீக்குவதற்கு, அவற்றின் யுஆர்எல் முகவரியை வழங்க வேண்டும் என நீதிமன்றத்தில் சமூக வலைதள நிறுவனங்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையை சேர்ந்த யூடியூபர் சவுக்கு சங்கர். இவருக்கு நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் உயர் நீதிமன்ற மதுரைக் கிளை 6 மாதம் சிறை தண்டனை விதித்தது. நீதிமன்ற அவமதிப்பு வழக்குக்கு காரணமாக சவுக்கு சங்கரின் பதிவுகளை சமூக வலைதளங்களிலிருந்து நீக்கவும் அப்போது நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், பி.புகழேந்தி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. யூடியூப், ஃபேஸ்புக், ட்விட்டர் நிறுவனங்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், ''சர்ச்சைக்குரிய வீடியோக்களை நீக்க வேண்டும் என்றால், அதற்கான யுஆர்எல் (யுனிபார்ம் ரிசோர்ஸ் லொகேட்டர்) முகவரியுடன் நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் அல்லது மத்திய தகவல் தொழில்நுட்பத் துறைக்கு உத்தரவிட வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் சர்ச்சைக்குரிய வீடியோக்களை நீக்குவது கடினம்'' என்றனர்.
அரசு வழக்கறிஞர் வாதிடுகையில், ''சமூக வலைதளங்களால் தனி உரிமை மீறல், சட்டம் - ஒழுங்கு பிரச்சினைகள் ஏற்படுகின்றன. இதனால் அவற்றை கட்டுப்படுத்த, வரைமுறைப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றார். இதையடுத்து வழக்கை தீர்ப்புக்காக நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT