Published : 14 Oct 2022 08:32 AM
Last Updated : 14 Oct 2022 08:32 AM
விழுப்புரம்: தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி விழா ஒன்றில் பேசும்போது, ‘பெண்கள் எல்லாம் ஓசி பஸ்ஸில் பயணிக்கிறீர்கள்!’ என்று கூறியது சர்ச்சைக்குள்ளானது.
இதன் பிறகு, அண்மையில் நடந்த திமுக பொதுக்குழு கூட்டத்தில், அக்கட்சியின் தலைவரான முதல்வர் ஸ்டாலின், “கட்சி நிர்வாகிகளும், அமைச்சர்களும் பொது இடங்களில் பேசும்போது கவனமுடன் இருக்க வேண்டும்” என்று அறிவுறுத்திக் கொண்டிருந்தபோது, மேடையில் அமர்ந்திருந்த பொன்முடி சிரித்துக் கொண்டிருந்த காட்சி வைரலானது.
இதுகுறித்து அமைச்சர் பொன்முடியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, பத்திரிக்கையாளர்களை கைவீசி புறக்கணித்து விட்டுச் சென்றார்.
1989-ல் விழுப்புரம் தொகுதியின் திமுக வேட்பாளராக பொன்முடி அறிவிக்கப்பட்டார். அவர் வெற்றி பெற்றதும், சுகாதாரத்துறை அமைச்சராக பதவியேற்று சிறப்பாகச் செயல்பட்டார். தொடர்ந்து திமுகவின் விவசாய அணியின் மாநில செயலாளரானார். மாவட்ட செயலாளர் பதவியும் அவரைத்தேடி வந்தது. செப்டம்பர் 2020 வரை மாவட்ட செயலாளராக பதவி வகித்தார். தற்போது உயர்கல்வித்துறை அமைச்சர் பதவியோடு, கட்சியில் மாநில துணைப்பொதுச் செயலாளராகவும் பதவி வகித்து வருகிறார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அமைச்சர்கள் மத்தியில் பேசும்போது, “பொன்முடிபோல உங்களில் யாராவது சட்டமன்றத்தில் பேசுகிறீர்களா!” என சிலாகித்துப் பேசியதாக அந்நாளில் ஒரு தகவல் வெளியாகி, அப்போது, அது பேசு பொருளானது. ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசை களத்தில் நின்று மிகக் கடுமையாக எதிர்ப்பதிலும் உறுதி காட்டியவர் அவர்.
திமுகவில் பேராசிரியர் அன்பழகனுக்கு அடுத்து பேராசிரியர் என்றால் பொன்முடியைத்தான் குறிக்கும். அப்படிப்பட்ட பேராசிரியருக்கு, ‘இன்று என்னதான் ஆயிற்று!’ என பேசும்படியாக நடந்து கொள்கிறார்.
இதுபற்றி திமுக நிர்வாகிகளிடம் கேட்டபோது, கிடைத்த விவரங்கள் வருமாறு: 4 முறை விழுப்புரம் தொகுதியில் எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டப்பட்ட பொன்முடி, 2011-ம் ஆண்டு தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கூடியுள்ள பெண்களை பார்த்து, ‘என்னைப் பார்க்கத்தானே வந்தீர்கள்?’ எனக் கேட்டது, அப்போதைய அவரது தோல்விக்கு காரணம் என்று பேசப்பட்டது.
ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்டத்தின் திமுக செயலாளராக ஏகபோகமாக ஆதிக்கம் செலுத்தி வந்தவரை, கள்ளக்குறிச்சி மாவட்டத்தை பிரித்தும், விழுப்புரம் மாவட்டத்துக்குள் 2 பிரிவுகளாக பிரித்தும் 4 தொகுதிகள் உள்ளடங்கிய பகுதிக்கு மாவட்ட செயலாளராக்கியது பொன்முடிக்கு மனதளவில் பெரிய பாதிப்பை உருவாக்கியது.
மேலும் விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்ட கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்கு பொறுப்பு அமைச்சராக அவரை கட்சித் தலைமை நியமிக்கவில்லை. தனது மகன் கவுதமசிகாமணியை விழுப்புரம் மாவட்ட செயலாளராக்க அவர் மேற்கொண்ட முயற்சியும் தோல்வியில் முடிந்தது. இதற்கிடையே வருகின்ற மக்களவைத் தேர்தலில், மீண்டும் தன் மகனுக்கு வாய்ப்பு வழங்கப்படுமா என்ற கவலையும் அவரிடம் குடி கொண்டுள்ளது.
பொன்முடி பரிந்துரை செய்யாமல், தலைமையால் தேர்வு செய்யப்பட்டு, வெற்றி பெற்ற விழுப்புரம் எம்எல்ஏ லட்சுமணனுக்கு மாவட்ட திமுகவில் ஆதரவு பெருகி வருவதும் அவரை சங்கடத்தில் ஆழ்த்தியிருக்கிறது.
‘திட்டமிட்டே கட்சித் தலைமை தன்னை உதாசீனப்படுத்துகிறதோ!’ என்ற கவலையால் ஏற்படும் ஆதங்கமும், உடல்நலம் கருதி அவர் எடுத்துக் கொள்ளும் மருந்துகளால் ஏற்படும் விளைவுகளும் அவ்வப்போது அவரைத் தன்னிலை மறக்க செய்கிறது என்கிறார்கள் அவருக்கு மிக நெருங்கியவர்கள்.
இதெல்லாம் ஒரு புறம் இருக்க, தனது தந்தையும், மறைந்த திமுக தலைவருமான கருணாநிதியுடன் தோளோடு தோள் நின்று அரசியல் களத்தில் போராடிய மூத்த தலைவர்கள், இன்று அமைச்சர் பதவியில் அமர்ந்து கொண்டு சில சங்கடமான காரியங்களில் இறங்கும்போது, அதை அவர்களிடம் ஒவ்வொரு முறையும் சுட்டிக்காட்டியும் இதுபோன்ற பேச்சுக்கள் தொடர்வதால்தான், திமுக தலைவரும், முதல்வருமான ஸ்டாலின் பொறுமை இழந்து, ஊடகங்களின் வெளிச்சம்பட்டாலும் பராவாயில்லை என சுடச்சுட பேசி, மேடையில் இதை வெட்ட வெளிச்சமாக்கியிருக்கிறார் என்ற பேச்சும் கட்சிக்குள் இருக்கிறது.
வருத்தம் தெரிவித்தார் பொன்முடி
பெண்கள் ஓசி பஸ்சில் போவதாக கூறியதற்கு வருத்தம் தெரிவித்துள்ளார் அமைச்சர் பொன்முடி.
சென்னை பெரியார் திடலில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் பேசிய அவர், "நான் பேசிய ஒரு வார்த்தையை வைத்துக் கொண்டு என்னை என்னென்னவோ சொன்னார்கள். தலைவர் ஸ்டாலின் இது போன்று பேசாதீர்கள் என்று அறிவுரை கூறியுள்ளார். வட்டார வழக்கில் பேசினேன். எனவே, அப்படி யாருடைய மனமாவது புண்பட்டிருக்குமானால் உண்மையாகவே நான் வருந்துகிறேன். யார் மனதையும் புண்படுத்த வேண்டும் என்று நான் பேசவில்லை” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT