Last Updated : 14 Oct, 2022 05:14 AM

2  

Published : 14 Oct 2022 05:14 AM
Last Updated : 14 Oct 2022 05:14 AM

பல்பொருள் அங்காடிகளாக மாறும் ரேஷன் கடைகள் ரூ.10 மதிப்பில் மளிகைப் பொருட்கள் விற்க நடவடிக்கை

சென்னை: தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளை பல்பொருள் அங்காடிகளைப்போல மாற்றும் வகையில், ரூ.10 மதிப்பிலான மளிகைப் பொருட்களை விற்பனை செய்யும் நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 35,323 ரேஷன் கடைகள் மூலம் 2 கோடி ரேஷன் கார்டுதாரர்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

மத்திய அரசின் `ஒரே நாடு; ஒரே குடும்ப அட்டை' திட்டத்தின் கீழ், ரேஷன் கார்டுதாரர்கள் தற்போது எங்கு வேண்டுமானாலும் பொருட்களை வாங்கிக்கொள்ளும் வசதி செய்யப்பட்டுள்ளது. இதற்காக ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட விரல் ரேகைப் பதிவு பயன்படுத்தப்படுகிறது.

இதுதவிர, தற்போது கண் கருவிழிப் பதிவையும் பயன்படுத்தி, பொருட்களை வழங்கும் நடைமுறையும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

தமிழகத்தில் 33,238 கடைகள் கூட்டுறவுத் துறை மூலமும், மற்ற கடைகள் உணவுத் துறை வாயிலாகவும் நடத்தப்படுகின்றன. ரேஷன் கடைகளில் அத்தியாவசியப் பொருட்களுடன், சில மளிகைப்பொருட்கள், சோப்பு உள்ளிட்டவையும் விற்பனை செய்யப்படுகின்றன. எனினும், இவற்றை வாங்க மக்களைக் கட்டாயப்படுத்தக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், தற்போது ரேஷன் கடைகளை பல்பொருள் அங்காடிகளைப்போல, அனைத்துப் பொருட்களும் கிடைக்கும்வகையில் மாற்றும் நடவடிக்கையில் கூட்டுறவுத் துறை ஈடுபட்டுள்ளது. அண்மையில் தலா ரூ.10 விலையில், 24 வகையான மளிகைப் பொருட்கள் அடங்கிய பாக்கெட் விற்பனையை அமைச்சர் பெரியசாமி தொடங்கிவைத்தார். மேலும், 2 கிலோ, 5 கிலோ எடையுள்ள சமையல் காஸ் சிலிண்டர்கள் விற்பனையும் தொடங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து உணவுத் துறைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் கூறும்போது, ‘‘தமிழகத்தில் ரேஷன் கடைகளைப் புதுப்பிக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. முதல்கட்டமாக 1,167 கடைகள் புதுப்பிக்கப்பட்டு, 84 கடைகளுக்கு ஐஎஸ்ஓ சான்றிதழ் பெறப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் 3 ஆண்டுகளுக்கு இச்சான்றிதழ் பெற வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளோம்.

கூட்டுறவு மொத்த அங்காடிகள், சுயசேவை பல்பொருள் அங்காடிகளில், தரமான பொருட்களை, நியாயமான விலையில் தருகிறோம். பழமுதிர்சோலை போன்றகடைகளையும் நடத்தி வருகிறோம்.

தற்போது தேனாம்பேட்டையில் உள்ள பல்பொருள் அங்காடியில், அனைத்து வகையான பொருட்களும் விற்பனை செய்யப்படுகின்றன. இது வரவேற்பைப் பெற்றுள்ளது.

இதுதவிர, ரேஷன் கடைகளில் பனை வெல்லம் மற்றும் அந்தந்தப் பகுதியில் கிடைக்கும் பொருட்களை விற்பனை செய்ய நட வடிக்கை எடுத்துள்ளோம். தலா ரூ.10 மதிப்பிலான, 24 மளிகைப் பொருட்களை ரேஷன் கடைகளில் விற்பனை செய்கிறோம். ஆனால், இவற்றை வாங்குவது மக்கள் விருப்பம்தான். யாரையும் கட்டாயப்படுத்தக் கூடாது என்று அறிவுறுத்தியுள்ளோம்’’ என்றார்.

தேனாம்பேட்டையில் உள்ள பல்பொருள் அங்காடியில், அனைத்து வகை யான பொருட்களும் விற்பனை செய்யப் படுகின்றன. இதுவரவேற்பை பெற்றுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x