Published : 15 Nov 2016 06:27 PM
Last Updated : 15 Nov 2016 06:27 PM

மதுரை அரசு மருத்துவமனையில் ஜனவரியில் செயற்கை கருத்தரிப்பு மையம்: தென் மாவட்ட குழந்தையில்லா தம்பதிகளுக்கு வரப்பிரசாதம்

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் வரும் ஜனவரி மாதம், குழந்தையில்லா தம்பதிகளுக்கு குழந்தைப் பேறு கிடைக்க செயற்கை கருத்தரிப்பு மையம் அமைக்கப்படுகிறது. இதற் காக ரூ.1 கோடியில் நவீன மருத்துவ கருவிகள் வாங்குவதற்கு திட்ட மதிப்பீடு தயார் செய்து அரசின் ஒப்புதலுக்காக மருத்துவமனை நிர்வாகம் கருத்துரு அனுப்பி உள்ளது.

அரசு ராஜாஜி மருத்துவமனை மகப்பேறு சிகிச்சைப் பிரிவில் ஒரு நாளைக்கு 50 முதல் 60 குழந்தைகள் பிறக்கின்றன. குழந்தையில்லா தம்பதிகளுக்கு இங்கு திங்கள்கிழமை தோறும் பிற்பகல் 12 மணிக்கு அனைத்து அடிப்படை பரிசோதனைகளும் செய்யப்படுகின்றன. நவீன மருத்துவ வசதிகள் அனைத்தும் இருந்தும், செயற்கை கருத்தரித்தல் மையம் இதுவரை இங்கு அமைக்கப்படவில்லை. அதனால், குழந்தையில்லாத தம்பதிகள், சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைகளுக்கு செல்கின்றனர்.

ஏழை, எளிய தம்பதிகளுக்கு குழந்தைப் பேறு கனவாகி வருகிறது. அதனால், அரசு ராஜாஜி மருத்துவமனையில் செயற்கை கருத்தரிப்பு மையம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக வலியுறுத்தி வந்தனர். ஆனால், அதற்கான மருத்துவ கட்டிட வசதிகள் இல்லாமல் இருந்ததால் கருத்தரிப்பு மையம் அமைக்கப்படவில்லை.

இந்நிலையில் அரசு ராஜாஜி மருத்துவமனையில் ரூ. 40 கோடியில் மகப்பேறு சிகிச்சை மையம் கட்டப்படுகிறது. இந்த புதிய கட்டிடப் பிரிவு கட்டுமானப்பணி நிறைவடையும் நிலையில் உள்ளது. இந்தக் கட்டிடத்துக்கு மகப்பேறு சிகிச்சை மையம் மாற்றப்படுகிறது. அதன்பிறகு அந்த இடத்தில் செயற்கை கருத்தரிப்பு மையம் அமைக்கப்படுகிறது. இதற்காக ரூ.10 கோடி வரை செலவிடப்படுகிறது. தற்போது முதற்கட்டமாக, ரூ.1 கோடியில் செயற்கை கருத்தரிப்பு நவீன மருத்துவ உபகரணங்கள் வாங்குவதற்கு திட்ட மதிப்பீடு தயார் செய்து, மருத்துவமனை நிர்வாகம் தமிழக அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி உள்ளது.

இதுகுறித்து மருத்துவமனை டீன் எம்.ஆர். வைரமுத்துராஜூ கூறுகையில்,

திருமணமாகும் 10 சதவீதம் தம்பதிகளுக்கு குழந்தைகள் இல்லை. அதனால், அரசு ராஜாஜி மருத்துவமனையில் செயற்கை கருத்தரிப்பு மையம் வரும் ஜனவரியில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது என்றார்.

மகப்பேறு மருத்துவர்கள் கூறுகையில், 'பாலிசிஸ்டிக் ஓவரி' பிரச்சினை உள்ள பெண்களுக்கு தைராய்டு பரிசோதனை மேற் கொண்டு மாதவிடாய் கோளாறை நீக்கி, கருமுட்டை வளர வைப்பதற்கான மருந்துகளைக் கொடுக்கலாம். இதன்மூலம் 70 சதவீத பெண்களுக்கு குழந்தைப்பேறு சாத்தியமாகிறது. மீதமுள்ள 30 சதவீதம் பேர் வசதி இல்லாததால் தனியார் கருத்தரிப்பு மையங்களுக்குச் செல்வதில்லை. இதனால், இவர்களின் குழந்தைப் பேறு கனவாகவே முடிந்து விடுகிறது என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x