Published : 13 Oct 2022 07:48 PM
Last Updated : 13 Oct 2022 07:48 PM
மதுரை: மதுரை - திருப்பரங்குன்றம் அருகிலுள்ள சோளங்குருணி கிராமத்தைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (56). அப்பகுதியில் டீக்கடை நடத்தி வருகிறார். பிளாஸ்டிக் பொருட்களால் சுற்றுப்பகுதியில் மண்வளம், சுற்றுச்சூழல் பாதிப்பு, பிளாஸ்டிக் பைகளிலுள்ள உணவுகளை கால்நடைகள் உண்பதால் ஏற்படும் உடல்நல பாதிப்பை தடுக்க முயற்சித்தார்.
இதைத்தொடர்ந்து அவரது கிராமத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ‘மண் வளம் பாதுகாப்போம், நெகிழியை ஒழிப்போம், சுற்றுச் சூழலை காப்போம்’ என்ற வாசகங்களை தனது டீக்கடையில் எழுதி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.
இது குறித்து அவர் கூறியது, "சுற்றுச்சூழல், மண்வளம் பாதுகாக்க, உறுதி எடுத்து முன்மாதிரி கிராமமாக மாற்ற இம்முயற்சியை மேற்கொண்டுள்ளேன். இது தவிர 2020 முதல் 2021 வரை கரோனா காலங்களிலும் காரில் கரோனா விழிப்புணர்வு வாசகத்துடன் பிரச்சாரம் செய்தேன். கிராம பகுதியில் கபசுர குடிநீர், மாஸ்க், சானிடைசர் வழங்கினேன். இதற்காக காவல்துறை மற்றும் சுகாதாரத்துறையிடம் கேடயம், பாராட்டு சான்றிதழ்களை பெற்றேன்.
தற்போது பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஏற்படுத்த டீக்கடையில் கேரி பேக்கை பயன்படுத்துவதில்லை என,உறுதி மொழி எடுத்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு கொடுக்க சுவரொட்டிகளை ஒட்டியுள்ளேன். பிளாஸ்டிக் பொருட்களால் புற்றுநோய், நுரையீரல் பாதிக்கின்றது. தாய்ப்பால் கொடுக்கும் குழந்தைகளும் பாதிக்கின்றன. பிளாஸ்டிக் பொருளை தவிர்க்க வேண்டும்” இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT