Published : 13 Oct 2022 03:20 PM
Last Updated : 13 Oct 2022 03:20 PM

‘புதிய தடுப்பணைகள்’ - நிலத்தடி நீரை மேம்படுத்த சிறப்புத் திட்டங்களுக்கு மத்திய அரசுடன் தமிழக அரசு ஆலோசனை

மத்திய அமைச்சர் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டம்

சென்னை: நிலத்தடி நீரை மேம்படுத்த சிறப்புத் திட்டங்களை செயல்படுத்துவது தொடர்பாக மத்திய அரசுடன் தமிழக அரசு ஆலோசனை மேற்கொண்டுள்ளது.

தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் ஜல் ஜீவன் திட்ட பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் மத்திய நீர்வளத் துறை அமைச்சர் கஜேந்திரசிங் செகாவத் தலைமையில் இன்று (அக்.13) சென்னையில் நடைபெற்றது. இதில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர். இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள தகவலில், "தமிழகத்தில் மொத்தம் உள்ள 124.94 லட்சம் வீடுகளில், 69.50 லட்சம் (55.63%) வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இது தேசிய சராசரியான 53.96 சதவீதத்தை விட அதிகம்.

இந்த ஆண்டின் முதல் மற்றும் இரண்டாவது காலாண்டிற்கு தமிழகத்திற்கு நிர்ணயம் செய்யப்பட்ட இலக்கு 12.10 லட்சம் ஆகும். இலக்கை விட அதிகமாக 16.25 லட்சம் குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்கப்பட்டு சாதனை எண்ணிக்கையை அடைந்துள்ளது. 2022-23-ம் ஆண்டு இலக்கு 28.48 லட்சம். இதுவரை 16.51 லட்சம் குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. மீதமுள்ள குழாய் இணைப்புகள் வழங்கப்பட்டு வருகிறது எனத் தெரிவிக்கப்பட்டது.

மேலும், இக்கூட்டத்தில் தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் ஜல் ஜீவன் இயக்க திட்டப் பணிகள் குறித்து விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இத்திட்டங்களை குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் முடிக்கவும் ஆலோசிக்கப்பட்டது.

நதி நீரினை உபயோகிக்கும் மாநிலங்களில், தமிழகம் கீழ்ப்பகுதியில் உள்ள மாநிலமாகும். எனவே, குடிநீர் திட்டங்களின் நிலைத்தன்மையை உறுதி செய்ய சிறப்புத் திட்டங்களை செயல்படுத்தி நிலத்தடி நீரை மேம்படுத்த சிறப்புத் திட்டத்தைக் கோரவும், ஆறுகளின் குறுக்கே தடுப்பணைகள் கட்டுதல், முக்கிய ஆறுகளில் ஓடும் உபரிநீரை பயன்படுத்தி அருகிலுள்ள நீர்நிலைகளில் நிரப்பி நிலத்தடி நீராதாரத்தை பெருக்குதல் போன்ற சிறப்புத் திட்டங்களை செயல்படுத்துவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது" என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x