Published : 02 Nov 2016 12:34 PM
Last Updated : 02 Nov 2016 12:34 PM

கோவை எஸ்.ஐ.எச்.எஸ். காலனி சாலையில் பாதியில் நிற்கும் மேம்பாலப் பணிகள்: நூதனப் போராட்டம் நடத்த மக்கள் முடிவு

கோவை எஸ்.ஐ.எச்.எஸ். காலனி சாலையில் பாதியில் நிற்கும் மேம்பாலப் பணிகளை முடிக்காவிட்டால், அரைகுறையாய் உள்ள கட்டுமானப் பணிகளுக்கு கீழே மக்களை அமரவைத்து போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளதாக, 11 பொது நல சங்கங்களைச் சேர்ந்தோர் தெரிவித்துள்ளனர்.

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலத்துக்கு உட்பட்ட எஸ்.ஐ.எச்.எஸ். காலனி, பாரதி நகர், நேதாஜி நகர், சக்தி நகர், காவேரி நகர், மூகாம்பிகை நகர், ராமசாமி நகர், கருணாநிதி நகர் உள்ளிட்ட பகுதிகளில் 25 ஆயிரம் பேருக்கும் மேல் வசித்து வருகின்றனர்.

இந்த குடியிருப்புகளுக்குச் செல்ல பிரதானப் பாதையாக விளங்குவது சிவில் விமானநிலைய சாலை. திருச்சி சாலையில் சிங்காநல்லூரை அடுத்து வடபுறம் பிரியும் இந்த சாலையில் பல்வேறு குடியிருப்புகள் மட்டுமின்றி, கல்லூரி, பள்ளிகள், வியாபார நிறுவனங்கள், சிறு, குறு தொழிற்சாலைகள், சிறிய ஆலைகள் உள்ளன.

ரூ.21.18 கோடி

இந்த சாலையின் குறுக்கே, இருகூர் மற்றும் பீளமேடு ரயில் நிலையங்களுக்கு இடையே ரயில்வேகேட் உள்ளது. இப்பகுதியில் மேம்பாலம் கட்டுவதற்காக ரூ.21.18 கோடி நிதி ஒதுக்கப்பட்டு, 2012-ம் ஆண்டு இறுதியில் பணிகள் தொடங்கின. ஆனால், 3 ஆண்டுகளாகியும் இப்பணிகள் நிறைவடையாமல், பாதியில் நிறுத்தப்பட்டுள்ளன.

ரயில் பாதைக்கு மேலே செல்லும் மேம்பாலப் பணி நிறைவடைந்த நிலையில், மற்ற இடங்களில் துண்டுதுண்டாக பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மேம்பாலத்தையொட்டி அமைக்கப்படும் சர்வீஸ் சாலைக்காக கையகப்படுத்தும் நிலங்களுக்கு, அரசுத் தரப்பில் இழப்பீடு வழங்காததே இதற்குக் காரணம். நிலத்தின் உரிமையாளர்கள் நீதிமன்றம் சென்றும், இதுவரை தீர்வுகாணப் படவில்லை.

இதனால், இந்த சாலையில் செல்வோர், வேறு பாதையில் 3 கிலோமீட்டர் முதல் 5 கிலோமீட்டர் வரை சுற்றிச் செல்ல வேண்டியுள்ளது. அந்த பாதையிலும் 2 ரயில்வே கேட்டுகள் உள்ளன. அவை பழுதாகும்போது நிலைமை இன்னமும் மோசமாகிவிடுகிறது. அப்போது, மற்றொரு பாதையில் 5 கிலோமீட்டர் தொலைவு சுற்றிச் செல்ல வேண்டியுள்ளது.

இதனால், கர்ப்பிணிகள், நோயாளிகள், முதியோர், மாணவ, மாணவிகள், வேலைக்குச் செல்வோர் என அனைத்துத் தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த பாலத்தின் பணிகளை விரைந்து முடிக்கக் கோரி, கடந்த 2 ஆண்டுகளாக பொதுமக்கள் சாலை மறியல் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டும், உரிய நடவடிக்கை இல்லை.

வரும் 20-ம் தேதிக்குள் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வுகாணாவிட்டால், பாதிக்கப்பட்ட மக்களைத் திரட்டி, ஆங்காங்கே பாதியில் நிற்கும் மேம்பாலக் கட்டுமானங்களின் கீழ் அமர்ந்து, போராட்டம் நடத்தவுள்ளதாக 11 பொதுநல அமைப்புகளைச் சேர்ந்தோர் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து, இந்த அமைப்புகளின் ஒருங்கிணைப் பாளரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சிங்காநல்லூர் நகரச் செயலாளருமான தெய்வேந்திரன் ‘தி இந்து’விடம் கூறியது: இந்த மேம்பாலப் பணிகள் அரைகுறையாய் நிறுத்தப்பட்டுள்ளதால், கோவை மாநகராட்சி 59-வது வார்டைச் சேர்ந்த மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.

தினமும் இப்பகுதி மக்கள் ரயில்வே பாலத்தைக் கடந்து செல்ல ஆட்டோவில் பயணம் செய்ய வேண்டிய நிலை உள்ளது. இதனால், வருமானத்தின் பெரும்பகுதியை அதற்கே செலவிடுகின்றனர். கடந்த 3 ஆண்டுகளாக இந்த நிலை நீடிக்கிறது.

இந்த நிலையில்தான், மேம்பாலப் பணிகள் தொடங்கி, சர்வீஸ் சாலைக்காக நிலம் கையகப்படுத்தும் பணிகள் தொடங்கின. அதில் ஏராளமான குளறுபடிகள் உள்ளன. நில உரிமையாளர்களுக்கு உரிய நஷ்டஈடு வழங்கவில்லை. இதனால் 50-க்கும் மேற்பட்டோர் நீதிமன்றம் சென்று, தடையாணை பெற்றனர். இதனால், கட்டுமானப் பணிகள் பாதியில் நிற்கின்றன.

இதனால் பாதிக்கப்பட்ட பலர், சொந்த வீட்டை விட்டு வெளியேறி, வேறு பகுதிக்கு வாடகைக்குச் சென்றுவிட்டனர். மேலும், இப்பகுதியில் புதிதாக மனை வாங்க யாரும் வருவதில்லை.

சதுர அடிக்கு ரூ.2,600

இந்நிலையில், கையகப் படுத்தப்படும் நிலங்களுக்கு சதுர அடிக்கு ரூ.2,600 அளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாகத் தெரிகிறது. ஆனால், அந்த தொகையையும் அளிக்காமல், அரசுத் தரப்பில் காலதாமதம் செய்கின்றனர். அரசுத் தரப்பில் நீதிமன்ற மேல்முறையீட்டுக்குச் சென்றால், மேம்பாலப் பணிகள் முடிய எத்தனை ஆண்டுகள் ஆகுமோ?

இதேபோல, இந்தப் பகுதியில் மேலும் 2 மேம்பாலங்கள் கட்டத் திட்டமிடப்பட்டிருந்தது. இந்த மேம்பாலத்தின் பணிகள் தடைபட்டிருப்பதால், மற்ற 2 மேம்பாலப் பணிகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால், அப்பகுதிகளிலும் ரயில்வேகேட் அடிக்கடி மூடப்படுவதால், குறிப்பிட்ட நேரத்துக்கு வேலைக்குச் செல்ல முடியாமல் ஏராளமானோர் தவிக்கின்றனர். இது தொடர்பாக ஆட்சியரிடம் பலமுறை மனு அளித்துள்ளோம். மேலும், காத்திருப்பு போராட்டம், உண்ணாவிரதப் போராட்டங்களையும் நடத்தினோம்.

அப்போது எங்களை சமாதானப்படுத்தும் எம்எல்ஏ, எம்.பி. மற்றும் அரசு அதிகாரிகள், விரைவில் பிரச்சினையைத் தீர்ப்பதாக உறுதியளித்தனர். ஆனால், அதோடு சரி. அதற்குப் பிறகு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.

எனவே, 11 குடியிருப்போர் நலச் சங்கங்களை இணைத்து, வரும் 20-ம் தேதி நூதனப் போராட்டம் நடத்தத் திட்டமிட்டுள்ளோம். அதில், 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்பர் என்றார்.

இந்த மேம்பாலம் கட்டப்படும் பகுதியில் உள்ள திருமண மண்டப உரிமையாளர் ஏ.சுப்பிரமணியம் கூறும்போது, “முன்பு இந்த சாலையில் ஆயிரக்கணக்கில் வாகனங்கள் செல்லும். மக்கள் நடமாட்டம் அதிக அளவில் இருக்கும். தற்போது, இந்த மண்டபத்தில் நடக்கும் நிகழ்ச்சிகளில் பங்கேற்க வருவோர், பெரிதும் அவதிக்குள்ளாகின்றனர்.

இந்த மேம்பாலத்துக்கு கையகப்படுத்தப்படும் நிலம் சுமார் ஒரு ஏக்கர்தான். இங்கிருந்து 40 மீட்டர் தொலைவில் உள்ள திருச்சி சாலையில், ஒரு சென்ட் நிலம் ரூ.50 லட்சம், ரூ.60 லட்சத்துக்கு விற்கிறது. ஆனால், இங்கு சதுரஅடி சுமார் ரூ.3 ஆயிரத்துக்குத்தான் விலைபோகிறது.

இந்தப் பிரச்சினை தொடர்பாக முதலில் நில உரிமையாளர் ஒருவர்தான் நீதிமன்றத்தை நாடினார்.

பின்னர், அவருக்கு ஆதரவாக பலரும் திரண்டனர். இந்தப் பிரச்சினைக்குக் காரணம் அதிகாரிகள்தான். மக்களின் சிரமம் அவர்களுக்குப் புரியவில்லை” என்றார்.

அதிகாரிகள்தான் தீர்க்க வேண்டும்…

இந்தப் பிரச்சினை தொடர்பாக நீதிமன்றத்தை நாடிய நில உரிமையாளர் பி.ராமச்சந்திரன் கூறியபோது, “2013-ல் யாருக்கும் அறிவிப்பு வழங்காமல், சர்வீஸ் சாலை இல்லாமலேயே மேம்பாலத்தைக் கட்டத் தொடங்கினர். இதுபோல, பல குளறுபடிகள் நடைபெற்றன. அதனால்தான் வழக்குத் தொடர்ந்தோம்.

இது தொடர்பாக நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது, அதிமுக எம்எல்ஏ முன்னிலையில், சதுரஅடிக்கு ரூ.2,700 தருவதாக ஒப்புக்கொண்டனர். ஓராண்டாகியும் அந்த தொகையும் வழங்கப்படவில்லை. தற்போது, சதுரஅடிக்கு ரூ.2,600 வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால், “இவ்வளவு தொகையை அப்ரூவல் செய்ய எங்களுக்கு அதிகாரம் இல்லை. நில நிர்வாக ஆணையர்தான் இதுகுறித்து முடிவு செய்ய வேண்டும். நீதிமன்ற உத்தரவை அவருக்கு அனுப்புகிறோம்” என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இவ்வாறு கூறியும் 2 மாதங்களுக்கு மேலாகிவிட்டது. இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு அதிகாரிகள் கையில்தான் இருக்கிறது” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x