Published : 29 Nov 2016 02:18 PM
Last Updated : 29 Nov 2016 02:18 PM

மதுரை அரசு மருத்துவமனையில் மருந்தாளுநர் பற்றாக்குறை: 75 ஆண்டுகளாக புதிய பணியிடங்கள் உருவாக்கப்படாத அவலம்

பவள விழா கொண்டாடும், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை தொடங்கிய காலத்தில் இருந்து தற்போது வரை, கடந்த 75 ஆண்டுகளாக புதிய மருந்தாளுநர் பணியிடங்கள் உருவாக்கப்படவில்லை. அதனால், மருந்தாளுநர் பற்றாக்குறையால் அவர்களுக்கு கூடுதல் பணிச்சுமை, பதவி உயர்வில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

அரசு ராஜாஜி மருத்துவ மனையில் மருத்துவர்களுக்கு அடுத்து, மருந்தாளுநர் பணி முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. மருந்துகள் தட்டுப்பாடு ஏற்பட்டாலும், இருப்பு இருந்து அதை விநியோகிக்க தாமதம் ஏற்பட்டாலும் நோயாளிகள் சிகிச்சை பெறுவதில் சிக்கல், தாமதம் ஏற்படும். காலாவதியான மருந்துகளை நீக்குவது, அன்றாடம் மருந்து இருப்பை கண்காணிப்பது உள்ளிட்ட மற்ற பணிகளை மருந்தாளுநர்கள் கவனிக்க வேண்டும். 100 வெளிநோயாளிகளுக்கு ஒரு மருந்தாளுநரும், 200 உள்நோயாளிகளுக்கு ஒரு மருந்தாளுநரும் பணிபுரிய வேண்டும்.

ஆனால், வெறும் 58 மருந்தாளுநர்கள் மட்டுமே பணிபுரிகின்றனர். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட அண்ணா பஸ் நிலையம் விரிவாக்கப்பட்ட புதிய மருத்துவமனை கட்டிடத்துக்கும் மருந்தாளுநர்கள் பணிக்கு செல்கின்றனர். இதுதவிர இரவு, பகல் வேலை செய்வோர், விடுமுறையில் செல்வோர், வார விடுமுறையில் செல்வோரை கழித்தால் 5 பேர் பணியில் இருக்க மாட்டார்கள். அதனால், மருந்தாளுநர்களுக்கு ஆண்டு முழுவதும் கூடுதல் பணி சுமை ஏற்படுவதால் மருந்து விநியோகத்தில் தாமதம் ஏற்படுகிறது.

இதுகுறித்து தமிழ்நாடு அரசு அனைத்து மருந்தாளுநர் சங்க, மாவட்டத் தலைவர் எஸ்.பாண்டியன் அறிவுடை நம்பி கூறியதாவது:

அரசு ராஜாஜி மருத்துவமனை தொடங்கிய காலத்தில் ஒதுக்கப்பட்ட மருந்தாளுநர் பணியிடங்களே தற்போது வரை இருக்கிறது. 75 ஆண்டாக பல்வேறு காலக்கட்டங்களில் புதிய புதிய மருத்துவப் பிரிவுகள், கட்டிடங்கள் உருவாக்கப்படும்போது, புதிய மருத்துவர்கள், செவிலியர்கள் பணியிடங்களை கேட்டு வாங்குகின்றனர். ஆனால், புதிய மருந்தாளுநர் பணியிடங்கள் உருவாக்கப்படவில்லை. ஒரு சில நேரங்களில் மருந்துகள் இல்லாவிட்டால் முன்கூட்டியே மருத்துவர்களுக்கு தகவல் கொடுத்து விடுவோம்.

ஆனால், மருத்துவர்கள் கவனக்குறைவாக அந்த மருந்துகளை எழுதிக் கொடுத்தால் நோயாளிகள், ‘‘மருத்துவர்களே எழுதிக் கொடுக்கிறார்கள் நீங்கள் ஏன் கொடுக்கமாட்டேன் என்கிறீர்கள், ’’ என ஒட்டுமொத்த கோபத்தையும் எங்கள் மீது காட்டுகிறார்கள். அதையும் நாங்கள் சகித்துக் கொண்டு வேலை செய்கிறோம். இன்றுள்ள விலைவாசி உயர்வு, ரூபாய் நோட்டு தட்டுப்பாட்டால் ஒட்டுமொத்த மாவட்ட நோயாளிகளும் மருந்து, மாத்திரைகளுக்காக ராஜாஜி மருத்துவமனைக்கு வருவதால் தற்போது கூடுதல் வேலைப் பளு, மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்படுகிறது.

தற்போது சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை கட்டிடம், பாலரெங்காபுரம் புற்றுநோய் மருத்துவப்பிரிவு கட்டிடம் விரைவில் திறப்பு விழா காண உள்ளது. அதற்கான மருந்தாளுநர் பணியிடங்கள் இதுவரை உருவாக்கப்படவில்லை. ஏற்கெனவே மருத்துவமனையில் நிலவும் மருந்தாளுநர் பற்றாக்குறையில், இந்த புதிய மருத்துவமனை கட்டிடங்களின் மருந்தாளுநர் பணியின் ஒட்டுமொத்த சுமையும் எங்கள் மீதே விழும் என்றார்.

பதவி உயர்வு கிடைப்பதே அதிர்ஷ்டம்..!

மருந்தாளுநர்கள் கூறுகையில், மருந்தாளுநர், தலைமை மருந்தாளுநராகவும், மருந்து கிடங்கு அலுவலராகவும் பதவி உயர்வு பெறலாம். ஒரு சிலருக்கே அதிர்ஷ்ட வசமாக மருந்து கிடங்கு அலுவலராக ஓய்வு பெறும் கடைசி நேரத்தில் பதவி உயர்வு கிடைக்கும். அதுபோல், தலைமை மருந்தாளுநராக பதவி உயர்வு கிடைப்பது அவ்வளவு எளிதல்ல. மருந்தாளுநர்களுக்கான பணியிடங்கள் குறைவாக இருப்பதால், பதவி உயர்வு மிக அபூர்வமாகக் கிடைக்கிறது. அதனால், 80 சதவீதம் பேர் பதவி உயர்வு இல்லாமலேயே ஓய்வு பெறுகின்றனர்.

அடுத்த ஆண்டு ஓய்வுபெறும் 8 மருந்தாளுநர் பதவி உயர்வு கிடைக்காமலேயே ஓய்வு பெறுகின்றனர். அதனால், 5 கட்ட பதவி உயர்வு கொடுக்க வேண்டும். புதிய மருத்துவமனை பிரிவு கட்டிடங்கள் உருவாக்கும்போது, புதிய பணியிடங்களை உருவாக்க வேண்டும் என்பதே எங்களின் முக்கியக் கோரிக்கை என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x