Published : 13 Oct 2022 07:36 AM
Last Updated : 13 Oct 2022 07:36 AM

முதல்வர் திறந்துவைத்த ஸ்ரீபெரும்புதூர் பிள்ளைப்பாக்கம் சிப்காட் திட்ட அலுவலகத்தில் அருகருகே அமைக்கப்பட்ட இரு கழிப்பறை இருக்கைகள்: சமூக வலைதளங்களில் பரவிய சலசலப்பு

பிள்ளைப்பாக்கம் சிப்காட் திட்ட அலுவலகத்தில் தடுப்புகள் அமைக்கும் முன்பாக இருந்த கழிவறை.

காஞ்சிபுரம்: ஸ்ரீபெரும்புதூர் பிள்ளைப்பாக்கம் சிப்காட்டில் முதலமைச்சர் திறந்து வைத்த திட்ட அலுவலகத்தில் ஒரே கழிவறையில் 2 கழிப்பறை இருக்கைகள் அமைக்கப்பட்டிருந்த படம் சமூக வலைதளங்களில் வைரலானது. இதனைத் தொடர்ந்து தற்போது அந்த கழிவறையில் தடுப்புகள் அமைத்து தனித் தனி அறைகளாக பிரிக்கப்பட்டுள்ளன. காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அடுத்த பிள்ளைப்பாக்கம் பகுதியில் கடந்த 2008-ம் ஆண்டு சிப்காட் தொழிற்பூங்கா தொடங்கப்பட்டது. இந்த தொழிற் பூங்காவில் 84 தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டுள்ளன. இதன்மூலம் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்பை பெற்றுள்ளனர்.

இந்த சிப்காட்டில் செயல்படும் திட்ட அலுவலகத்துக்கு 4,784 சதுரஅடி பரப்பில் ரூ.1.80 கோடியில் திட்ட அலுவலகம் ஒன்று கட்டப்பட்டது. இந்த அலுவலகத்தை கடந்த இரு தினங்களுக்கு முன்னர் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார். இந்த அலுவலகத்தில் உள்ள கழிவறை ஒன்றில் ஒரே அறைக்குள் அருகருகே இரு வெஸ்டர்ன் டாய்லெட் இருக்கைகள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த படம் சமூக வலைதளங்களில் வைரலாகி பொதுமக்களை முகம் சுழிக்க வைத்தது.

தடுப்புகள் அமைக்கப்பட்ட பின் கழிவறை.

இதுகுறித்து அவளூர் பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சீனுவாசன் கூறும்போது ஒப்பந்ததாரர்களின் வேலையை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும். இல்லையென்றால் இதுபோன்ற செயல்கள்தான் நடக்கும். இதில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். தமிழ் உரிமைக் கூட்டமைப்பின் செயலர் காஞ்சி அமுதன் கூறும்போது, கழிவுநீர் மேலாண்மையில் அலுவலர்களுக்கு எந்த அடிப்படை அறிவும் இல்லாத தன்மையை இது காட்டுவதாகத் தெரிவித்தார்.

இது குறித்து பிள்ளைப்பாக்கம் சிப்காட் திட்ட அலுவலர் கவிதாவிடம் கேட்டபோது, ‘‘இந்த கழிவறை தடுப்புகள் மூலம் பிரிக்கப்பட்டது. அந்த தடுப்புகள் சரிவர பொருந்தாததால் அதனை சரிசெய்ய எடுத்திருந்தோம். அந்தநேரத்தில் படம் எடுத்து வெளியிடப்பட்டுள்ளது. கழிவறைஇதுபோன்று அமைக்கப்படவில்லை நேற்று முன்தினம் முறையாக தடுப்புகளை அமைத்து சரி செய்துவிட்டோம்’’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x