Published : 27 Nov 2016 11:56 AM
Last Updated : 27 Nov 2016 11:56 AM

தமிழகத்தில் கேரள மாவோயிஸ்ட்கள் ஊடுருவ வாய்ப்பு?: பழங்குடியினர் கிராமங்களில் வீடு, வீடாக போலீஸார் தீவிர சோதனை

கேரள மாநிலம் நிலம்பூர் வனப் பகுதியில் 2 நாட்களுக்கு முன் போலீஸாருக்கும், மாவோயிஸ்ட்களுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் 3 மாவோயிஸ்ட்கள் கொல்லப்பட்டனர். மேலும், 15 பேர் தப்பிவிட்டனர். இந்த சம்பவம் தமிழக மலைக் கிராமங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

துப்பாக்கிச் சண்டையில் காயமடைந்த மாவோயிஸ்ட்கள் தமிழகத்தின் கோவை பகுதிக்குள் நுழைய வாய்ப்புள்ளதாகவும், இங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற முயற்சிக்கலாம் என்றும் போலீஸார் சந்தேகிக்கின்றனர்.

இதையடுத்து, சந்தேகத்துக்குரிய நபர்கள் சிகிச்சைக்கு வந்தால், உடனே தகவல் தெரிவிக்குமாறு கூறி, எல்லையோர மருத்துவமனைகளுக்கு 4 செல்போன் எண்களை போலீஸார் அளித்துள்ளனர். மேலும், பல்வேறு மலைக் கிராமங்களிலும் வீடு, வீடாகச் சோதனை நடத்தி வருகின்றனர் இரு மாநில போலீஸார்.

280 பழங்குடி கிராமங்கள்

மலைகள் சூழ்ந்துள்ள கேரள அட்டப்பாடியைப் பொறுத்தவரை, சோலையூர், அகழி, புதூர் ஆகிய 3 ஊராட்சிகளுக்கு உட்பட்ட 200-க்கும் மேற்பட்ட பழங்குடியின கிராமங்கள் உள்ளன. அதேபோல, இதையொட்டி தமிழகத்திலும் 80-க்கும் மேற்பட்ட மலைக் கிராமங்கள் உள்ளன.

தமிழக எல்லையில் அமைந்துள்ள 70-க்கும் மேற்பட்ட கிராமங்களில் கடந்த 5 ஆண்டுகளாக மாவோயிஸ்ட்கள் நடமாட்டம் இருந்துள்ளது. பழங்குடியின மக்களுக்கு நிலங்களை மீட்டுத் தருவதாகக் கூறி, இங்குள்ள இளைஞர்களை மாவோயிஸ்ட் குழுக்கள் மூளைச் சலவை செய்து, ஆயுதப் பயிற்சி அளித்து வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, வனத் துறை ஜீப் மற்றும் சோதனைச்சாவடி எரிக்கப்பட்டது. பல இடங்களில் போலீஸார், மாவோயிஸ்ட்களிடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. கேரள மாநிலத்தில் தேடப்பட்ட மாவோயிஸ்ட்கள் சிலர் கடந்த ஆண்டுகளில் கோவை, திருப்பூரில் கைது செய்யப்பட்டனர்.

கோவை, திருப்பூர் பகுதிகளில், கேரள, கர்நாடக மாவோயிஸ்ட்கள் பதுங்கியிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், தமிழக போலீஸார் கண்காணிப்பை தீவிரப்படுத்தினர்.

அதை தொடர்ந்து, தற்போது நிலம்பூரில் மாவோயிஸ்ட்- போலீஸார் துப்பாக்கி சண்டை நடந்துள்ளது. தப்பிய மாவோயிஸ்ட்கள் கோவையில் அடைக்கலமாக வரலாம் என்பதால், எல்லையில் தமிழக போலீஸார் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

இரு மாநில எல்லையோர கிராமங்களான பட்டிசாலை, கோபனாரி, முள்ளி, வீரக்கல், நீலாம்பதி, சிறுகிணறு, தோண்டை,நெல்லியாம்பதி உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட பழங்குடி கிராமங்களை, நவீன ரக ஆயுதங்களுடன் போலீஸார் முற்றுகையிட்டுள்ளனர்.

இவர்கள் பல குழுக்களாகப் பிரிந்து, இங்குள்ள ஒவ்வொரு வீட்டுக்கும் சென்று விசாரிக்கின்றனர். கடந்த சில மாதங்களுக்குள் புதிய நபர்கள் வந்திருந்தால், அவர்கள் யார்? எங்கிருந்து வந்துள்ளார்கள். அவர்களின் தொழில் விவரம். இங்கு வந்து தங்கியிருப்பதன் நோக்கம் போன்றவற்றை விசாரிக்கின்றனர்.

மிகவும் சந்தேகத்துக்குரிய நபர்களை முகாம்களுக்கு அழைத்துச் சென்று விசாரிப்பதும் நடக்கிறது. பூர்வீகமாக கிராமங்களிலேயே வாழ்பவர்களிடம், “புதிதாக வருவோர் யாராக இருந்தாலும், போலீஸுக்குத் தெரிவிக்க வேண்டும். புதியவர்கள் யாருக்கும், எவ்வித உதவியும் செய்யக்கூடாது. அதை மீறி யாராவது உதவி செய்வது தெரியவந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று எச்சரித்து வருகின்றனர்.

இதுதவிர, தப்பியோடிய மாவோயிஸ்ட்களின் புகைப்படங்களுடன், கேரளாவில் இருந்து வரும் அனைத்து வாகனங்களையும் தீவிர சோதனை நடத்துகின்றனர். மலைக் கிராமங்கள் மற்றும் சுற்றியுள்ள வனப் பகுதியில் தமிழக நக்சல் தடுப்பு மற்றும் அதிரடிப் படையினர் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

இதேபோல, கேரள மாநிலம் அட்டப்பாடி பழங்குடியின கிராமங்களிலும் தேடுதல் வேட்டை தீவிரமாகியுள்ளது.

ஆனால், அங்கு வீடு, வீடாக தேடுதல் பணி நடைபெறவில்லை என்று அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து தாவளம் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் கூறும்போது, “துப்பாக்கிச் சண்டை நடந்த வனப் பகுதிக்கு சாலை வழியில் என்றால் 70 கிலோமீட்டர் தூரம் செல்ல வேண்டும். மலைக் காடுகளில் புகுந்து சென்றால் 40 கிலோமீட்டர் தூரமே இருக்கும்.

அட்டப்பாடி மலைக் கிராமங்களில் போலீஸாரின் தேடுதல் வேட்டை தொடர்வதால், கிராம மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. அவர்கள் அடிக்கடி வந்து சோதிப்பது, பாதுகாப்பாகவே உள்ளது.

மக்களே காட்டிக் கொடுப்பர்

அட்டப்பாடி பகுதியில் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழக மக்கள் வசிக்கின்றனர். பழங்குடி மக்கள் கிராமங்களில் மாவோயிஸ்ட் ஊடுருவல் இருப்பதால், அவர்களுக்கு யார் உதவி செய்தாலும், ஒட்டுமொத்த பழங்குடியினர் மீதோ அல்லது தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் மீதோ பழிவர வாய்ப்புள்ளது. எனவே, அனைவரும் உஷாராகவே உள்ளனர்.

சந்தேகப்படும் நபர்கள் யார் வந்தாலும், இங்கே வசிப்பவர்களே காட்டிக் கொடுத்துவிடும் சூழ்நிலை உள்ளது. அந்த சூழலை கேரள போலீஸாரும் புரிந்து கொண்டுள்ளனர்.

ஊருக்குள் போலீஸார் சிறு குழுவாக வருகின்றனர். பொதுவாக விசாரித்துவிட்டுச் செல்கிறார்கள். இதை வைத்துப் பார்க்கும்போது, காயம்பட்டு தப்பியவர்கள் தமிழகத்துக்கு வருவதற்கே சாத்தியம் உண்டு.

எனவேதான், தமிழக, கேரள எல்லையோரக் கிராமங்களில் மட்டும் வீடு, வீடாக தேடுதல் பணி நடக்கிறது” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x