Published : 12 Oct 2022 10:19 PM
Last Updated : 12 Oct 2022 10:19 PM
மதுரை: சம்பளம் வழங்க வலியுறுத்தி துணைவேந்தர் அலுவலகத்தை முற்றுகையிட்டு, காமராசர் பல்கலைக்கழக பேராசிரியர்கள், அலுவலர்கள் போராட்டம் நடத்தினர்.
இப்பல்கலைக்கழகத்தில் 150-க்கும் மேற்பட்ட உதவி மற்றும் இணை பேராசிரியர்களும், 280-க்கும் மேற்பட்ட நிரந்தர அலுவலர்களும், 300 தற்காலிக பணியாளர்களும், 200க்கும் மேற்பட்ட தொலை நிலைக்கல்வி அலுவலர்கள், ஊழியர்களும், பணிபுரிகின்றனர். இவர்களுடன் சுமார் 400க்கும் மேற்பட்ட ஓய்வூதியர்களும் உள்ளனர். இவர்களுக்கு ஒவ்வொரு மாதமும் சம்பளம், ஓய்வூதியம் வழங்க சுமார் ரூ.10.5 கோடி தேவை இருக்கிறது.
கடந்த சில மாதமாகவே பல்கலைக் கழகம் நிதி நெருக்கடியில் சிக்கியதால் ஒவ்வொரு மாதமும் பேராசிரியர்கள், ஓய்வூதியர்கள் உள்ளிட்டோருக்கு உரிய தேதியில் சம்பளம் வழங்க முடியாமல் நிர்வாகம் தவிக்கிறது. வருவாயை பெருக்க, துணைவேந்தர் ஜெ.குமார் சில நடவடிக்கையை எடுத்தாலும், அது கைகொடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது. செப்டம்பர் மாத்ததிற்கான சம்பளம் நேற்று வரை வழங்கவில்லை. இதனால் வங்கி கடனுக்கான தவனை, அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யமுடியவில்லை என ஊழியர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
இவற்றைகாட்டிலும் தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்கு இன்னும் 10 நாட்களே இருக்கும் நிலையில், குழந்தைகளுக்கு புத்தாடைகள் வாங்க முடியாமல் இவ்வாண்டு வறட்சி தீபாவளியாக அமையுமோ என பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்கள், அலுவலர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இந்தக் காரணங்களை சுட்டிக்காட்டி பல்கலைக்கழக பேராசிரியர்கள், அலுவலர்கள் துணைவேந்தர் அலுவலகத்தை முற்றுகையிட்டும், பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலை அருகே அமர்ந்தும் உடனடியாக சம்பளம் வழங்க வலியுறுத்தி போராட்டம் நடத்தினர். காலை 10 முதல் 12 மணி வரை நீடித்தது. அவர்களிடம் துணைவேந்தர் ஜெ.குமார் பேச்சுவார்த்தை நடத்தினர். பல்கலைக்கழக அலுவலர்கள் சங்க முக்கிய நிர்வாகிகள், சில பேராசிரியர்களை அவரது அலுவலகத்திற்கு அழைத்து பேசினார். முடிவில், விரைவில் சம்பளம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் உறுதியளித்ததை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.
போராட்டம் தொடர்பாக சங்க நிர்வாகிகள் கூறுகையில், ‘‘ஒவ்வொரு மாதமும் சம்பள பிரச்னைக்கு தீர்வு கிடைப்பதாக தெரியவில்லை. உயர்கல்வி அமைச்சர், செயலரிடம் நேரில் சென்று பல்கலைக்கழகத்திற்கான நிதியை பெற துணைவேந்தர் முயற்சிக்க வேண்டும். கடந்தமுறை பல்கலைக்கழகத்திற்கு வந்த உயர்கல்வி அமைச்சர் பொன்முடி, இனிமேல் சம்பளப் பிரச்னை இருக்காது என நம்பிக்கை தெரிவித்தார். இதைத்தொடர்ந்து துணைவேந்தர், பல்கலை நிர்வாகத்தினர் அமைச்சரை சென்னையில் நேரில் சந்திக்கவில்லை. போதிய நிதி ஆதாரங்களை பெருக்க துணைவேந்தர் நடவடிக்கை எடுக்கவேண்டும்’’ என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT