Published : 12 Oct 2022 06:57 PM
Last Updated : 12 Oct 2022 06:57 PM
சென்னை: திமுகவை வீழ்த்த ஓபிஎஸ்-ன் அழைப்பை ஏற்று கூட்டணிக்குச் செல்ல தயாராக இருப்பதாக அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
சென்னையில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம் அதிமுக ஒன்றிணைவது தொடர்பாக ஓபிஎஸ் விடுத்த அழைப்பு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், " நாங்கள் அனைவரும் ஒருதாய் மக்களாக இருந்தது உண்மை. அவர்கள் எங்களை வெளியேற்றியதால் தனி இயக்கத்தை தொடங்கினோம். எனவே இனிமேல் அவர்களுடன் சென்று ஒன்றாக இணைவது என்பது எங்களுக்கும் நல்லதல்ல, அவர்களுக்கும் நல்லதல்ல என்று நான் நினைக்கிறேன்.
ஓபிஎஸ் கூட்டணிக்கு வாருங்கள் என்றுதான் அழைப்பு விடுத்துள்ளார். அவருடைய கருத்தை நான் வரவேற்கிறேன் என்று ஏற்கெனவே கூறியுள்ளேன். திமுக என்ற தீயசக்தியை எதிர்ப்பதற்காக சட்டமன்ற பொதுத் தேர்தலின்போதே நான் விட்டுக்கொடுத்தேன். ஆனால் ஒரு சிலரின் ஆணவம், அகங்காரம், ஆட்சி அதிகார திமிர், பணத்திமிர் காரணமாக அவர்கள் கோட்டைவிட்டார்கள்.
வருங்காலத்தில் எல்லோரும் திருந்துவார்கள் என எண்ணுகிறேன். ஒன்றிணைய வேண்டும் என்று சொல்வதை, கூட்டணிக்கான அழைப்பாகத்தான் பார்க்கிறேன். அமமுகவைப் பொருத்தவரை திமுகவை வீழ்த்த ஒன்றிணைய, அதாவது கூட்டணி அமைக்க தயாராக இருக்கிறோம்" என்று கூறினார்.
முன்னதாக திமுக அரசின் மின் கட்டண உயர்வைக் கண்டித்து அமமுக சார்பில் பல்வேறு இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் அருகில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில், டிடிவி தினகரன் கலந்துகொண்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT