Published : 12 Oct 2022 05:41 PM
Last Updated : 12 Oct 2022 05:41 PM
சென்னை: உயர் நீதிமன்ற முழு அமர்வு பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் பணப்பலன் வழங்காததை எதிர்த்து ஆசிரியர் தொடர்ந்த வழக்கில், தமிழக பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நாளை நேரில் ஆஜராகி விளக்கமளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் அனைத்து இடைநிலை ஆசிரியர்களுக்கும் ஒரே மாதிரியான ஊதியம் நிர்ணயம் செய்து, 1993-ல் பிறப்பிக்கப்பட்ட அரசாணையின் அடிப்படையில், பணப்பலன்கள் வழங்கக் கோரி ஆசிரியர்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட நூற்றுக்கணக்கான வழக்குகளில், மனுதாரர்களுக்கு பண பலன்களை வழங்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதுதொடர்பான மேல் முறையீட்டு வழக்குகளில், வெவ்வேறு அமர்வுகள், வெப்வேறு தீர்ப்புகளை வழங்கியதால், வழக்குகள் மூன்று நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றப்பட்டது.
இதனை விசாரித்த மூன்று நீதிபதிகள் அமர்வு, 1993-ம் ஆண்டு அரசாணையை அனைத்து இடை நிலை ஆசிரியர்களுக்கும் 2017 மார்ச் மாதத்திலிருந்து அமல்படுத்த வேண்டும் என்றும், 2016-ம் ஆண்டுக்கு பிறகு பண பலன்கள் கோரும் வழக்குகளை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கூடாது எனவும் உத்தரவிட்டிருந்தது. முழு அமர்வு உத்தரவுப்படி தமக்கு பண பலன்கள் வழங்கப்படவில்லை எனக்கூறி ஹரிஹரன் என்ற ஆசிரியர் மீண்டும் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு கடந்தமுறை விசாரணைக்கு வந்தபோது, அரசுத்தரப்பில், 2016-ம் ஆண்டுக்கு பிறகு புதிய வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளக் கூடாது என முழு அமர்வு உத்தரவிட்டதால் நிவாரணம் கோர மனுதாரருக்கு உரிமையில்லை என தெரிவிக்கப்பட்டது. இந்த வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதிகள், நிவாரணம் எப்போது வழங்கப்படும் என்பது குறித்து அரசு விளக்கமளிக்க உத்தரவிட்டிருந்தனர்.
இந்த வழக்கு நீதிபதிகள் பரேஷ் உபாத்யாய் மற்றும் பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத்தரப்பில், பணப்பலன்கள் வழங்குவது தொடர்பாக அரசின் கருத்துக்களைக் கேட்டு தெரிவிப்பதாக கூறப்பட்டது. இதையடுத்து, விசாரணைக்கு அரசுத்தரப்பு முழு ஒத்துழைப்பு அளிக்கவில்லை எனக்கூறிய நீதிபதிகள், பள்ளிக்கல்வித் துறை ஆணையர் நாளை நேரில் ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT