Published : 12 Oct 2022 04:14 PM
Last Updated : 12 Oct 2022 04:14 PM

தமிழகத்தில் உள்ள டாடா நிறுவனத்தில் பணி புரிய வடமாநிலத்தில் இருந்து அழைத்துவரப்படும் பணியாளர்கள் - வேல்முருகன் கண்டனம்

வேல்முருகன் | கோப்புப் படம்.

சென்னை: தமிழ்நாட்டை சேர்ந்த ஏராளமான படித்த இளைஞர்கள் படிப்புக்கேற்ற வேலையின்றி தவித்து வரும் நிலையில் டாடா நிறுவன பணிக்காக வட மாநிலப் பெண்கள் 850 பேர் வரவழைக்கப்பட்டிருப்பது சட்டப்படி தவறு என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

கிருஷ்ணகிரி மாவட்டம் கூத்தனப்பாலை டாடா எலக்ட்ரானிக் நிறுவனத்தில் பணிபுரிவதற்காக ஜார்க்கண்ட்டிலிருந்து 860 பெண் தொழிலாளர்கள் தனி தொடர் வண்டி மூலம் அழைத்து வரப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. 18 வயதிலிருந்து 21 வயது வரை உள்ள இளம்பெண்கள் மட்டுமே பணிக்கு வேண்டும் என்றும், அவர்கள் பன்னிரெண்டாம் வகுப்பிற்கு மேல் படித்திருக்கக் கூடாது என்றும் டாடா நிறுவனம் வெளிப்படையாகவே அறிவித்திருக்கிறது. தமிழகத்தைச் சேர்ந்த ஏராளமான படித்த இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் படிப்புக்கேற்ற வேலையின்றி தவித்து வரும் நிலையில், தமிழகத்தில் செயல்படும் தனியார் நிறுவனமான டாடா, தமிழர்களைப் புறக்கணித்துவிட்டு வெளி மாநிலங்களிலிருந்து இளம் பெண்களை அழைத்துவந்திருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.

சட்டவிரோத அறிவிப்பின் மூலம் வடமாநிலப் பெண்களை பணியமர்த்திய டாடா நிறுவனத்தின் நடவடிக்கை வன்மையாகக் கண்டிக்கதக்கது. தமிழ்நாட்டை சேர்ந்த இளம் பெண்களுக்கு பணி வழங்க, டாடா நிர்வாகம் முன் வர வேண்டும். மேலும், தமிழகத்தில் உள்ள தனியார் நிறுவனங்களில் உள்ள பணியிடங்களுக்கு, மண்ணின் மக்களுக்கே முன்னுரிமை வழங்க, அந்நிறுவனங்களுக்கு தமிழ்நாடு அரசு அறிவுறுத்தல் வழங்க வேண்டும். இதற்காக, தனியார் நிறுவனங்களை கண்காணிக்க அரசு தனி குழு ஒன்றை அமைக்க வேண்டும்.

இவ்வாறு வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x