Published : 12 Oct 2022 12:11 PM
Last Updated : 12 Oct 2022 12:11 PM
சென்னை: அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்குவது குறித்து தொழிற்சங்கங்களை அழைத்து பேச வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ''தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்கள், மின்வாரியம் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவன பணியாளர்களுக்கு தீப ஒளி போனஸ், ரூ.10,000 முன்பணம் ஆகியவற்றை வழங்குவது குறித்து அரசுத் தரப்பிடமிருந்து எந்த அறிவிப்பும் இல்லை. இந்த விஷயத்தில் தேவையற்ற தாமதம் கூடாது.
போனஸ், முன்பணம் ஆகியவை குறித்து பேச்சு நடத்த வேண்டும் என்று பாட்டாளி தொழிற்சங்கப் பேரவை உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் இது தொடர்பாக நிர்வாகங்களிடம் கடிதம் கொடுத்தும் எந்த முன்னேற்றமும் இல்லை. அரசுத் தரப்பின் மவுனம் ஊழியர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.
தீப ஒளி திருநாளுக்கு இன்னும் 11 நாட்கள் மட்டுமே உள்ளன. போனஸ் மற்றும் முன்பணத் தொகை மூலம் தான் தீப ஒளிக்கு தேவையான புத்தாடை உள்ளிட்ட பொருட்களை தொழிலாளர்களால் வாங்க முடியும். இந்த அவசியத்தையும், அவசரத்தையும் தமிழக அரசு உணர வேண்டும்.
தொழிற்சங்கங்களுடன் பேச்சு நடத்தாமல் அரசு தன்னிச்சையாக போனஸ் அறிவிக்கக் கூடாது. தொழிற்சங்கங்களுடன் பேச்சு நடத்தி குறைந்தபட்சம் 25% போனஸ் மற்றும் தீப ஒளி முன்பணம் வழங்க அரசும், பொதுத்துறை நிறுவனங்களும் முன்வர வேண்டும். இவ்வாறு அன்புமணி தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT