Published : 12 Oct 2022 11:02 AM
Last Updated : 12 Oct 2022 11:02 AM

“ஆப்ரேஷன் மின்னல்... திமுக அரசின் விளம்பரக் குழு தயாரித்து கொடுத்த திரைக்கதை” - இபிஎஸ் சாடல் 

எடப்பாடி பழனிசாமி | கோப்புப்படம்

சென்னை: "திமுக அரசின் விளம்பரக் குழு தயாரித்துக் கொடுக்கும் திரைக் கதையை அரங்கேற்றும் வேலையை தமிழகக் காவல் துறை உடனடியாகக் கைவிட வேண்டும்" என்று ‘ஆபரேஷன் மின்னல்’ குறித்து அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: "தமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் அரசின் ஆட்சியில், நிர்வாகத் திறமையற்ற, தடுமாறும் தலைமையின் கீழ் நடைபெறும் ஆட்சியில் பல்வேறு விசித்திரங்கள் அரங்கேறி வருகின்றன. கடந்த 16 மாத கால ஆட்சியில் சட்டம் - ஒழுங்கு அடியோடு சீர்குலைந்து, கொலை, கொள்ளை, திருட்டு, வழிப்பறி, பாலியல் வன்கொடுமைகள், போதைப் பொருட்கள் புழக்கம் போன்றவை அதிகரித்துக்கொண்டே இருப்பதால் நிலைமை மிகமிக மோசமாகிவிட்டது. இதனால் மக்களும், பெண்களும் வீதிகளில் நடமாட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஆளும் கட்சியினரின் அராஜகமோ எல்லை மீறிப் போய்விட்டது.

தறிகெட்டு ஓடும் குதிரைகள் போல், அமைச்சர்கள் கட்டுப்பாடின்றி தான்தோன்றித்தனமாக செயல்படுகிறார்கள். திறமையற்ற முதல்வராக ஸ்டாலின் இருக்கிறார் என்று நான் சொன்னபோது, அவருடைய தொண்டரடிப் பொடியாழ்வார்களுக்கு கோபம் கொப்பளித்தது. ஆனால், இப்போது அவரே தன்னால் யாரையும் கட்டுப்படுத்த முடியவில்லை என்று புலம்பியதை இந்த நாடே பார்த்தது.

எல்லாவற்றிற்கும் மேலாக, தமிழகக் காவல்துறைத் தலைவர், ‘ஆப்ரேஷன் மின்னல்’ என்று மாநிலம் முழுவதும் 72 மணி நேரத்தில் 3,905 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக செய்தி வெளியிடுகிறார். இவர்களில் 705 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்றும், 2,390 ரவுடிகளிடம் உறுதிமொழிப் பத்திரம் பெறப்பட்டுள்ளது என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன. சட்டமன்றம் எப்போதெல்லாம் கூட்டப்படும் என்ற செய்தி வருகிறதோ, அப்போதெல்லாம் இதுபோல் பல காட்சிகள் தமிழகத்தில் அரங்கேறும். இப்படி ஆப்பரேஷன் மின்னல் பற்றியும், இதன் காரணமாக ரவுடிகள் அண்டை மாநிலங்களுக்கு ஓடிவிட்டதாகவும் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

காவல் துறைத் தலைவரின் இந்த அறிக்கையை தமிழக மக்கள் படிக்கும்போதே,சென்னையை அடுத்துள்ள ஊத்துக்கோட்டையில் உள்ள வடக்கு மண்டல ஐஜியின் பூர்வீக வீட்டில் திங்கட்கிழமை அன்று கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம், சிசிடிவி கேமரா, ஹார்டு டிஸ்க்குகள் திருடப்பட்டுள்ளன என்று நாளிதழ்களிலும், ஊடகங்களிலும் செய்திகள் வருகின்றன. பணியில் உள்ள ஒரு ஐஜி-யின் வீட்டிற்குள் ஆபரேஷன் மின்னலால் வெளி மாநிலங்களுக்கு ஓடிப்போன ரவுடிகளும், கொள்ளையர்களும் 24 மணி நேரத்தில் மீண்டும் எப்படி வந்தார்கள் என்பது புரியாத புதிராக உள்ளது.

மக்களின் உயிருக்கும், உடைமைக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டியது காவல் துறையின் முக்கிய பொறுப்பாகும். அதை விடுத்து, திமுக அரசின் விளம்பரக் குழு தயாரித்துக் கொடுக்கும் திரைக் கதையை அரங்கேற்றும் வேலையை தமிழகக் காவல்துறை உடனடியாகக் கைவிட வேண்டும்.

உறுதிமொழிப் பத்திரம் எழுதி வாங்கிய 2,390 நபர்களை கண்காணிப்பு வளையத்தில் வைக்கும் வேலையை காவல்துறை செய்கிறதா என்பதற்கு சரியான விளக்கமில்லை. இவர்களை சுதந்திரமாக நடமாடவிட்டதன் மர்மம் என்ன என்பதை விளக்க வேண்டும் என்றும்; இனியாவது சட்டம் - ஒழுங்கை கட்டுக்குள் வைக்க வேண்டும் என்றும், காவல் துறைக்கு பொறுப்பு வகிக்கும் இந்த திமுக அரசின் முதல்வர் ஸ்டாலினை வலியுறுத்துகிறேன்" என்று அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x