Published : 12 Oct 2022 06:08 AM
Last Updated : 12 Oct 2022 06:08 AM
சென்னை: மறைந்த எழுத்தாளர் கி.ராஜநாராயணன் கல்வி பயின்ற கோவில்பட்டி அடுத்த இடைசெவல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி,அவரது நினைவாக ரூ.25 லட்சத்தில் பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டுள்ளது. புதுப்பிக்கப்பட்ட பள்ளிக் கட்டிடத்தை முதல்வர் ஸ்டாலின், காணொலி மூலம் திறந்து வைத்தார்.
இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: ‘கரிசல் இலக்கியத்தின் முன்னத்தி ஏர்’ என போற்றப்படும் கி.ராஜநாராயணன் (கி.ரா.), தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அடுத்த இடைசெவல் கிராமத்தில்கடந்த 1922-ல் பிறந்தார். பேச்சுத்தமிழில் மண்மணம் மிக்க கதைகளை படைத்தளித்தவர். தமிழ் எழுத்துலகில் தனக்கென ஒரு பாணியை வகுத்துக்கொண்ட கி.ரா., கடந்த 2021 மே 17-ம் தேதி 99-வது வயதில் மறைந்தார். ‘‘கி.ராஜநாராயணனின் புகழுக்கு பெருமை சேர்க்கும் வகையில், அவர் பயின்ற இடைசெவல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிபழமை மாறாமல் புதுப்பிக்கப்படும்’’ என்று முதல்வர் ஸ்டாலின் கடந்த ஆண்டு அறிவித்தார்.
அதன்படி, 1946-ம் ஆண்டு கட்டப்பட்டு பல்வேறு கால சூழ்நிலைகளால் பொலிவை இழந்தஇடைசெவல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக் கட்டிடம் ரூ.25 லட்சம் மதிப்பில் புதுப்பிக்கப்பட்டது. இந்த பள்ளிக் கட்டிடத்தை தலைமைச் செயலகத்தில் இருந்தபடி முதல்வர் ஸ்டாலின்நேற்று காணொலி மூலம் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கே.ஆர்.பெரியகருப்பன், அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தலைமைச் செயலர் இறையன்பு, ஊரக வளர்ச்சித் துறை செயலர் அமுதா, பள்ளிக்கல்வித் துறை செயலர் காகர்லா உஷா, ஊரக வளர்ச்சித் துறை ஆணையர் தாரேஸ் அகமது உள்ளிட்டோர் பங்கேற்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. புதுப்பிக்கப்பட்ட பள்ளியில் நடந்த விழாவில் கூடுதல் ஆட்சியர்சரவணன் குத்துவிளக்கு ஏற்றினார். மாணவ மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடந்தன. கி.ரா.வின் மகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT