Published : 12 Oct 2022 04:20 AM
Last Updated : 12 Oct 2022 04:20 AM
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இனிப்பு, கார வகைகள் தயார் செய்பவர்கள் உணவுப் பாதுகாப்பு சட்ட விதிகளின்படி உரிமம் அல்லது பதிவுச் சான்றிழ் பெற்று விற்பனையில் ஈடுபட வேண்டும், என மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தீபாவளி பண்டிகை காலங்களில் தற்காலிக உணவுக் கூடங்கள், திருமண மண்டபங்கள், வீடுகள் மற்றும் சீட்டு நடத்துபவர்கள் ஆர்டரின் பேரில் தயாரிக்கப்படும் இனிப்பு மற்றும் கார வகைகளுக்கு, உணவுப் பாதுகாப்பு சட்ட விதிகளின்படி, உரிமம் அல்லது பதிவுச் சான்றிதழ் பெற்று விற்பனை செய்ய வேண்டும்.
இனிப்பு மற்றும் பேக்கரி பொருட்கள் தயாரிப்பாளர்கள், தரமான கலப்படமில்லாத மூலப்பொருட்களைக் கொண்டு சுகாதாரமான முறையில் தயாரித்து, பாதுகாப்பான உணவுப் பொருட்களை மக்களுக்கு வழங்க வேண்டும். முதலில் தயாரித்து, முதலில் விற்பனை - முறையை பின்பற்ற வேண்டும். அதற்கான பதிவேடுகளை பராமரிக்க வேண்டும். தரமான நெய் மற்றும் எண்ணெய் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
ஒரு முறை பயன்படுத்திய சமையல் எண்ணெய்யை மறுபடியும் சூடுபடுத்தி உணவு தயாரிக்க பயன்படுத்தக்கூடாது. பண்டிகை கால இனிப்பு வகைகளை பரிசு பேக்கிங் செய்யும் போது, பாலால் செய்யப்பட்ட இனிப்பு வகைகளை மற்ற இனிப்பு பொருட்களுடன் பேக்கிங் செய்து விற்பனை செய்யக்கூடாது.
பேக்கிங் செய்யப்பட்ட உணவுப் பொருட்கள் மற்றும் சில்லறை இனிப்பு பொருட்களுக்கு, விவரச்சீட்டு இடும் போது அதில், தயாரிப்பாளரின் முழு முகவரி, உணவுப் பொருளின் பெயர், தயாரிப்பு (அ) பேக்கிங் செய்யப்பட்ட தேதி, காலாவதி தேதி, உணவு பாதுகாப்பு துறையின் உரிமம் எண், பேட்ஜ் எண், லாட் எண் சைவ குறியீடு மற்றும் அதில் பயன்படுத்தும் பொருட்களின் விவரம் ஆகியவற்றை அவசியம் குறிப்பிட வேண்டும்.
பண்டிகை காலத்தில் மட்டும் பலகாரங்கள் தயாரிப்பவர்கள் உட்பட அனைத்து தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்களும் உடனடியாக https://foscos.fssai.gov.in என்ற இணைய தளத்தில் விண்ணப்பித்து, இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டத்தின் கீழ் தங்களது வணிகத்தினை பதிவு செய்து உரிமம் அல்லது பதிவு பெற்றுக் கொள்ள வேண்டும்.
பேக்கிங் செய்யப்பட்ட பொருட்கள் மற்றும் சில்லறை உணவு பொருட்களுக்கு விவரச்சீட்டு இருந்தால் மட்டுமே வாங்கி உபயோகிக்க வேண்டும். பொதுமக்கள் உணவுப் பொருட்கள் சம்பந்தமாக 94440-42322 என்ற எண்ணுக்கு குறுஞ்செய்தி வாயிலாகவோ அல்லது வாய்மொழியாகவோ புகார் தெரிவிக்கலாம், என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT