Published : 12 Oct 2022 07:18 AM
Last Updated : 12 Oct 2022 07:18 AM
சென்னை/பெரும்பாக்கம்: சென்னையில் எந்தப் பகுதியிலும் தண்ணீர் தேங்காத வகையில், மழைநீர் வடிகால்களை அமைக்க வேண்டும் என்று அமைச்சர் எ.வ.வேலு, அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
இது தொடர்பாக, பொதுப்பணித் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் இம்மாத இறுதியில் பருவமழை தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னை நகரின் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்காமல் இருக்க, போர்க்கால அடிப்படையில் மழைநீர் கால்வாய்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இப்பணிகளை பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு நேற்றுஆய்வு செய்தார். சென்னை உள்வட்டச்சாலை, ஜாபர்கான்பேட்டை காசி திரையரங்கம் அருகில், உதயம் திரையரங்கம் அருகில் உள்ள பகுதி, வளசரவாக்கம் கைகான்குப்பம் பகுதி, நந்தம்பாக்கம் கால்வாய், பள்ளிக்கரணை ஜெருசலம் கல்லூரி எதிரில், நாராயணபுரம், செம்மஞ்சேரி உள்ளிட்ட பகுதிகளில், மழைநீர் கால்வாய் அமைக்கும் பணிகளின் முன்னேற்றம் தொடர்பாக அவர் ஆய்வு மேற்கொண்டார். மழைநீர் தேங்கும் பகுதிகளைக் கண்டறிந்து, உடனுக்குடன் மழைநீரை அகற்றும் வகையிலும், சாலையில் மழைநீர் தேங்கும் நிலை ஏற்படாத வகையிலும் வடிகால் அமைக்குமாறு அலுவலர்களுக்கு அவர் அறிவுறுத்தினார்.
மேலும், கால்வாய் பணிகள் தொடர்பாக அதிகாரிகளுடன் விவாதித்து, கட்டுமானப் பணிகளை சிறப்பாகவும், விரைவாகவும் மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார். ஆய்வின்போது, நெடுஞ்சாலைத் துறை தலைமைப் பொறியாளர் இரா.சந்திரசேகர், கண்காணிப்புப் பொறியாளர் செந்தில், கோட்டப் பொறியாளர் ரவி மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரூ.20 கோடியில்... பள்ளிக்கரணை பகுதியில் மழைநீர் பாதிப்பை தடுக்கும் வகையில் ரூ.20 கோடியில் கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணியையும் ஆய்வு செய்த அமைச்சர் எ.வ.வேலு, பணிகளைத் துரிதமாகவும், தரமாகவும் முடிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT