Published : 11 Oct 2022 04:28 PM
Last Updated : 11 Oct 2022 04:28 PM

வடகிழக்கு பருவமழை: பொருட்கள் சேதமாவதை தவிர்க்க ரேஷன் கடைகளுக்கு 17 அறிவுறுத்தல்கள் 

சென்னை: வடகிழக்கு பருவமழை காலத்தில் பொருட்களை சேதமடைவதைத் தவிர்க்க கூட்டுறவுத் துறை சார்பில் ரேஷன் கடைகளுக்கு 17 அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில், கூட்டுறவு நியாய விலைக் கடைகளில் அத்தியாவசியப் பொருட்களுக்கு சேதம் ஏற்படாமல் தடுக்க எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை குறித்து அனைத்து மண்டல இணைப்பதிவாளர்களுக்கு கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் சண்முகசுந்தரம் 17 அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். அதன் விவரம்:

  1. கடந்த கால அனுபவங்களின் அடிப்படையில், மழை மற்றும் புயல் காரணமாக பாதிப்புக்குள்ளாகக் கூடிய தாழ்வான பகுதிகளை கண்டறிந்து அப்பகுதிகளில் உள்ள நியாய விலைக் கடைகள் மற்றும் கிடங்குகளை உயர்வான பகுதிகளுக்கு உடனடியாக மாற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  2. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறப்பு கூடுதல் ஒதுக்கீடு பெற்று தேவையான பொருட்களை நகர்வு செய்து, பாதுகாப்பாக சேமித்து வைக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
  3. அத்தியாவசியப் பொருட்களின் நகர்வு மற்றும் விநியோகத்தை அன்றாடம் கண்காணித்து, அனைத்து கிடங்குகள் மற்றும் நியாய விலைக் கடைகளிலும் போதுமான அளவு அத்தியாவசியப் பொருட்கள் இருப்பு உள்ளதை உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
  4. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் கிடங்குகளில் அத்தியாவசியப் பொருட்கள் இருப்பு குறைவாகவோ, இல்லாமலோ இருப்பின் அதை சம்பந்தப்பட்ட மண்டல மேலாளர், மாவட்ட வழங்கல் அலுவலர், மாவட்ட ஆட்சியர், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மேலாண்மை இயக்குநரின் கவனத்திற்கு உடன் எடுத்து செல்ல வேண்டும்.
  5. அரிசி, மண்ணெண்ணெய், உப்பு, மெழுகுவர்த்தி, அவசரகால விளக்கு மற்றும் தீப்பெட்டிகள் தேவையான அளவு இருப்பு வைத்திருக்க வேண்டும்.
  6. இயற்கை பேரிடர் காரணமாக ஏற்படும் அவசர நிலையை எதிர்கொள்ள அதிகப்படியான மண்ணெண்ணெய் இருப்பு வைத்துக்கொள்ள ஏதுவாக தேவையான மண்ணெண்ணெய் பேரல்கள் இருப்பு வைத்துக் கொள்ள வேண்டும்.
  7. வெள்ள பாதிப்பு ஏற்படக்கூடிய பகுதிகளில் பொதுவிநியோகத் திட்ட பொருட்களை நகர்வு செய்வதற்கு மாற்று வழி தடங்கள் மற்றும் முன்னேற்பாடு விவரங்கள் அடங்கிய அவசரகால திட்டம் ஒன்றினை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
  8. அத்தியாவசியப் பொருட்கள் சேதமடைந்து, நுகர்வுக்கு ஏற்றதாக இல்லாத போது அப்பொருட்களை உடனடியாக அப்புறப்படுத்திவிட்டு அதற்கு மாற்றாக நல்ல பொருட்களை நியாய விலைக் கடைகளுக்கு காலம் தாழ்த்தாமல் உடனே அனுப்ப உரிய ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்.
  9. பொது விநியோகத் திட்டத்திற்கு பயன்படுத்தப்படும் வாகனங்களை தகுதியான நிலையில் வைத்திருக்க வேண்டும். பொது விநியோகத் திட்டம் மற்றும் சிறப்பு பொது விநியோகத் திட்ட பொருட்களை நகர்வு செய்யும் போக்குவரத்து ஒப்பந்ததாரர்கள் நல்ல நிலையிலான வாகனங்களுடன் தயார் நிலையில் இருப்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும்.
  10. மழை காரணமாக நகர்வு பாதிக்காத வண்ணம் கட்டுப்பாட்டுப் பொருள்கள் நகர்வின் போது மழையால் சேதமுறுவதை தடுக்க, நகர்வு வாகனங்களில் தார்ப்பாய் கொண்டு மூடப்பட்டு நகர்வு செய்ய வேண்டும்.
  11. மலைப் பிரதேசமான கொடைக்கானல், நீலகிரி மற்றும் வால்பாறை பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்யும் போது மண் சரிவு ஏற்பட்டு பாதையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதால் நகர்வுப் பணியினை பாதிப்பு இல்லாமல் மேற்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
  12. மழையால் நனைந்த அரிசி, சர்க்கரை மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்கள் விநியோகிக்கப்பட்டு, புகார் ஏதேனும் வரப்பெறின், சம்மந்தப்பட்ட அலுவலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
  13. மலைப்பகுதி, ஆறு மற்றும் ஓடை போன்ற பகுதிகளில் மழை, வெள்ளத்தால் ஏற்படும் அசாதாரண சூழல் உருவாகும் முன்னர் தேவையான அத்தியாவசியப் பொருட்களை நகர்வு செய்து பாதுகாப்பாக வைக்கப்பட வேண்டும்.
  14. வெள்ளம், நீர் சூழ்ந்து நிற்கும் பகுதி, வடிகால் செல்லும் பகுதி மற்றும் தாழ்வான பகுதி போன்ற இடங்களில் உள்ள நியாயவிலைக்கடைகளை கண்டறிந்து உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் வருவாய் துறையினருடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு மேற்படி பாதிப்பு இந்தாண்டும் ஏற்படாத வண்ணம் செயல்பட உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
  15. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், தூத்துக்குடி, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை போன்ற மாவட்டங்கள் கூர்ந்து கண்காணிக்கப்பட வேண்டும். கடந்த காலங்களில் சென்னையில் பாதிப்புக்குள்ளான நியாயவிலைக்கடைகளில் இந்தாண்டும் அவ்வாறு பாதிப்பு ஏற்படாவண்ணம் செயல்பட தொடர்புடைய இணைப்பதிவாளர்கள், நியாயவிலைக்கடையினுள் நீர் உட்புகாதவாறு தடுத்திட மணல் நிரப்பப்பட்ட மூட்டைகள் தயார் நிலையில் வைத்திடவும், அத்தியாவசியப் பொருட்கள் உள்ள மூட்டைகளை மேடான பகுதியிலோ அல்லது மரப்பலகைகள் அடுக்கிய உயரமான இடத்திலோ அடுக்கி வைத்திடவும் நியாயவிலைக்கடை பணியாளர்களுக்கும் அறிவுறுத்தப்பட வேண்டும்.
  16. சென்னை பெருநகரத்தில் உள்ள நியாயவிலைக்கடை கட்டடம் மிகவும் பழுதடைந்து இருந்து மழையின் காரணமாக அதன் சுவர் அல்லது மேற்கூரை ஏதேனும் உடையும் என கருதக்கூடும் நியாயவிலைக் கடைகளை உடன் அருகிலுள்ள வேறு இடத்திற்கு மாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
  17. மண்டல இணைப்பதிவாளர் அலுவலகங்களில் இதற்கென கட்டுப்பாட்டு அறை மற்றும் பிரத்தியேக தொலைபேசி எண் ஒதுக்கப்பட்டு துணைப்பதிவாளர் நிலையில் ஒருவரை நியமித்து மழை காலங்களில் நியாய விலைக் கடைகளின் செயல்பாட்டினை தினந்தோறும் கண்காணித்து மழை, புயல் காரணமாக ஏற்படும் பிரச்சனைகளுக்கு உடனுக்குடன் தீர்வு காணப்பட வேண்டும். இந்த கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் ஒட்டப்பட்டு பொதுமக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x