Published : 11 Oct 2022 01:07 PM
Last Updated : 11 Oct 2022 01:07 PM

"கடந்த காலத்தில் தமிழ்நாடே கொந்தளித்தது'' - இந்தி திணிப்புக்கு முத்தரசன் கண்டனம்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் | கோப்புப் படம்.

சென்னை: ''கடந்த காலத்தில் தமிழ்நாடே கொந்தளித்தது'' என்று கூறி இந்தித் திணிப்புக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: ''இந்திய நாட்டில் இணைந்துள்ள மாநில மக்களின் பண்பாடு, கலாச்சாரம், பழக்க வழக்கங்கள், உணவு, உடைகளில் பல்வேறு வகையான வேறுபாடுகள் நிலவுகின்ற போதிலும் நாட்டின் ஒற்றுமையின் அச்சாணியாக 'வேற்றுமையில் ஒற்றுமை பேணும் பண்பு' தனித்துவம் கொண்டதாக விளங்கி வருகிறது. இதற்கு எதிராக ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே கலாச்சாரம், ஒரே தேர்தல் என்று மத்திய பாஜக அரசும், ஆர்எஸ்எஸ் மற்றும் அதன் சார்பு அமைப்புகளும் முழங்கிவருவது நாட்டின் ஒற்றுமைக்கு பேராபத்து விளைவிக்கும் விபரீத செயலாகும்.

இதன் தொடர்ச்சியாக, அலுவல் மொழிக்கான நாடாளுமன்ற நிலைக்குழு மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களான ஐஐடி, ஐஐஎம், எய்ம்ஸ் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் அனைத்திலும் ஆங்கில மொழியை கைவிட்டு இனி இந்தி மொழி மட்டுமே பயன்படுத்த வேண்டும்” என பரிந்துரை செய்துள்ளது. இந்தப் பரிந்துரை உள்ளடங்கிய அலுவல் மொழிக்குழுவின் அறிக்கையை மத்திய அரசின் உள்துறை அமைச்சர், குடியரசுத் தலைவரிடம் வழங்கியுள்ளார். அரசியல் சாசனத்தில் அங்கீகரிக்கப்பட்டுள்ள தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகள் அனைத்தும் மத்திய அரசின் அலுவல் மொழியாக ஏற்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை மாநில மக்களால் வலியுறுத்தப்பட்டு வரும் நிலையில், அதனை நிராகரித்து 'இந்தி மொழியை திணிக்க முயற்சிப்பதை கைவிட வேண்டும்'.

கடந்த காலத்தில் இந்தி திணிப்புக்கு எதிராக தமிழ்நாடே கொந்தளித்து எதிர்ப்பு தெரிவித்த போது, அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேரு, இந்தி பேசாத மாநிலங்கள் - விரும்புகிற காலம் வரை ஆங்கிலம் அலுவல் மொழியாகவும், இணைப்பு மொழியாகவும் நீடிக்கும் என நாடாளுமன்றத்தில் அளித்த உறுதிமொழிக்கு எதிரானதாகும். இந்தி மொழித் திணிப்பின் மூலம் மாநில மக்களின் தாய் மொழி உரிமையை அழிக்க நினைக்கும் ஒன்றிய அரசின் நடவடிக்கைகளை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாகக் கண்டிப்பதுடன், அரசியல் அமைப்புச் சட்டம் அங்கீகரித்துள்ள 22 மொழிகளையும் மத்திய அரசின் அலுவல் மொழியாக ஏற்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.'' என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x