Published : 11 Oct 2022 12:50 PM
Last Updated : 11 Oct 2022 12:50 PM

பொறியியல் படிப்புகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை இந்தாண்டு அதிகரித்துள்ளது: அமைச்சர் பொன்முடி

அமைச்சர் பொன்முடி | கோப்புப்படம்

சென்னை: "தமிழகத்தில் பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கான மூன்றாவது கலந்தாய்வு வரும் 13-ம் தேதி தொடங்கவுள்ளது. இதில் 49 ஆயிரத்து 43 பேர் கலந்துகொள்வார்கள். இறுதியாக நான்காவது கலந்தாய்வு நடைபெறும். அதில், 61 ஆயிரத்து 657 பேர் கலந்துகொள்வார்கள். இன்னும்கூட 1 லட்சத்து 10 ஆயிரம் பேருக்கு கவுன்சிலிங்க நடக்கவேண்டியுள்ளது. இந்த ஆண்டு பொறியியல் படிப்புகளில் சேர்கின்ற மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது" என்று உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.

சென்னை கிண்டியில் தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், " இந்தாண்டு பொறியியல் மாணவர் சேர்க்கையில், நடந்துமுடிந்து இரண்டு கலந்தாய்வுகள் மூலம் மொத்தமுள்ள 2360 இடங்களில் இதுவரை 2355 பேர் சேர்ந்துவிட்டனர். இதில் 40 முதல் 50 பேர் மருத்துவப் படிப்புகள் உள்ளிட்ட பிற படிப்புகளுக்குச் செல்வதற்கு வாய்ப்பு உள்ளது. அவ்வாறு நடந்தால், அந்த காலியிடங்களை நிரப்புவதற்கான பணிகளை அண்ணா பல்கலைக்கழகம் மேற்கொள்ளும். இந்த ஆண்டு அண்ணாப் பல்கலைக்கழகத்தில் காலியிடங்கள் என்பதே இருக்காது.

பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கான மூன்றாவது கலந்தாய்வு வரும் 13-ம் தேதி தொடங்கவுள்ளது. இதில் 49 ஆயிரத்து 43 பேர் கலந்துகொள்வார்கள். இறுதியாக நான்காவது கலந்தாய்வு நடைபெறும். அதில், 61 ஆயிரத்து 657 பேர் கலந்துகொள்வார்கள். இன்னும்கூட 1 லட்சத்து 10 ஆயிரம் பேருக்கு கவுன்சிலிங் நடக்கவேண்டியுள்ளது. இந்த ஆண்டு பொறியியல் படிப்புகளில் சேர்கின்ற மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது" என்றார்.

அப்போது அவரிடம், அரசுக் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர்கள் நியமனம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர்," அரசுக் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர்களுக்கான 4000 இடங்களை நிரப்பப் போகிறோம். மொத்த காலிப் பணியிடங்கள் 6906 உள்ளன. இதில் 4000 இடங்களை நிரப்பப்போகிறோம். இந்தப் பணியிடங்களுக்கும் டிஆர்பி மூலமாக எழுத்துத் தேர்வும், நேர்முகத் தேர்வும் நடத்தப்படும்.

கவுரவ விரிவுரையாளர்களின் பணி அனுபவத்தைப் பொறுத்து நேர்முகத் தேர்வில் அவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்கப்படும். நேர்முகத் தேர்வில் மொத்தமே 30 மதிப்பெண்கள்தான். இதில், ஓர் ஆண்டு கவுரவ விரிவுரையாளர்களாகப் பணியாற்றியவர்களுக்கு 2 மதிப்பெண்கள் வீதம், 7.5 ஆண்டுகள் பணி அனுபவம் கொண்டவர்களுக்கு 15 மதிப்பெண்கள் வழங்கப்படும்.

எனவே கவுரவ விரிவுரையாளர்கள் எழுத்துத் தேர்வுக்கு தங்களைத் தயார்படுத்திக் கொண்டு, தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். உங்களுக்காக மொத்த மதிப்பெண்களில் 50 சதவீதமாக இந்த 15 மதிப்பெண்கள் நீங்கள் பணிகளைப் பெற வேண்டும் என்பதற்காக ஒதுக்கியிருக்கிறோம்" என்று அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x