Published : 11 Oct 2022 04:45 AM
Last Updated : 11 Oct 2022 04:45 AM
சென்னை: தமிழக சட்டப்பேரவை அக்.17-ம் தேதி கூடுகிறது. இந்நிலையில், பேரவையில் விவாதிக்கப்பட வேண்டியவை குறித்து முடிவு எடுக்க, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் அக்.14-ம் தேதி நடைபெறுகிறது.
தமிழக சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டத் தொடர் அக்.17-ம் தேதி தொடங்குகிறது. முதல்நாளில் பேரவை முன்னாள் தலைவர் சேடப்பட்டி முத்தையா உள்ளிட்ட உறுப்பினர்கள், மறைந்தபிரபல தலைவர்கள் உள்ளிட்டோருக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்படும். அன்று அவை ஒத்திவைக்கப்பட்டு, பேரவை கூட்டத்தை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து விவாதிக்க அலுவல் ஆய்வுக்குழு, பேரவைத்தலைவர் மு.அப்பாவு தலைமையில் கூடும்.
இந்நிலையில், சட்டப்பேரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட வேண்டியவை குறித்து முடிவெடுக்க, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில், தமிழக அமைச்சரவைக் கூட்டம் அக்.14-ம் தேதி மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது. அமைச்சர்கள், துறை அதிகாரிகள் இதில் பங்கேற்கின்றனர்.
ஆன்லைன் ரம்மி தடை சட்டம்
குறிப்பாக, ஆன்லைன் ரம்மிஉள்ளிட்ட இணையதள விளையாட்டுகளுக்கு தடை விதிப்பதற்கான அவசரச் சட்டம் சமீபத்தில் பிறப்பிக்கப்பட்டது. இந்த சட்டத்துக்கு நிரந்தர அந்தஸ்து வழங்க, இதற்கான மசோதா சட்டப்பேரவை மழைக்கால கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படுகிறது.
ஆணைய அறிக்கைகள்
இதுமட்டுமின்றி, ஸ்மார்ட் சிட்டிதிட்டம் குறித்த அறிக்கை, ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை, ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு தொடர்பான அருணா ஜெகதீசன் அறிக்கை ஆகியவை தாக்கல் செய்யப்பட உள்ளன.
இவை தவிர, சில புதிய சட்ட மசோதாக்களும் தாக்கல் செய்யப்படுகிறது. மேலும், இறுதி துணை நிதிநிலை அறிக்கை உள்ளிட்ட அறிக்கைகளும் தாக்கல் செய்யப்பட உள்ளன. இவை குறித்து அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு, இறுதி செய்யப்பட உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT