Published : 20 Nov 2016 12:09 PM
Last Updated : 20 Nov 2016 12:09 PM
அடர்ந்த தேக்கு மரக் காடு அது. இலைக் குவியலில் கால் புதையச் சரிகிறது வனம். மிரண்டு ஓடுகின்றன மிளாக்கள். மான் இனங்களில் பெரியவை மிளாக்கள். கடமான்கள் என்றும் அழைப்பது உண்டு. அரவம் கேட்டு பந்துபோல சுருட்டிக்கொண்டு உருண்டோடுகின்றன எறும்புத் தின்னிகள். அதோ தூரத்தில் சிலிர்த்து நிற்கிறது ஒரு முள்ளம்பன்றி. “அச்சம் கொள்ள வேண்டா.. வரு வரு...” என்று கையைப் பிடித்து மலைச் சரிவில் அழைத்துச் சென்றார்கள் இரு எளிய பெண்மணிகள். ஒரு கிலோ மீட்டர் உள்ளே சென்றிருப்போம். திடீரென வனத்துக்குள் வாழைத் தோட்டம், கீரைத் தோட்டம், காய்கறிகள் தோட் டம், மிளகுத் தோட்டம், தென்னை தோட்டம், ஆரஞ்சு, மா, பலா தோட் டங்கள், அட... சூரிய மின் சக்தி தோட்டம்!
“வரு வரு... காந்தி அம்மே கூட்டத்துக்கு வரு வரு...” என்று அங்கே 10-க்கும் மேற்பட்ட பெண்கள் வரவேற்றார்கள். குடவநாட்டின் தாணிமூடு பகுதி அது.
அந்த வனத்துக்குள் அந்தப் பெண் கள் ஒருங்கிணைந்து ஒரு சங்கம் வைத்திருக்கிறார்கள். ‘காந்தி அம்மே கூட்டம்’ அல்லது ‘காந்தி வனிதா சங்கம்’ என்று அழைக்கிறார்கள். நமது ஊரில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் இருக்கிறது அல்லவா! கிட்டத்தட்ட அதே பாணியில் கேரளத்தில் செயல் படுகிறது ‘குடும்ப ’ திட்டம். கேரளத்தின் மூன்றில் ஒரு பகுதி குடும்பங்கள் ஏதோ ஒரு வகையில் குடும்ப திட்டத்தில் இணைந்திருக்கின்றன. அந்த வகையில் அமைக்கப்பட்டதுதான் குடவ நாட்டின் தாணிமூடு பகுதியின் ‘காந்தி அம்மே கூட்டம்’. ஆனால், இந்தக் குழு வித்தியாச மானது. இவர்களின் கதை நெகிழ் வானது. இங்கிருக்கும் அத்தனை பெண்களுமே ஏதோ ஒரு வகையில் பாதிக்கப்பட்டவர்கள். கைவிடப் பட்டவர்கள். நலிவடைந்தவர்கள். ஆதரவற்றவர்கள். வயதானவர்கள். இவர்களை எல்லாம் அடையாளம் கண்டு அடைகாக்கிறது நன்னியோடு கிராமப் பஞ்சாயத்து. ஊருக்கு கொஞ்சம் தள்ளி வனத்தையொட்டிய பெரும் விவசாயிகளிடம் பேசி நிலத்தை குத்தகைக்கு எடுத்து இவர்களிடம் ஒப்படைத்திருக்கிறது கிராமப் பஞ்சாயத்து.
மொத்தம் 20 பெண்மணிகள். “நாங்கள் மிகவும் வறியவர்கள். எங்களுக்கு சொந்த வீடு, நிலம் எதுவும் இல்லை. சிலருக்கு சொந் தங்களே இல்லை. இதில் வீட்டை விட்டு விரட்டப்பட்டவங்களும் இருக்கோம். நன்னியோடு பஞ்சாயத்து தான் கிராம சபையில் தீர்மானம் நிறைவேற்றி எங்களுக்கு இந்த அஞ்சு ஏக்கர் நிலத்தை கொடுத்திருக்காங்க. அஞ்சு வருஷம் முன்னாடி நாங்க இங்கே வரும்போது தனியார் நிலமென்றாலும் அடர் வனமாகவும் கரடுமுரடாகவும் புதர் மேடாகவும் இருந்தது. எங்களுக்கு தொடக்க நிதியாக 90 ஆயிரம் கொடுத் தாங்க. அதைக்கொண்டு நாங்க இந்த நிலத்தை செம்மைப்படுத்தினோம். சின்னதா கிணறு வெட்டினோம். இங்கே வாழை, காய்கறித் தோட்டம் போட்டோம். கொஞ்சம் தள்ளி நெல்லுகூட விளைவிச்சிருக்கோம். கிணற்றில் இருந்து தண்ணீர் இறைக் கவும், எங்களுக்கான மின்சாரத் தேவைகளைப் பூர்த்திசெய்யவும் சூரிய மின் சக்தி தோட்டம் போட்டிருக் கோம். இப்பவும் இங்கே சிறுத்தை, கரடி, மான்கள், செந்நாய்கள், நரிகள், காட்டுப் பன்றிகள் அடிக்கடி வந்து போகும். எல்லாம் நல்ல ஜீவன்கள். எங்களை எதுவும் செய்யாது. நாங்களும் அதுங்க குறுக்கே போக மாட்டோம். அதுங்களும் எங்க குடியி ருப்புக்கு வராது” என்கிறார்கள்.
மகளிர் சுய உதவிக் குழு பாணியிலான இந்த குடும்ப அமைப்புக்கு கை கொடுத்திருக்கிறது மத்திய அரசின் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டம். அந்தத் திட்டத்தின் கீழ் இவர்கள் ஒவ்வொருவருக்கும் தினசரி ரூ.240 ஊதியம் வழங்கப்படுகிறது. இவர்கள் உடல் உழைப்பில் உற்பத்தி செய்யும் வாழை, தென்னை, நெல், பழங்கள், காய்கறிகளை நன்னி யோடு பஞ்சாயத்து நிர்வாகமே கொள்முதல் செய்துகொள்கிறது. ஊதியம் தவிர்த்து, விளைபொருள் விற்பனையில் கிடைக்கும் லாபத் தொகையில் கணிசமான பங்கு இவர்களுக்கு வழங்கப்படுகிறது. அத னைக் கொண்டு இவர்கள் தாங்கள் வாங்கிய 90 ஆயிரம் ரூபாய் கடனை அடைத்துவிட்டார்கள். தங்களின் விவசாயத்தை மேலும் விரிவுப்படுத்தி வருகிறார்கள். சொந்தங்கள் கைவிட் டாலும் புதிய உறவுகளுக்கு உயிர் கொடுத்திருக்கிறது கிராமப் பஞ்சாயத்து.
அலங்கார மலர்ச் செடிகள் உற்பத்தியில் பெண்கள் |
“அப்புறம் கதைக்கலாமாக்கும். ஊனு விருந்து ரெடியாக்கி வைச் சுண்டு. பட்சணம் காத்துக்கிடக்குது. முதல்ல உண்டலாம் வரு...” என்று அழைத்தார்கள். “இது எங்கள் சம்பிரதாயமாக்கும்” என்றவர்கள், பெரிய வாழை இலையை விரித்து காய்கறி, கீரை, கிழங்கு, பழங்கள் என 101 வகையான உணவு வகைகளைப் பரிமாறினார்கள். “எங்களை நோக்க பிள்ளைகள் யாரும் வர்ற தில்லை. பிள்ளைகள் போல நீங்க வந்திருக்கீங்க” என்றபடியே பரிமாறி னார்கள். கண்கள் கலங்கின. அங்கே இலை முழுவதும் நிறைந்திருந்தது பரிபூரணமான அன்பு.
இதுதவிர கிராமப் பெண்கள் முன்னேற்றத்துக்காக இயற்கை விவசாயக் கூட்டுறவு அமைப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது நன்னியோடு கிராமப் பஞ்சாயத்து நிர்வாகம். பெண் களுக்கு ஆர்க்கிட் மலர்ச் செடிகள், ஆந்தூரியம் மலர்ச் செடிகள் உள் ளிட்ட அலங்கார மலர்ச் செடிகளை வளர்க்க பயிற்சி அளிக்கிறார்கள். ஆயிரம் மலர்ச் செடிகளைக் கொண்ட ஒரு யூனிட் அமைத்தால் சரி பாதி தொகையாக ரூ.40 ஆயிரம் மானியம் அளிக்கிறார்கள். அதனை பஞ்சாயத்து நிர்வாகமே கொள்முதல் செய்து கூட்டு றவு அமைப்புகள் மூலம் விற்பனை செய்கிறது. ஆயிரம் வீடுகளில் கால்நடை வளர்க்கிறார்கள். கால்நடை சாணத்தை இயற்கை உரம் தயாரிக்கப் பயன்படுத்திக்கொள்கிறார்கள். 25 நாட்டு கோழிப் பண்ணைகள் வைத்திருக்கிறார்கள். குடும்ப பெண்கள் குழுவினர் இயற்கை உரம் தயாரித்து, அதனை பாக்கெட் செய்து கேரளம் முழுக்க விற்பனைக்கு அனுப்புகிறார்கள். இயற்கை பூச்சிக் கொல்லி, பூச்சி விரட்டி, விதை விற்பனையும் நடக்கிறது. இவ்வாறு கிராமம் முழுவதும் கூட்டுறவு விவ சாயத்தில் 7 ஆயிரம் பேர் ஒருங் கிணைக்கப்பட்டிருக்கிறார்கள்.
ஓணம் பண்டிகை இங்கே களை கட்டுமாம். பெரும்பாலும் மாநில முதல்வர் வந்துவிடுவார். விவசாய அமைச்சர் நிச்சயம் வருகிறார். கேரள மாநிலத்தில் விருந்தினர்களுக்கு எத்தனை வகையான காய்கறிகளை விருந்தில் பரிமாறுவது என்பதில் போட்டியே நிலவுகிறது. அது ஒரு விருந்தோம்பல் கலாச்சாரம்! இதற்கு முன்பு வரை கேரளத்தில் 172 வகையான காய்கறிகளைப் பரி மாறியதே சாதனையாக இருந்தது. ஆனால், கடந்த ஓணம் அன்று நன்னி யோடு பஞ்சாயத்து, அங்கு வந்த விவசாயத் துறை மந்திரி வி.எஸ்.சுனில் குமாருக்கும் தொகுதி சட்டமன்ற பிரதிநிதி டி.கே.முரளிக்கும் 272 வகை யான காய்கறிகளைப் பரிமாறி புதிய சாதனையைப் படைத்திருக்கிறது.
மாநிலத்திலேயே சிறந்த இயற்கை விவசாய கிராமம் என இதுவரை நான்கு முறை மாநில அரசின் விருதை பெற்றிருக்கிறது நன்னியோடு பஞ்சாயத்து. ஏழைகளே இல்லை என்று சொல்லியிருந்தோம் இல்லையா... ஆம், ஏழைகள் கண்ணில் தென்பட்டால் உடனடியாக பிடித்துக்கொண்டுபோய் வாழ் வாதாரம் ஏற்படுத்தித் தந்துவிடு கிறார்கள், ‘காந்தி அம்மேக் கூட்டம்’ போல. உண்மையில் கடவுளின் தேசம் அது!
- பயணம் தொடரும்...
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT