Last Updated : 18 Nov, 2016 12:17 PM

 

Published : 18 Nov 2016 12:17 PM
Last Updated : 18 Nov 2016 12:17 PM

நெல்லை மாவட்ட பழங்கால கோயில்களில் உள்ள அரிய சிற்பங்களை ஆராய மாணவர்களுக்கு பயிற்சி

திருநெல்வேலி மாவட்டத்தில் புராதன சின்னங்களை பாதுகாக்கும் முயற்சியாக, கோயில்களில் உள்ள அரிய சிற்பங்களை ஆராயவும், ஓவியமாக வரையவும் பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.

தாமிரபரணி பாயும் திருநெல் வேலி சீமையில் புராதன சின்னங் களாக கோயில்களும், மண்டபங் களும் ஏராளம் அமைந்துள்ளன. இவற்றை பாதுகாக்க வேண்டும், புனிதம் காக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு குறைந்திருக்கிறது.

ஆசிரியர்களுக்கு பயிற்சி

இதைத் தவிர்க்கும் வகையில் ஆசிரியர்களுக்கும், மாண வர்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன், அவர்களுக்கு ஓவிய பயிற்சியையும் ஒருசேர அளிக்கும் திட்டத்தை திருநெல் வேலி மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம், அவ்வை நுண்கலை பயிற்சி மையம், கடவு அமைப்பு ஆகியவை செயல்படுத்த தொடங்கியிருக்கின்றன.

இதற்காக மாவட்டத்திலுள்ள பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த 80 ஓவிய ஆசிரியர்களுக்கு கடந்த ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் 28 நாட்கள் புத்தாக்க கலை பயிற்சி அளிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக ஓவிய ஆசிரியர்கள் பள்ளி மாணவர்களோடு இணைந்த நுண்கலை பயிற்சி முகாம் களை புராதனமான கோயில்களில் நடத்தும் திட்டம் தொடங்கி இருக்கிறது.

அழகிய நம்பிராயர் கோயில்

அதன்படி ஓவிய ஆசிரியர்கள், மாணவர்கள் இணைந்த புராதன கலைச்சின்னங்கள் பாதுகாப்பு முதல் முகாம், திருநெல்வேலி அருகேயுள்ள பிரசித்திபெற்ற திருக் குறுங்குடி அழகிய நம்பிராயர் கோயிலில் நடத்தப்பட்டது.

சுத்தமல்லி அரசு மேல்நிலைப் பள்ளி, வீரவநல்லூர் பாரதியார் அரசு மேல்நிலைப்பள்ளி, சேரன் மகாதேவி பெரியார் அரசு மேல்நிலைப்பள்ளி, திருக்குறுங் குடி டிவிஎஸ் அரசு மேல்நிலைப் பள்ளி, பத்தமடை ராமசேஷய்யர் மேல்நிலைப்பள்ளி, திருநெல் வேலி மந்திரமூர்த்தி மேல் நிலைப்பள்ளியை சேர்ந்த 30 மாணவர்கள் முகாமில் ஆர்வமுடன் பங்கேற்று புராதன கலை சின்னங்களை பாதுகாக்கும் விழிப்புணர்வு மற்றும் கலை பயிற்சி பெற்றனர்.

புராண வரலாறு

அவர்களுக்கு அத் திருக்கோயி லின் புராண வரலாறு, தொல்லி யல் கூறுகளை ஆசிரியர்கள் விளக்கினர். பின்னர் அங்குள்ள சிற்பங்கள், ஓவியங்களை வரை வதற்கும், வரைதல் தொழில் நுட்பம் குறித்தும் சென்னை அரசு கவின் கலைக்கல்லூரி முன்னாள் முதல்வரும் அவ்வை நுண்கலை பயிற்சி மைய நிறுவனருமான ஓவியர் சந்ரு, ஓவிய ஆசிரியர்கள் இசக்கி, பழனிசெல்வன் ஆகி யோர் விளக்கினர். மாவட்டத்தில் பல்வேறு இடங்களிலும் உள்ள பழ மையான கோயில்களிலும் முகாம் களை நடத்த திட்டமிடப்பட் டிருக்கிறது.

புத்தகம் வெளியிட திட்டம்

திருநெல்வேலி டவுன் ஸ்ரீமந்திரமூர்த்தி மேல்நிலைப்பள்ளி ஓவிய ஆசிரியரும் முகாம் ஒருங்கிணைப்பாளருமான பொ.வள்ளிநாயகம் கூறும்போது, ``சுற்றுச்சூழல் மற்றும் புராதன கலைச் சின்னங்களை பாதுகாக் கும் உணர்வை ஆய்வாளர்கள், நுண்கலை வல்லுநர்கள், பேரா சிரியர்கள் மூலம் பள்ளி மாணவர்களுக்கு ஏற்படுத்து தல், வளர்த்தல், ஊக்கப்படுத்து தல் என்ற நோக்கத்துடன் இந்த திட்டத்தை தொடங்கி யிருக்கிறோம். திருநெல்வேலி மாவட்டத்தில் பள்ளி கல்வித்துறை இதற்கு ஒத்துழைப்பு அளிக்கிறது.

மாவட்டத்தில் கோயில்கள் தோறும் நடத்தப்படும் முகாம்களில் மாணவர்கள், ஆசிரியர்களால் ஓவியமாக்கப்படும் படைப்புகளை காட்சிப்படுத்தும் கண்காட்சியை நடத்தவும், அவற்றை ஆவண மாக்கும் வகையில் புத்தகமாக்கி வெளியிடவும் திட்டமிட் டிருக்கிறோம்” என்றார் அவர்.

திருநெல்வேலி அருகே திருக்குறுங்குடி அழகிய நம்பிராயர் கோயிலில் உள்ள அரிய சிற்பங்களை வரைய மாணவ, மாணவியருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. (வலது) சிற்பத்தை தூரிகையால் படமெடுக்க முயலும் மாணவி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x