Published : 10 Oct 2022 10:42 PM
Last Updated : 10 Oct 2022 10:42 PM
புதுச்சேரி: புதுச்சேரியில் அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு ஊழியர்களுக்கான போனஸ் குறித்து மத்திய நிதி அமைச்சகத்தின் செலவினங்கள் துறை ஒரு அரசாணை வெளியிட்டுள்ளது.
அதில் மத்திய அரசு ஊழியர்களுக்கு கடந்த நிதி ஆண்டுக்கான இடைக்கால போனஸ் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த (2021-22) மார்ச் 31ம் தேதி இப்படி பணியில் இருந்தவர்கள் கடந்த நிதி ஆண்டில் குறைந்தபட்சம் ஆறு மாதங்கள் தொடர்ந்து பணியில் இருந்தவர்கள் ஆகியோருக்கு இடைக்கால போனஸ் வழங்கப்படும். போனஸ் கணக்கிடுவதற்கான உச்சவரம்பு ரூ.7000 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதையடுத்து தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புதுவை மாநில அரசில் பணிபுரியும் பிரிவு 'பி ' மற்றும் 'சி ' ஊழியர்களுக்கு போனஸ் வழங்க நடவடிக்கை எடுக்க நிதித்துறைக்கு உத்தரவிடப்பட்டது.
மாநில அரசில் பணிபுரியும் உற்பத்தி சம்பந்தப்பட்ட போனஸ் பெறாத பிரிவு 'பி' (அரசிதழ் பதிவு பெற்ற அதிகாரிகள் தவிர்த்து) மற்றும் பிரிவு 'சி' ஊழியர்கள், முழுநேர தற்காலிக ஊழியர்கள் போனஸ் வழங்குவதற்கான கோப்புக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பிரிவு 'பி' மற்றும் 'சி' ஊழியர்களுக்கு போனஸாக ரூ.6,908 மற்றும் முழுநேர தற்காலிக ஊழியர்களுக்கு ரூ.1,184 ம் வழங்கப்படும் என நிதித்துறை சார்பு செயலர் அர்ஜுன் ராமகிருஷ்ணன் தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT