Last Updated : 10 Oct, 2022 05:34 PM

6  

Published : 10 Oct 2022 05:34 PM
Last Updated : 10 Oct 2022 05:34 PM

பொதுத்துறை நிறுவனங்களைத் தொடங்க மோடி அரசு தயாராக இல்லை: முத்தரசன்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் நடை பயணம்.

விருதுநகர்: பொதுத்துறை நிறுவனங்களைத் தொடங்க மோடி அரசு தயாராக இல்லை என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் முத்தரசன் கூறினார்.

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே தாமரைக்குளத்தில் சாயப்பட்டறை ஆலை தொடங்குவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நடை பயண இயக்கம் கடந்த 7-ம் தேதி தொடங்கியது. இன்று இக்குழுவினர் விருதுநகர் வந்தடைந்தனர். அவர்களோடு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் முத்தரசனும் பங்கேற்றார். விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவாயிலில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் முத்தரசன் தலைமையில், மாவட்டச் செயலர் லிங்கம், மாநில செயற்குழு உறுப்பினர் ராமசாமி, மாநிலக்குழு உறுப்பினர் பாலமுருகன் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

அதன்பின், முத்தரசன் அளித்த பேட்டியில், ''தென் மாவட்டங்களில் வேலையின்மை மிகப்பெரிய பிரச்சினையாக உள்ளது. இதனால் கடந்த காலங்களில் சாதிக் கலவரங்கள் ஏற்பட்டன. இதைத் தடுக்க, கருணாநிதி முதல்வராக இருந்தபோது தொழில்களை பெருக்கி வேலைவாய்ப்பை உருவாக்குதால்தான் சாதி மோதலை தடுக்க முடியும் என்றார்.

இங்கு ஏற்கெனவே உள்ள பட்டாசு, தீப்பெட்டி தொழிலும் பல நிர்பந்தங்களுக்கு ஆளாகி உள்ளன. கடும் வறட்சியான மாவட்டங்களில் விருதுநகர் மாவட்டமும் ஒன்று. இங்கு தொழில்களை தொடங்குவதற்கான நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுக்க வேண்டும். குறிப்பாக சாத்தூர் பகுதியில் ஜவுளி பூங்கா தொடங்குவதாக அறிவிக்கப்பட்டு அது அறிவிப்போடு மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை திட்டத்தைப் போல நிற்கிறது. இதற்கான முழு நிதியையும் ஒதுக்கி ஜவுளி பூங்காவை உருவாக்கும் நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும். பாஜக அதற்கு தடைக்கல்லாக இருப்பதாகத் தெரிகிறது. அது தவிர்க்கபட வேண்டும்.

காரியாபட்டி அருகே தாமரைகுளத்தில் அறிவிக்கப்பட்ட ஜவுளி பூங்கா என்பது மாற்றப்பட்டு சாயச் சாலையாக மாற்றும் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. அவ்வாறு உருவாக்கப்பட்டால் அப்பகுதி விவசாயம் முற்றிலும் சேதமடையும். சுற்றுச்சூழலும் பாதிக்கப்படும்.

குடிநீர் ஆதாரங்களையும் பாதிக்கும். அப்பகுதி மக்களும் அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கிறார்கள். எனவே, இத்திட்டத்தை அரசு கைவிட வேண்டும். இந்த இரு கோரிக்கைளையும் முன்வைத்து இந்த பாதயாத்திரை இயக்கம் நடைபெற்றது. இந்தக் கோரிக்கைகளை மாவட்ட ஆட்சியரிடம் கொடுக்கிறோம். அதை அவர் மத்திய அரசுக்கு அனுப்பிவைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மத்திய அரசைப் பொறுத்தவரை தேர்தல் காலத்தில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்பது அனைவருக்கும் தெரியும். ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை தருவதாகக் கூறினர். 8 ஆண்டுகளாகிவிட்டது. இதுவரை 16 கோடி பேருக்கு வேலை கொடுத்திருக்க வேண்டும். ஆனால், 16 ஆயிரம் பேருக்கக் கூட வேலை கிடைக்கவில்லை. பொதுத்துறை நிறுவனங்களைத் தொடங்க மோடி அரசு தயாராக இல்லை. இவருக்கு முன் இருந்த அத்தனை பிரதமர்களும் பொதுத்துறை நிறுவனங்களை உருவாக்கினர். ஆனால், மோடி பொதுத்துறை நிறுவனங்களை விற்கிறார். மக்கள் பிரச்சினையில் அக்கறை இல்லாத பிரதமரை நாடு பெற்றுள்ளது என்பது துரதிஷ்டமானது'' என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x