Published : 10 Oct 2022 05:17 PM
Last Updated : 10 Oct 2022 05:17 PM
சென்னை: “பாஜக ஆட்சியில் இந்தியாவின் ஆட்சி மொழியாக இந்தியை திணிக்கிற முயற்சியின் வெளிப்பாடாகத் தான் அலுவல் மொழி பற்றிய நாடாளுமன்றக் குழுவின் பரிந்துரை அமைந்துள்ளது. பிரதமர் மோடி இதில் தலையிட்டு இத்தகைய நடவடிக்கைகளை திரும்பப் பெற தவறினால் கடுமையான போராட்டத்தை தமிழகத்தில் நடத்த வேண்டிய நிலை ஏற்படும்” என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: "மத்தியில் பாஜக ஆட்சி அமைந்தவுடன், இந்தி பேசாத மாநிலங்கள் மீது இந்தியை திணிக்கிற போக்கு பல்வேறு வகைகளில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஒரே நாடு - ஒரே மொழி, ஒரே நாடு - ஒரே நுழைவுத் தேர்வு, ஒரே நாடு - ஒரே குடும்ப அட்டை, ஒரே நாடு - ஒரே வரி, ஒரே நாடு - ஒரே தேர்தல் என்ற இலக்கினை நோக்கி மோடி ஆட்சி செயல்பட்டு வருகிறது. இதன்மூலம் மத்திய அரசு அதிகாரங்களை குவிக்கிற வகையில் மாநில அரசின் உரிமைகளை பறித்து வருகிறது. பொதுப் பட்டியலில் உள்ள அதிகாரங்களை எதேச்சதிகாரமாக கபளீகரம் செய்து வருகிறது. அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமாக மாநில உரிமைகள் பறிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் தலைமையில் நடைபெற்ற அலுவல் மொழிக்கான நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டத்தில் 112 பரிந்துரைகள் செய்யப்பட்டு, அவை குடியரசுத் தலைவரிடம் வழங்கப்பட்டுள்ளன. இவற்றில் பெரும்பாலானவை இந்தி மொழியை திணிக்கிற முயற்சியாகவே இருக்கிறது. இந்த அறிக்கையின் மூலம், மத்திய அரசின் கல்வி நிறுவனங்களாக இந்திய அறிவியல் கழகம், இந்திய மேலாண்மை கழகம், எய்ம்ஸ் போன்றவற்றிலும், மத்திய பல்கலைக் கழகங்களிலும் கட்டாயமாக இந்தி மொழியே பயிற்று மொழியாக இருக்க வேண்டுமென்றும், ஆங்கிலம் உள்ள இடங்களில் இந்தியை இடம்பெறச் செய்ய வேண்டும் என்றும் பரிந்துரை செய்யப்பட்டிருப்பது மிகுந்த அதிர்ச்சியைத் தருகிறது.
இதோடு பணியாளர் நியமனத் தேர்வுகளில் கட்டாய ஆங்கில மொழி வினாத்தாள் இருப்பதை கைவிட வேண்டும், உயர் நீதிமன்ற உத்தரவுகளை இந்தியில் மொழி பெயர்க்க போதிய ஏற்பாடுகளை செய்தல், மத்திய அரசு அலுவலகங்கள், அமைச்சகங்கள், துறைகளின் கடிதங்கள், மின்னஞ்சல்கள் ஆகியவை இந்தி மொழியில் இருக்க வேண்டும் என்பன போன்ற பரிந்துரைகள் இதில் இடம்பெற்றுள்ளன. இது 1967 ஆட்சி மொழிகள் சட்டத் திருத்தத்திற்கு விரோதமானதாகும்.
இந்த பரிந்துரைகளின்படி 1967 இந்தியா முழுமைக்கும் இந்தியை பொது மொழியாக்கிவிட வேண்டும் என்பதில் தீவிரம் காட்டப்படுவது வெளிப்படையாக தெரிகிறது. இந்தியை பொது மொழியாக்கிடும் வகையில் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்கள், தொழில்நுட்பம் சாராத கல்வி நிறுவனங்கள், நவோதயா வித்யாலயாக்கள், கேந்திரிய வித்யாலயாக்கள் போன்ற கல்வி நிறுவனங்கள் அனைத்திலும் இந்தி மொழியை பயிற்று மொழியாக கட்டாயமாக்கப்பட வேண்டுமென்று பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
அரசமைப்புச் சட்டத்தின் 8-வது அட்டவணையில் தமிழ் உள்ளிட்ட 22 மொழிகள் இடம் பெற்றுள்ளன. இவை அனைத்தும் சம உரிமை பெற்ற மொழிகளாகும். ஆனால், இந்தியை தவிர அனைத்து மொழிகளும் புறக்கணிக்கப்படுகிற வகையில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது, இந்தி பேசாத மாநிலங்களுக்கு மத்திய அரசு சவால் விடுகிற வகையில் அமைந்துள்ளது.
நேரு இந்தி பேசாத மக்களுக்கு வழங்கிய உறுதிமொழியில், 'ஆங்கிலம் துணை ஆட்சி மொழியாகவும், மாற்று மொழியாகவும் மக்கள் விரும்பும் வரை தொடர்ந்து இருக்கும். இது எவ்வளவு காலத்திற்கு என்று தீர்மானிக்கும் பொறுப்பை இந்தி அறிந்த மக்களிடம் விடாமல், இந்தி மொழி அறியாத மக்களிடமே விடுவேன்' என்று கூறியிருந்தார். இதற்கு சட்ட வடிவம் கொடுப்பதற்காக ஆட்சி மொழிகள் சட்டம் 1967 திருத்தப்பட்டு, இந்தி பேசாத மாநிலங்களுக்கு ஆங்கிலம் ஆட்சி மொழியாக தொடர்ந்து நீடிக்க பல்வேறு வழிமுறைகள் செய்யப்பட்டன. நேருவின் உறுதிமொழி என்பது இந்தி பேசாத மக்களுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்புக் கவசமாகும்.
எனவே, பாஜக ஆட்சியில் இந்தியாவின் ஆட்சி மொழியாக இந்தியை திணிக்கிற முயற்சியின் வெளிப்பாடாகத் தான் அலுவல் மொழி பற்றிய நாடாளுமன்றக் குழுவின் பரிந்துரை அமைந்துள்ளது. இந்த முயற்சிகளை தீவிரப்படுத்துகிற பணியில் ஈடுபட்டுள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
இந்தியா பலமொழிகள் பேசுகிற பன்முகத்தன்மை கொண்ட நாடு. வேற்றுமையில் ஒற்றுமை கண்டு கடந்த 75 ஆண்டுகளாக இந்திய ஜனநாயகம் காப்பாற்றப்பட்டு வருகிறது. இந்த அடிப்படையை தகர்க்கிற விஷயத்தில் மத்திய பாஜக அரசு தொடர்ந்து செயல்படுமேயானால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று எச்சரிக்க விரும்புகிறேன். பிரதமர் மோடி இதில் தலையிட்டு இத்தகைய நடவடிக்கைகளை திரும்பப் பெற தவறினால் கடுமையான போராட்டத்தை தமிழகத்தில் நடத்த வேண்டிய நிலை ஏற்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று அவர் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT