Published : 10 Oct 2022 02:58 PM
Last Updated : 10 Oct 2022 02:58 PM

பயங்கரவாத தடுப்புப் பிரிவு அமைக்கக் கோரிய வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

சென்னை உயர் நீதிமன்றம் | கோப்புப்படம்

சென்னை: தமிழகத்தில் பயங்கரவாத நடவடிக்கைகளைத் தடுக்க, காவல் துறையில் ஏற்கெனவே மூன்று பிரிவுகள் உள்ள நிலையில், தீவிரவாத தடுப்புப் படையை உருவாக்க அவசியமில்லை என தமிழக அரசு தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில், வழக்கறிஞர் ஜெகன்நாத் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், "இந்தியாவின் அண்டை நாடுகளான இலங்கை, பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழல் காரணமாகவும், ஆஃப்கானிஸ்தானில் தலிபான்களின் எழுச்சி காரணமாகவும் இந்தியாவிற்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இதனால், இந்தியா மீதும் தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளது. இலங்கையுடன் கடல் எல்லையை பகிர்ந்துள்ள தமிழகத்திற்கும் இதனால் ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருந்தாலும் கூட தீவிரவாத தாக்குதல் போன்ற சமயங்களில் அதனை எதிர்கொள்ள ஒரு சிறப்பு அமைப்பு தேவை. எனவே, மற்ற மாநிலங்களைப் போல தமிழகத்திலும் தீவிரவாத தடுப்புப் பிரிவை உருவாக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும். மேலும், தமிழகத்தில் தீவிரவாத தாக்குதல்களை எதிர்கொள்ள எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவிட வேண்டும்" என்று மனுவில் கோரியிருந்தார்.

இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் கிருஷ்ணகுமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரரிடம் நீதிபதிகள், "தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீராக உள்ளது. பயங்கரவாத தாக்குதல்கள் ஏதும் இல்லை என்றும் மனுவில் கூறியுள்ள நிலையில், பயங்கரவாத தடுப்புப்படை அமைக்க கோரி வழக்கு தொடர்ந்தது ஏன்? என்று கேள்வி எழுப்பினர்.

அப்போது மனுதாரர், "தமிழகத்தில் பல்வேறு இடங்களில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பினர் கைது செய்யப்பட்டுள்ளனர். எதிர்காலத்தில் இது போன்ற தாக்குதல்கள் நடைபெறாமல் தடுக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பயங்கரவாத தடுப்புக்கு என பிரத்யேகமாக சிறப்புப் படையை அமைக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.

அப்போது, தமிழக அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம், இலங்கையிலிருந்து தாக்குதல் நடத்தக்கூடும் என்ற அச்சத்தின் அடிப்படையில் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.இது மத்திய அரசு சம்பந்தப்பட்டது.
மேலும் பயங்கரவாத நடவடிக்கைகளை தடுப்பதற்கு தமிழக காவல்துறையில் ஏற்கெனவே மூன்று பிரிவுகள் உள்ளன. எனவே புதிதாக பிரிவு எதுவும் அமைக்க வேண்டிய அவசியம் இல்லை" என்று குறிப்பிட்டார்.

இதையடுத்து, "இலங்கை தேவாலய குண்டு வெடிப்பு வழக்கு தொடர்பாக, தமிழகத்தில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பைச் சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதை சுட்டிக் காட்டிய நீதிபதிகள், இந்த மனுவுக்கு தமிழக அரசும், காவல்துறையும் 4 வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x